மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டியின் – இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், கேரளா பொலிஸ் - மலப்புரம் அணி வெற்றி பெற்று, நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியுடன் விளையாட தகுதிபெற்றுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 08ஆம் நாளன்று துவங்கியது.
இன்றைய போட்டி இரண்டாவது அரையிறுதிப் போட்டியாகும். 16.40 மணிக்குத் துவங்கிய இப்போட்டியில் - இம்மாதம் 22ஆம் நாளன்று நடைபெற்ற நான்காவது காலிறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற - திருவனந்தபுரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணியும், இம்மாதம் 14ஆம் நாளன்று நடைபெற்ற 2ஆவது காலிறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற கேரளா பொலிஸ் - மலப்புரம் அணியும் மோதின.
இப்போட்டியில் ஈரணிகளும் பரபரப்புடன் ஆடி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தன. எனினும், கேரளா பொலிஸ் - மலப்புரம் அணி தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை அருமையாகப் பயன்படுத்தி கோலடித்தது.
அவ்வணி 2 கோல்கள் அடித்த வரை உற்சாகத்துடன் எதிர்கொண்ட திருவனந்தபுரம் அணி, 3ஆவது கோல் அடிக்கப்பட்டதும் சோர்வு கண்டது.
கேரளா பொலிஸ் - மலப்புரம் அணியின் வீரர்களான முஹம்மத் மர்ஸூக் ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்திலும், ப்ரசாந்த் 62ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். அதே அணியின் அனூப் 76 மற்றும் 79ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடிக்க, மறுமுனையில் திருவனந்தபுரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணி கோல் எதுவும் அடிக்காததால், நிறைவில் 4-0 என்ற கோல் கணக்கில் கேரளா பொலிஸ் – மலப்புரம் அணி வெற்றிபெற்று, இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
இன்றைய ஆட்டத்தின் சிறப்பு விருந்தினராக - குற்றாலம் ஃபன் லேண்ட் ரிசார்ட்ஸ் அதிபர் ஃபைரோஸ் கலந்துகொண்டார். இடைவேளையின்போது அவருக்கு சுற்றுப்போட்டிக் குழுவினரால் வரவேற்பளிக்கப்பட்டு ஈரணி வீரர்கள் மற்றும் நடுவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இன்றைய போட்டியைக் காண, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர்.
அரையிறுதிப்போட்டி வரை முன்னேறியமைக்காக, திருவனந்தபுரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணிககு சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் - குற்றாலம் ஃபான் லேண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் ரூபாய் 10 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது. ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை பணப்பரிசுக்கான காசோலையை அணியினரிடம் வழங்கினார். சுற்றுப்போட்டிக் குழு துணைச் செயலாளர் ஏ.எஸ்.புகாரீ இதன்போது உடனிருந்தார்.
நாளை இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில், இன்று வெற்றிபெற்ற கேரளா பொலிஸ் - மலப்புரம் அணியும், நேற்றைய முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும் மோதவுள்ளன.
போட்டி நிறைவடைந்த பின்னர் பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு சுழற்கோப்பையும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு அதற்கான கோப்பையும், வீரர்கள் மற்றும் நடுவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.
பரிசளிப்பு விழாவை முன்னிட்டு - ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக வழமை போல பேண்டு வாத்தியம், வான வேடிக்கை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து இரண்டாவது அரையிறுதிப் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |