தமிழகத்தில் தற்போது வடக் கிழக்கு பருவ மழையினால் பரவலாக மழை பெய்து வருகிறது. மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சீர்படுத்த, உள்ளாட்சி மன்றங்களில் அலுவலர்கள் குழு அமைத்து செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
மழைநீர் பாதிப்பு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள அவசர கால தொலைபேசி எண்கள் மற்றும் முக்கிய அலுவலர்களின் தொலைபேசி எண்கள், பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம்,
நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு எஸ்.பி.வேலுமணி அவர்கள் அக்டோபர் 20 அன்று வடகிழக்குப் பருவமழை
தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச்செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டத்தில், தமிழகத்தில் பெய்த மழையின் அளவு குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளில் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும்
கேட்டறிந்தார்கள்.
மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் உள்ள நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கைகள் எடுக்கவும், பாதிக்கப்பட்ட சாலைகளை
சீரமைக்கவும், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை உடனடியாக அகற்றவும், சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அகற்றி
போக்குவரத்தைச் சீர் செய்யவும் உள்ளாட்சி அமைப்புகளில் அலுவலர்கள் குழுவை அமைத்து போர்க்கால அடிப்படையில் உடனடி நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள்.
மழையின் காரணமாக காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவாமல் இருக்க கொசு மருந்துகள் தெளித்தல் போன்ற நடவடிக்கைகயை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும், மழைநீர் பாதிப்பு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ள அவசர கால தொலைபேசி எண்கள் மற்றும் முக்கிய அலுவலர்களின் தொலைபேசி எண்கள், பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்கள்.
மழையின் காரணமாக குளங்கள், ஏரிகள் மற்றும் இதர நீர்நிலைகளில் உடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை
எடுக்குமாறும், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து மின்சாரம் மற்றும் குடிநீர் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும்
கேட்டுக்கொண்டார்கள்.
இக்கூட்டத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் திரு. க.பணீந்திர ரெட்டி,இ.ஆ.ப., சென்னை
மாநகராட்சி ஆணையர் திரு விக்ரம் கபூர்,இ,ஆ.ப., நகராட்சி நிருவாக ஆணையர் திரு. சந்திரகாந்த் பி.காம்ப்ளே,இ.ஆ.ப., பேரூராட்சிகள் துறை
இயக்குநர் திரு. ராஜேந்திர ரத்னு,இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.சா.விஜயராஜ்குமார்,இ.ஆ.ப.,
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் பி.சந்திரமோகன்,இ.ஆ.ப., மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9. |