பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகமும், விவசாயத்திற்கான பாசன நீர் விநியோகமும் - மழை நீரை சேகரிக்கும் அணைகளை நம்பி உள்ளன. இந்தியாவின் இரு பெரும் பருவமழைகாலங்களில் பொழியும் மழை - இந்நீர் தேக்கங்களை நிரப்புகிறது. ஆனால் மழை பொய்க்கும் காலங்களில், குடிநீர் விநியோகமும், பாசன நீர் விநியோகமும் பாதிக்கப்படுகிறது.
தட்டுப்பாட்டை எதிர்கொள்ள லாரிகள் மூலம் - தற்காலிகமாக குடிநீர் விநியோகங்கள் மேற்கொள்ளப்படுவதுண்டு. இருப்பினும் நீர்தேக்கங்கள்
மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் அளவினை லாரிகள் மூலம் முழுமையாக ஈடு செய்வது சாத்தியமில்லாத காரியமாகும்.
உதாரணமாக காயல்பட்டினத்திற்கு - ஆத்தூரில் இருந்து தினசரி குடிநீர் விநியோகம் 20 லட்ச லிட்டர் அளவிலாகும். இந்த அளவே மக்களுக்கு
போதுமானதாக இல்லை. மழை பொய்த்து இந்த குடிநீர் விநியோகம் தடைப்பட்டால், இதனை ஈடு செய்ய தினசரி - 6,000 கொள்ளளவு கொண்ட சுமார் 300 லாரிகளை இயக்க வேண்டி இருக்கும்!
நிலத்தடி நீர் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து - இது போன்ற லாரிகள் நீர் சேகரிக்கும். ஆனால் முழுமையான தேவை அளவிற்கு நிலத்தடி நீரினை
பயன்படுத்த இயலாது. அருகாமையில் உள்ள மக்களின் எதிர்ப்பு, உரியப்படும் நிலத்தடி நீர் எளிதாக மீண்டும் நிலத்தடிக்குள் நிரம்பாது போன்ற
பல காரணங்களுக்காக தொடர்ந்து - நிலத்தடி நீரை நம்பி இருக்க இயலாது. இதனால் - நீர் தேக்கங்களில் உள்ள நீரினை திட்டமிட்டு, சரியான
முறையில் பயன்படுத்துவது அவசியம் ஆகிறது.
காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் ஆத்தூர் நீர் தேக்கத்திற்கு, பாபநாசம் அணையில் இருந்து நீர் வருகிறது. கடந்த ஆண்டு பருவமழைகள் பொய்த்தால், ஆத்தூரில் இருந்து வழங்கப்பட்ட நீரின் அளவு சில காலங்களுக்கு பாதியாக குறைக்கப்பட்டது. குடிநீர் தட்டுப்பாட்டை ஈடுகட்ட லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் பொருள் செலவு மட்டுமன்றி, தரமான குடிநீர் வழங்கப்படுவதும் கேள்விக்குறி. முறைகேடுகளுக்கும் பல வாய்ப்புகள் உள்ளது.
இவ்வாண்டு - தற்போது நிறைவுற்றுள்ள தென் மேற்கு பருவமழை மூலம், பாபநாசம் அணை, குறிப்பிடத்தக்க வகையில் நீர் தேக்கியுள்ளது.
பருவ மழை காலம் துவங்கிய ஜூன் 1, 2013 அன்று பாபநாசம் அணையின் நீர் மட்டம் - 48.95 அடியாக இருந்தது. பருவமழை காலம் முடிந்த
செப்டம்பர் 30, 2013 அன்று அணையின் நீர் மட்டம் 107.60. அணையின் மொத்த கொள்ளளவு 143 அடியாகும்.
இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியது - தென்மேற்கு பருவ மழை, தமிழகத்திற்கு - வடகிழக்கு பருவ மழை காலம் போன்று - முக்கிய மழை காலம் அல்ல. அப்படி இருக்க, பாபநாசம் அணை, தற்போது ஏறத்தாழ 70 சதவீதம் நிரம்பியுள்ளது மகிழ்ச்சியான விஷயம்.
பாபநாசம் அணை கடந்த மூன்று ஆண்டுகளில் - இக்காலக்கட்டத்தில் - தற்போதைய அளவிற்கு நிரம்பவில்லை.
2010
ஜூன் 1, 2010 - 58.75 அடி
செப்டம்பர் 30, 2010 - 56.80 அடி
2011
ஜூன் 1, 2011 - 24.60 அடி
செப்டம்பர் 30, 2011 - 29.05 அடி
2012
ஜூன் 1, 2012 - 26.30 அடி
செப்டம்பர் 30, 2012 - 45.13 அடி
இன்னும் இரு வாரங்களில் - வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், பாபநாசம் அணையின் நீர் நிலைமை - திருப்திகரமாக உள்ளது. கணிக்கப்பட்டுள்ள இயல்பான அளவில் வடகிழக்கு பருவமழை பெய்தால், மழை துவங்கிய சில நாட்களில் - பாபநாசம் அணை தன் முழு அளவை எட்ட வாய்ப்புள்ளது. எனவே - இவ்வாண்டு, காயல்பட்டினத்திற்கு குடிநீர் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆத்தூரில் இருந்து வழங்கப்படும் குடிநீர் - முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பது வேறு விஷயம். |