தமிழக அரசு - காயல்பட்டினம் நகராட்சியில் நவீன உயிரி எரிவாயு கூடம் (BIO-GAS PLANT) - அமல்படுத்த, கடந்த ஆண்டு அறிவிப்பு
வெளியிட்டது. தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா - சட்டப்பேரவையிலும் இவ்வாண்டு இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டார். 90 லட்ச ரூபாய் மதிப்பிலான
இந்த திட்டம் மூலம் மக்கும் குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, அதன் மூலம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தெருவிளக்குகளை
இயக்கலாம்.
இத்திட்டத்திற்கு தேவைப்படும் சுமார் 20 சென்ட் நிலமும், 2006 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருக்கும் - நகரில் அன்றாடும் உருவாகும்
குப்பைகளை கொட்டுவதற்கான இடத்திற்கு தேவைப்படும் சுமார் 5 ஏக்கர் நிலமும் கோரி - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் கடந்த ஆண்டு
ஆகஸ்ட் மாதம் பொதுமக்களிடமும், அமைப்புகளிடமும் கோரிக்கை வைத்தார்.
தேவைப்படும் இடம் வழங்குவதாக எவரும் முன் வராத காரணத்தால், வருவாய் அதிகாரிகளால் அடையாளம் காட்டப்பட்ட 4 இடங்கள் - நவம்பர் மாதம் 30 ஆம் தேதி நடைபெற்ற நகர்மன்றக்கூட்டத்தில் பரிசீலனைக்கு வைக்கப்பட்டது. அவை
காயல்பட்டினம் வட பாகம் சர்வே எண் 8 (24 ஏக்கர்), காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண் 524/1 (8.5 ஏக்கர்) (தமிழ்நாடு மாநில பனை
வெள்ள கூட்டுறவு சம்மேளனம் இடம்), காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண் 237BB/1 (22 ஏக்கர்) (மத்திய அரசின் உப்பு இலாக்கா இடம்),
காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண் 46 (13 ஏக்கர்) ஆகும்.
கூட்டத்தின் போது உறுப்பினர்கள் சிலர் - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையிடம் இடம் கோரலாம் என தெரிவித்தனர். அதனை தொடர்ந்து
- டிசம்பர் 19, 2012 அன்று - ஐக்கிய பேரவை சார்பாக, தேவைப்படும் 5 ஏக்கர் நிலத்தினை, கடையக்குடி
(கொம்புத்துறை) பகுதியில் உள்ள தனது இடத்தில இருந்து தர முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜ் வாவு செய்யத் அப்துர்ரஹ்மான் முன் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 1, 2013 அன்று பயோ காஸ் திட்டத்திற்கான இடங்களை தேர்வு செய்ய அப்போதைய மாவட்ட
ஆட்சியர் ஆசிஸ் குமார் IAS காயல்பட்டினம் வந்திருந்தார். நெடுஞ்சாலை அருகில் அமைந்திருக்கும் தமிழ்நாடு மாநில பனை வெள்ள கூட்டுறவு சம்மேளனத்தின் வசம் உள்ள - காயல்பட்டினம் தென்பாகம் சர்வே எண் 524/1
இடத்தை சென்று பார்த்தார். அவ்விடம் குறித்த விபரங்களை ஒரு வார காலத்திற்குள் தனக்கு அளிக்கும்படி தாசில்தாரிடம் மாவட்ட ஆட்சியர்
கூறினார்.
ஐக்கிய பேரவை மூலம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் தர முன் வந்த ஐந்து ஏக்கர் நிலத்தை - நேரமின்மை காரணமாக நேரடியாக பார்க்க
முடியாததால், அந்நிலம் குறித்த விளக்கங்களை தயார் செய்து தனக்கு தரும்படி அங்கிருந்த அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் கேட்டு கொண்டார்.
அதனை தொடர்ந்து முன்னாள் நகர்மன்றத் தலைவர் தர முன் வந்த இடத்தை நேரடியாக பார்வையிட வரக்கோரி உறுப்பினர்கள் சிலர் - பிப்ரவரி 4 அன்று மாவட்ட ஆட்சியரிடம் கடிதமும் வழங்கினர்.
நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில பனை வெள்ள கூட்டுறவு சம்மேளனத்தின் வசம் உள்ள காயல்பட்டினம் தென் பாகம் சர்வே எண்
524/1 (8.5 ஏக்கர்) இடத்தினை சந்தை விலையில் நகராட்சிக்கு தர தமிழ்நாடு மாநில பனை வெள்ள கூட்டுறவு சம்மேளனம் இசைவு தெரிவித்தது.
நகராட்சி ஒரு அரசு ஸ்தாபனம் என்பதால், முழு சந்தை விலைக்கு நிலம் வாங்க முடியாது என்றும், அரசு மதிப்பீட்டு தொகைக்கே நிலத்தினை
தரும்படியும் நகர்மன்றத் தலைவர் - தமிழ்நாடு மாநில பனை வெள்ள கூட்டுறவு சம்மேளனத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். இது குறித்த முடிவு
சம்மேளனத்திடம் இருந்து இதுவரை வரவில்லை என தெரிகிறது.
பயோகாஸ் திட்டம் - ஒதுக்குப்புறமாக இல்லாத இடத்தில் அமையவேண்டும் என்பதால், இத்திட்டத்திற்கு மட்டும் தேவையான சுமார் 20 சென்ட்
நிலத்தை முதலில் அடையாளம் காண, நகரில் உள்ள சில புறம்போக்கு இடங்களை பரிசீலிக்குமாறு நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - மாவட்ட
ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக - கிராம அதிகாரி அலுவலகம் அருகில் உள்ள இடம் (சர்வே எண் 625/2) உட்பட சில
இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வந்தது.
அரசு ஆவணங்கள்படி புறம்போக்கு இடங்களான சர்வே எண் 334/1&2 (34 சென்ட்), 392/5 (7.54 ஏக்கர்) ஆகியவற்றை - பயோ காஸ் திட்டம்
அமைத்திட பரிசீலனை செய்ய நகர்மன்றத் தலைவர், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து இன்று காலை 9:30
மணியளவில் மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார் IAS - காயல்பட்டினத்திற்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் மாவட்ட அளவிலான உயர்
அதிகாரிகள், நகர ஊரமைப்பு இயக்கக துணை இயக்குனர் உட்பட பலர் வந்திருந்தனர்.
பின்னர் மாவட்ட மற்றும் இதர அதிகாரிகளுடன், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற அதிகாரிகள்
இடங்களை பார்வையிட புறப்பட்டனர்.
சர்வே எண் 392/5 ஆய்வு
துவக்கமாக 18ஆம் வார்டிலுள்ள 392/5 என்ற சர்வே எண்ணைக் கொண்ட சுமார் 7.5 ஏக்கர் பரப்பளவுடைய நிலப்பகுதியை, மாவட்ட ஆட்சியர் நேரில்
பார்வையிட்டார்.
அப்பகுதியில், பல்வேறு சமூகத்தினர் இறந்தவர்களை அடக்கம் செய்தும், எரித்தும் வருவதாகவும், அதற்காக அங்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும்
என அம்மக்கள் கோரி வருவதாகவும், அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் இ.எம்.சாமி மாவட்ட ஆட்சியரிடம் கூறினார். இறந்தவர்களை அடக்கவோ,
எரிக்கவோ தேவையான இடங்களை அனைத்து மதத்தினருக்கும் ஏற்பாடுகளைச் செய்யலாம் என்று அவரிடம் கூறிய மாவட்ட ஆட்சியர், அதே
நேரத்தில் ஜாதிவாரியாக ஒவ்வொரு சமூகத்தினருக்கும் இடம் ஒதுக்குவது சாத்தியமற்றது என்றும் கூறினார்.
உயிரி எரிவாயு மையம் அமைக்க இவ்விடம் சிறந்த இடமாக இருக்கலாம் என தான் கருதுவதாலும், அரசுக்குச் சொந்தமான நிலம் இருக்கும்போது
அதைப் பயன்படுத்திட முதலில் பரிசீலிக்கலாம் என்றும் கூறிய மாவட்ட ஆட்சியர், இதற்கான உத்தரவை தான் அனுப்பி வைப்பதாக
கூறினார்.
சர்வே எண் 334 ஆய்வு
தொடர்ந்து அருணாச்சலபுரத்திலுள்ள 334/1, 334/2 ஆகிய சர்வே எண்களைக் கொண்ட நிலப்பரப்பை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார்.
இப்பகுதி அரசு புறம்போக்கு இடம் என்பதை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதிகாரப்பூர்வமாக தாங்கள் அறிந்துகொண்டதாகவும், தம் பகுதி
மக்களின் பயன்பாட்டிற்காக அவ்விடத்தை தாங்கள் அரசிடம் கேட்டுக்கொண்டிருக்க, தனியார் ஒருவர் அவ்விடத்திற்கு உரிமை கொண்டாடி
வருவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அது அரசு புறம்போக்கு இடம் என்பதற்காகக் காண்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், அரசுக்குச் சொந்தமான இடத்தை
தனியார் உரிமை கொண்டாட இயலாது என்று கூறினார்.
சர்வே எண் 278 ஆய்வு
பின்னர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மான் - 2009 ஆம் ஆண்டு காயல்பட்டினம் நகராட்சிக்கு தருவதாக கூறிய
சர்வே எண் 278 இடத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட சென்றார்.
அக்டோபர் 2009 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
இந்த சர்வே எண் CRZ பகுதிக்குள் வருவதாக முந்தைய நகர்மன்ற காலத்திலேயே நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் (DTCP) அலுவலகத்தில் இருந்து
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதே சர்வே எண் இடத்தை மீண்டும் தருவதாக ஐக்கிய பேரவை மூலம் கடந்த டிசம்பர் மாதம்
தெரிவிக்கப்பட்டது.
CRZ பகுதியில் இருந்து ஒதுங்கி (இதே சர்வே எண்ணில்) வேறு இடத்தை தருவதாக முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத்
அப்துர்ரஹ்மான் மாவட்ட ஆட்சியரிடம் இன்று தெரிவித்தார். இந்த பகுதியில் குப்பைக்கொட்டும் இடம் அமைந்தால் - நீண்ட தூரத்திற்கு புதிய சாலை அமைக்கவேண்டி
இருக்கும் என்றும், அவ்வாறு அமைக்கப்படும் சாலை சர்வே எண் 278 தவிர, பிற தனியார் சர்வே எண்களையும் தாண்டி வரும் என்றும் மாவட்ட
ஆட்சியர் தெரிவித்தார். பிற உரிமையாளர்களிடமும் பேசி இது குறித்து முடிவு தெரிவிப்பதாக - மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் நகர்மன்றத்
தலைவரால் தெரிவிக்கப்பட்டது.
கோட்டாட்சியர் தமிழ்ராஜன், திருச்செந்தூர் வட்டாட்சியர் (தாசில்தார்) நல்லசிவன், காயல்பட்டினம் தென்பாக கிராம நிர்வாக அலுவலர்
எம்.வைரமுத்து, ஆணையர் ஜி.அசோக் குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், நகர்மன்ற துணைத்தலைவர்
எஸ்.எம்.முகைதீன், நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.டி.முத்து ஹாஜரா, எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஏ.ஹைரிய்யா,
ரெங்கநாதன் என்ற சுகு, ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி உள்ளிட்டோர் இந்நிகழ்வுகளின்போது உடனிருந்தனர்.
|