காயல்பட்டினம் நகராட்சியின் தெரு விளக்கு பராமரிப்பு பணிகளை தனியார் மயமாக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரியும், காயல்பட்டினம் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்ட ஒப்பந்தப்புள்ளிகள் கோரியும் - கடந்த பிப்ரவரி மாதம் விளம்பரங்கள் வெளியிடப்பட்டன.
தெரு விளக்கு பராமரிப்புப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பித்த நிறுவனங்களுக்கு போதிய தகுதி இல்லாத காரணத்தால் - பெறப்பட்ட அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளும் நிராகரிக்கப்பட்டன. நகராட்சியின் புதிய அலுவலகக் கட்டிடம் கட்ட ஒப்பந்தப்புள்ளிகள் ஏதும் பெறப்படவில்லை.
ஏப்ரல் 01 முதல் புதிய நிதியாண்டு (2014-15) துவங்கியுள்ளது. அதனை தொடர்ந்து - நிலுவையிலுள்ள இந்த இரு பணிகளுக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரி, காயல்பட்டினம் நகராட்சி சார்பாக விளம்பரங்கள் - நாளிதழ்களில் மீண்டும் மே 16 அன்று வெளியிடப்பட்டுள்ளன. பார்க்கவும் கீழே.
இந்த நிதியாண்டிற்கு (2014-15) பொருத்தமான தொகையில் மதிப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படவில்லை. இந்த இரு விளம்பரங்களிலும், பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட விளம்பரங்களில் உள்ள மதிப்பீட்டு தொகையே (2013-14) மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே காரணத்திற்காகவே, பல முறை ஒப்பந்தப்புள்ளிகள் கோர நேர்ந்ததால், ஒரு வழிப்பாதைக்கான பணிகள் பல மாதங்கள் தாமதமாயின. கால தாமதத்தால் மதிப்பீட்டுத் தொகை உயர்ந்தது மற்றுமன்றி, சேவைகளும் பாதிக்கப்பட்டன. ஒரே பணிக்காக பல முறை நாளிதழ்களில் விளம்பரங்களும் வெளியிடப்பட்டு - மக்கள் வரிப்பணம் பெருமளவில் வீண் விரயம் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டுக்கான (2013-14) மதிப்பீடு அடிப்படையில் தற்போது கோரப்பட்டுள்ள இரு ஒப்பந்தப்புள்ளிகளின் நிலை
கேள்விக்குரியது. புதிதாக - இதே பணிக்கு மீண்டும் புதிய மதிப்பீட்டில், புதிய விளம்பரம் வெளியிடப்பவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
புதிய கட்டிடம் கட்ட வெளியிடப்பட்ட விளம்பரம், ஏற்கனவே ஒரு முறை - தேதி மாற்றப்பட்டு, திருத்தத்துடன் வெளியிடப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
இவ்வாறு - அதிகாரிகளின் தவறுகளால், ஒரே பணிக்காக பலமுறை விளம்பரங்கள் வெளியிடுவதன் மூலம் மக்கள் வரிப்பணம் வீண் விரயம் செய்யப்படுவது - நகராட்சிகளுக்கான கணக்கு தணிக்கை (AUDIT) விதிமுறைகளை மீறும் செயலாகும்.
நடப்பு ஒப்பந்தப்புள்ளிகள் கோரிக்கை மற்றும் ஒரு வழிப்பாதை சாலைப்பணிகள் ஆகியவற்றைத் தவிர - இதற்கு முன்னரும், நகராட்சியின் மூலம் வெளியிடப்பட்ட விளம்பரங்களில் உள்ள தவறுகளால், மீண்டும் - அதே பணிகளுக்கு - பலமுறை விளம்பரங்கள் வெளியிடப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளது. அவ்வாறு - மக்கள் வரிப்பணம் வீண் விரயம் செய்யப்படுவதற்கு காரணமான - அலுவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும், அந்த இழப்பு எந்த வகையிலும் நகராட்சிக்கு ஈடுகட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. |