இந்தியாவின் இரண்டு முக்கிய மழை காலங்கள் - தென் மேற்கு பருவமழைக்காலம் (SOUTH WEST MONSOON) மற்றும் வடகிழக்கு பருவமழைக்காலம்
(NORTH EAST MONSOON) ஆகும். தென் மேற்கு பருவமழை - ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். வடகிழக்கு பருவமழை
அக்டோபர் முதல் டிசம்பர் வரை நீடிக்கும்.
வானிலை ஆராய்ச்சி நிலையம் - மழை பொய்த்ததா, இல்லையா என முடிவு செய்ய அளவுகோல் ஒன்றினை கையாளுகிறது. அதன்படி - சராசரியை
விட + அல்லது - 19 சதவீதம் மழை பெய்தால் அதனை சாதாரண (Normal) முடிவாக எடுத்துக்கொள்கிறது. - 20 முதல் - 59 சதவீதம் வரை
குறைவாக பெய்த மழையை, குறைப்பாடு (Deficient) என்றும், - 60 முதல் - 99 சதவீதம் வரை குறைவாக பெய்த மழையை மிகவும் குறைந்த
மழை (Scanty) என்றும் - வானிலை நிலையம் முடிவுசெய்கிறது.
இந்த அளவுகோல்படி - தமிழகம், இவ்வாண்டு இயல்பான மழையை பெற்றது. தமிழகத்தின் இயல்பு மழை அளவு 321.2 mm என
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பருவ மழை காலத்தில் பெய்த மழை அளவு 318.9 mm ஆகும். இது இயல்பைவிட 1 சதவீதம் குறைவாகும்.
இயல்பிலிருந்து 19 சதவீதம் வரையில் கூடுதல் அல்லது குறைவான மழை சாதாரண (NORMAL) மழை அளவு என வானிலை துறை வல்லுனர்களால்
கருதப்படுகிறது.
மாநிலம் முழுவதும் இயல்பான மழை என்ற நிலை இருந்தாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு நிலை இருந்தது. உதாரணமாக தூத்துக்குடி
மாவட்டத்தில் இக்காலக்கட்டத்தில் இயல்பு மழை அளவு 74.9 mm என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பருவ மழை காலத்தில் பெய்த மழை அளவு 13.8
mm ஆகும். இது இயல்பைவிட 82 சதவீதம் குறைவாகும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இக்காலக்கட்டத்தில் இயல்பு மழை அளவு 142.4 mm என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பருவ மழை காலத்தில் பெய்த
மழை அளவு 236.9 mm ஆகும். இது இயல்பைவிட 66 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டு (2012) தென் மேற்கு பருவமழை அளவு
தென் மேற்கு பருவ மழையை பொறுத்தவரை - இந்தியாவின் ஆண்டொன்றின் 75 சதவீத மழை - இக்காலக்கட்டத்தில் தான் பெய்கிறது. தமிழகம் தனது பெருவாரியான மழையை (48%), வடகிழக்கு பருவ மழை காலத்தில் பெற்றாலும், கடந்த ஆண்டு (2012) தென்
மேற்கு பருவமழை தமிழகத்தில் பொய்த்ததால் - விவசாயம் மற்றும் குடிநீர் விநியோகம்
பாதிக்கப்பட்டது.
பொய்த்த தென் மேற்கு பருவமழையை தொடர்ந்து வந்த - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட - வடகிழக்கு பருவமழையும் கடந்த ஆண்டு - பொய்த்தது.
இரு பருவ மழையும் பொய்த்ததால் இவ்வாண்டின் இயல்பான தென் மேற்கு பருவ மழை, பலதரப்பினர்க்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. மாநிலத்தில்
உள்ள ஏறத்தாழ அனைத்து நீர்தேக்கங்களிலும் நீர்வரத்து அதிகமாக இருந்தது.
அதிகாரப்பூர்வமாக தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 30 அன்று முடிவுற்ற நிலையில் - நாடு, வடகிழக்கு பருவ மழையை
எதிர்பார்த்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்த பருவமழை துவங்கிய தேதியினை காண்போம்:
2001 - அக்டோபர் 16
2002 - அக்டோபர் 25
2003 - அக்டோபர் 19
2004 - அக்டோபர் 18
2005 - அக்டோபர் 12
2006 - அக்டோபர் 19
2007 - அக்டோபர் 22
2008 - அக்டோபர் 15
2009 - அக்டோபர் 29
2010 - அக்டோபர் 29
2011 - அக்டோபர் 24
2012 - அக்டோபர் 19
வடக்கிழக்கு பருவ மழை காலம் - தென் இந்தியாவின் தென் பகுதி பெரும் மழையைப் பெறும் காலம். தமிழ்நாடு, புதுச்சேரி, ராயலசீமா மற்றும்
கடலோர ஆந்திர பகுதிகள் இந்த பருவமழை மூலம் பயனடைகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆண்டு மழையில் 48 சதவீதம் இந்தக் கால
கட்டத்தில் பெறப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் ஆண்டு மழையில் 60 சதவீதமும், உள் மாவட்டங்கள் ஆண்டு மழையில் 40 முதல் 50 சதவீதம்
வரையும் பெறுகின்றன.
உள் கர்நாடகம், கேரளா மற்றும் லச்சதீவுகள் தென் மேற்குப் பருவமழைக் காலத்தில் பெரும் மழையைப் பெற்றாலும், அக்டோபர் முதல் டிசம்பர்
வரை ஆண்டு மழையில் 20 சதவீதம் மழையைப் பெறுகின்றன.
தென்மேற்குப் பருவ மழை முடியும் தருவாயில் உள் மாவட்டங்களே கடலோர மாவட்டங்களை காட்டிலும் அதிக மழையைப் பெறும். இது பொதுவாக
மாலை இரவு நேரங்களில் நிகழும். நாட்கள் செல்லச் செல்ல, கடலோர பகுதிகளில் மழை நிகழ்வு அதிகமாகி உள் மாவட்டங்களில் குறையும். தமிழக
ஆந்திர கடற்கரைப் பகுதிகளில், அக்டோபர் மத்தியில் மழை அதிகமாவதையே வடகிழக்குப் பருவ மழைத் தொடக்க காலமாகக் கொள்ளப்படும்.
பொதுவாக இந்த மழை இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் நிகழும். அதிக மழை என்பது பொதுவாக இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை
நிகழும். பொதுவாக பின் இரவு முதல் காலை வரை மழை என்பது வடக்கிழக்குப் பருவ மழையின் குணாதிசயம்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலம் மற்றும் புயல் போன்றவை அருகாமையிலுள்ள காலங்களில் நாள் முழுவதும் தொடர் மழை
நீடிக்கும்.
வடகிழக்குப் பருவமழை என்பது தொடர்மழையாக மூன்று அல்லது நான்கு நாட்கள் நீடிக்கும். நான்கு நாட்களுக்கு மேல் தொடரும் நிகழ்வுகள் என்பது
20 சதவீதத்திற்கும் குறைவாக நடக்கும் நிகழ்வுகள் ஆகும். வறண்ட வானிலையோ / குறைந்த அல்லது மழையோ இல்லாத நீண்ட தொடர் நாட்கள்
என்பது சாதரணமாக இந்தக் காலக் கட்டங்களில் நடக்கும் நிகழ்வுதான்.
2004 ஆம் ஆண்டு முதல் 2011 வரை இயல்புக்கு அதிகமாகவே வடக்கிழக்கு பருவ மழை தமிழகத்தில் பெய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு -
தென்மேற்கு பருவமழை போல், வடகிழக்கு பருவமழையும் பொய்த்தது. ஆண்டுவாரியாக - இயல்பை விட எத்தனை சதவீதம் - அதிகமாக மழை,
கடந்த ஆண்டுகளில் பெய்தது என்பதை காண்போம்:
2004 - +1%
2005 - +79%
2006 - +15%
2007 - +21%
2008 - +31%
2009 - +13%
2010 - +42%
2011 - +23%
தமிழகத்தில் - வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் - இவ்வாண்டு சராசரியை விட கூடுதலான மழை பெய்யும் என வானிலை மையம்
கணித்துள்ளது.
கடந்த ஆண்டும் - வானிலை மையம், இயல்பான வடகிழக்கு பருவ மழை காலம் இருக்கும் என அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். |