தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரிகளில் முழு நேர வகுப்பில் பயின்று வரும் மாணாக்கர்களுக்கும், கட்டணமில்லாப் பேருந்து பயணச் சலுகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பு வருமாறு:
ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணாக்கர்கள் அனைவரும் கல்வி பயிலுவதற்கு வசதியாக திறந்தநிலை பல்கலைக்கழகம் ஒன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் முந்தைய ஆட்சிக்காலத்தில், அதாவது, 2002 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், கல்வியைத் தொடர முடியாத இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு கல்விக்கான மற்றுமொரு வாய்ப்பை அளிப்பதுடன் அவர்களது ஆளுமையின் வளர்ச்சிக்கு உதவி செய்து, சமுதாய மேம்பாட்டிற்கும், மனிதவள மேம்பாட்டிற்கும் துணை புரியக் கூடிய சமுதாயக் கல்லூரிகளை நடத்தி வருகிறது.
சமுதாயக் கல்லூரிகளின் கற்பிக்கும் முறை முற்றிலும் மாறுபட்ட புதிய கல்வி முறையாகும். இதன் மூலம் வெவ்வேறு சூழ்நிலைகளினால் பாதியிலேயே படிப்பை நிறுத்தியவர்களுக்கு தொடர்ந்து தேவைகளுக்கு ஏற்ப மேலும் படிக்கக் கூடிய வாய்ப்பை தரக்கூடிய கல்லூரிகளாகவும், மாணவ சமுதாயத்தில் பொதிந்து கிடக்கின்ற எண்ணற்ற திறமைகளையும், ஆற்றல்களையும் முழுமையாக வெளிக்கொணரக் கூடிய வகையில்
நகர்ப்புற சமுதாயக் கல்லூரிகள், கிராமப்புற சமுதாயக் கல்லூரிகள், பெண்கள் சமுதாயக் கல்லூரிகள், பழங்குடியினர் சமுதாயக் கல்லூரிகள், சிறைச்சாலை சமுதாயக் கல்லூரிகள், எய்ட்ஸ்/எச்.ஐ.வி. நோயாளிக்களுக்கான சமுதாயக் கல்லூரிகள் என ஆறு வகையான சமுதாயக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இச்சமுதாயக் கல்லூரிகள் வாயிலாக ஆடைகள் வடிவமைத்தல் பட்டயம், ‘பிளம்பிங்’ தொழில்நுட்பப் பட்டயம், வீட்டு மின்இணைப்பாளர் பட்டயம், கணினி பயன்பாட்டில் பட்டயம், வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது பார்த்தல் பட்டயம் போன்ற படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணச்சலுகை வழங்கப்படுவதைப் போல, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரிகளில் முழு நேர வகுப்பில் பயின்று வரும் மாணாக்கர்களுக்கும், கட்டணமில்லாப் பேருந்து பயணச் சலுகையினை வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக 1 கோடியே 68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் ஆணையிட்டுள்ளார்கள். இந்த பயணச் சலுகை மூலம் சுமார் 6,000 மாணாக்கர்கள் பயன்
பெறுவார்கள்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9. |