மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டியின் – இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி பெற்று, வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 08ஆம் நாளன்று துவங்கியது.
இன்றைய போட்டி முதலாவது அரையிறுதிப் போட்டியாகும். 16.40 மணிக்குத் துவங்கிய இப்போட்டியில் - இம்மாதம் 10ஆம் நாளன்று நடைபெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற - திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணியும், இம்மாதம் 18ஆம் நாளன்று நடைபெற்ற 3ஆவது காலிறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும் மோதின.
இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் அணி எது என்பதை நிர்ணயிக்கும் அரையிறுதிப் போட்டியில் உள்ளூர் அணி விளையாடியதால், ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆரவாரமும் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்கு சாதகமாகவே அமைந்திருந்தது.
துவக்கம் முதல் இறுதி வரை ஈரணியினரும் சம பலத்துடன் விளையாடினர் என்ற போதிலும், காயல்பட்டினம் அணி வீரர்கள் தவறுதலாகக் கீழே விழுந்தால் கூட போட்டி நடுவர்களும், எதிரணி வீரர்களும் வாங்கிக் கட்டிக்கொண்டது அவர்கள் மீது பரிதாபத்தை ஏற்படுத்தியது. உள்ளூரின் இந்த மிக வலிமையான ஒட்டுமொத்த ஆதரவுக்கிடையிலும், திருவனந்தபுரம் அணியின் ஆட்டம் அனைவரின் கண்களுக்கும் விருந்து படைக்கத் தவறவில்லை.
ஆட்டம் துவங்கிய 07ஆவது நிமிடத்தில் - யாரும் எதிர்பாராத வேளையில் காயல்பட்டினம் வீரர் தீன் அற்புதமாக ஒரு கோல் அடித்து தனதணிக்கான கணக்கைத் துவக்கினார். முதல் கோலை உள்ளூர் அணி அடித்ததுமே - ஆட்ட நிறைவு நேரத்தில் வெற்றிக்குத் தேவையான ஒரு கோலை தமதூர் அணி அடித்துவிட்டதைப் போல, ரசிகர்கள் அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 25ஆவது நிமிடத்தில் திருவனந்தபுரம் அணி வீரர் ஷிபு தனதணிக்கு ஒரு கோல் அடிக்கவும் ஆரவாரம் கட்டுக்குள் வந்தது.
இரண்டாவது பாதியில் திருவனந்தபுரம் அணி வீரர் ஜான்சன் 56ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். மூன்றே நிமிடங்கள் சென்ற நிலையில் 59ஆவது நிமிடத்தில் காயல்பட்டினம் வீரர் நதீம் ஒரு கோல் அடித்து கணக்கை சமமாக்கினார்.
ஆட்டம் நிறைவடைய சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், ஈரணியினரும் இறுதிப்போட்டிக்குள் நுழையும் நோக்குடன் ஆட்டத்தில் வேகத்தை வெளிப்படுத்தினர். 75ஆவது நிமிடத்தில் காயல்பட்டினம் வீரர் தீன் மீண்டும் ஒரு கோல் அடிக்க, ஆட்ட நிறைவில் 3-2 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் இதுவரை நடைபெற்றுள்ள அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டிகளில், உள்ளூர் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவது இது இரண்டாவது முறையாகும்.
ஏற்கனவே 1976ஆம் ஆண்டில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி விளையாடி வெற்றிபெற்று, கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. எனினும் அப்போட்டியில், உள்ளூர் வீரர்கள் குறைவாகவும், வெளியூர் வீரர்கள் அதிகளவிலும் அந்த அணிக்காக விளையாடியதால், “இந்தக் கோப்பை மதுரைக்குச் சொந்தமானது” என ஆர்வலர்கள் கேலியாக தமக்குள் பேசிக்கொள்ளும் நிலை இருந்ததாகவும், தற்போது கோப்பையை முழுமையாக தனதாக்கிக்கொள்ள வாய்ப்புகள் வெளிச்சமாக உள்ளதாகவும் நெடுநாள் கால்பந்து ஆர்வலர்கள் கூறியமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியைக் காண, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர். உள்ளூர் அணி விளையாடிய போட்டியை ரசிப்பதற்காக பாண்டு வாத்திய ஏற்பாடுகளுடன் பார்வையாளர்கள் பெருந்திரளாகக் குழுமியிருந்தனர். விதவிதமான வாத்திய முழக்கங்களுக்கிடையே ஆடிப்பாடி ரசிகர்கள் தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
அவ்வப்போது நெஞ்சை அதிர வைக்கும் பட்டாசு வெடிச்சத்தமும் கேட்டது. மைதானத்திற்குள் புகைமூட்டமும் காணப்பட்டது. ஆட்ட இடைவேளையின்போது, ஒலிவாங்கியில் பேசிய ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை, நடுவர்கள் ஊதும் விசில் போன்ற ஒலியில் யாரும் விசிலடிக்க வேண்டாம் என்றும், வீரர்களின் கவனத்தைச் சிதறச் செய்யும் என்பதால் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ள, ரசிகர்கள் அதற்கு முழுமையாகக் கட்டுப்பட்டனர்.
இன்றைய அரையிறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்ததன் மூலம் இச்சுற்றுப்போட்டியில் 3ஆம் இடத்தைப் பெற்றமைக்காக, திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணிக்கு சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் - காயல்பட்டினம் பி.எச்.எம்.ரெஸ்டாரெண்ட் அனுசரணையில் ரூபாய் 10 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது.
ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை பணப்பரிசுக்கான காசோலையை அணியினரிடம் வழங்கினார்.
பி.எச்.எம்.ரெஸ்டாரெண்ட் அதிபர் பிரபு ஹபீப் முஹம்மத், சுற்றுப்போட்டிக் குழு துணைச் செயலாளர் ஏ.எஸ்.புகாரீ, ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகளான டாக்டர் செய்யித் அஹ்மத், எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா உள்ளிட்டோர் இதன்போது உடனிருந்தனர்.
நாளை இச்சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியாகும். இதில், நேற்று (மே 22) நடைபெற்ற நான்காவது காலிறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற - திருவனந்தபுரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணியும், இம்மாதம் 14ஆம் நாளன்று நடைபெற்ற 2ஆவது காலிறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற கேரளா பொலிஸ் - மலப்புரம் அணியும் மோதுகின்றன.
போட்டி நிரல் வருமாறு:-
மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து முதலாவது அரையிறுதிப் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |