காயல்பட்டினத்தில் நேற்று (அக்டோபர் 20 திங்கட்கிழமையன்று) 21.00 மணி துவங்கி, இன்று நண்பகல் 11.30 மணி வரை தொடர்மழை பெய்தது. இன்று காலை 08.30 மணி துவங்கி, 09.30 மணி வரை - கண்ணைப் பறிக்கும் மின்னல் ஒளியும், பேரிடி முழக்கமும் அனைவருக்கும் அச்சத்தை உண்டாக்கின.
நகரின் அனைத்துப் பகுதிகளிலும் மழை நீர் தேங்கி, வழிந்தோடிக்கொண்டிருக்கிறது.
காயல்பட்டினம் காட்டு தைக்கா தெரு, கற்புடையார்பள்ளி வட்டம் (சிங்கித்துறை), சுலைமான் நகர் (மாட்டுக்குளம்) உள்ளிட்ட பகுதிகளில் குடிசைகள் மழை நீர்த் தேக்கத்தில் மூழ்கியுள்ளன. இன்றிரவு உறங்க வழி தெரியாமல் அப்பகுதி மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், வழமைக்கு மாற்றமாக - இடைவெளியின்றி மழைநீர் தொடர்ச்சியாக வழிந்தோடிக்கொண்டிருந்தது.
குருவித்துறைப் பள்ளி மையவாடியில் பெருங்குளம் போலத் தேங்கியுள்ள மழை நீர் வெளிச்செல்ல வழியின்றி முடங்கியிருந்தது கண்டு, அப்பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தினர் இணைந்து, கோட்டைச் சுவரில் துளையிட்டு, தண்ணீரை வெளியேறச் செய்தனர்.
அங்கிருந்து கீரிக்குளம் வழியே கடலுக்குச் செல்ல வேண்டிய மழைநீர் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பின்புறத்தில் முடங்கியது கண்ட சில சமூக ஆர்வலர்கள், அங்குள்ள பாதை அடைப்பை உடைத்தகற்றி, நீர் வழிந்தோடச் செய்தனர்.
கொச்சியார் தெருவில் முழங்கால் அளவுக்கும், அத்தெருவுக்குப் பின்புறமுள்ள சாலையில் இடுப்பளவுக்கும் தண்ணீர் தேங்கியிருப்பதால், அப்பகுதி மக்கள் வீட்டுச் சிறைக்குள் அடைபட்டுள்ளது போல பரிதவித்துள்ளனர்.
இத்தனை கவலைகளும் விபரமறிந்த பெரியவர்களுக்குத்தான்; விளையாட்டுப் பருவம் கொண்ட எங்களுக்கல்ல என்று கூறும் வகையில், கொச்சியார் தெருவில் தேங்கியுள்ள மழை நீரில் சிறுவர் - சிறுமியர் உற்சாகக் குளியலில் ஈடுபட்டனர்.
பொதுவாக மழை நீர் தேங்கும் பகுதிகளெல்லாம் குடியிருப்புகளாக மாறிப்போனாலும், தண்ணீர் தன் தடத்தை மாற்றாது என்ற முதுமொழிக்கேற்ப, வேகமாக வழிந்தோடும் மழை நீர், காயல்பட்டினம் கீரிக்குளம் வழியாகவும், ஓடக்கரை வழியாகவும் கடலில் கலந்துகொண்டிருக்கிறது. கீரிக்குளத்தில் வழிந்தோடும் நீரில் ‘பிள்ளைகள் சகிதம்’ சிலர் குளித்துக் குதூகலித்துக்கொண்டிருந்தனர்.
நண்பகலில் மழை ஓய்ந்த நிலையில், இன்று 17.30 மணி துவங்கி மழை விட்டு விட்டுப் பெய்தவண்ணம் உள்ளது. 20.15 மணி நிலவரப்படி, மழை சற்று ஓய்ந்துள்ளது.
படங்களில் உதவி:
‘கோமான்’ கரீம்
S.J.மஹ்மூதுல் ஹஸன்
மவ்லவீ சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் மஹ்ழரீ (SYSSAHIB)
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |