காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளின் சார்பில், வழமை போல இவ்வாண்டும் 05.09.2015 சனிக்கிழமையன்று, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவியரை - 2015” நிகழ்ச்சிகள் காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடத்தப்பட்டன.
கலந்துரையாடல் நிகழ்ச்சி:
அன்று காலையில் சாதனை மாணவியரான - திருப்பூர் விகாஷ் வித்யாலயா மேனிலைப்பள்ளியில் பயின்ற ஜெ.பவித்ரா, கோயமுத்தூர் சவுடேஷ்வரி வித்யாலயா மேனிலைப்பள்ளியில் பயின்ற எல்.பி.நிவேதா ஆகியோருடன், காயல்பட்டினம் நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்ளான வாவு எஸ்.அப்துல் கஃப்பார் தலைமை தாங்க, ஜெஸ்மின் ஏ.கே.கலீல், எம்.ஏ.எஸ்.ஜரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் சாதனை மாணவியர் குறித்து அறிமுகவுரையாற்றினார். பின்னர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. தம் பெற்றோருடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில சாதனை மாணவியருடன் எம்.ஜெ.ஹபீபுர்ரஹ்மான் கலந்துரையாடினார். மாணவ-மாணவியரின் கேள்விகளுக்கும் சாதனை மாணவியர் விடையளித்தனர்.
தமது பூர்விகம், துவக்கக் கல்வி, மேனிலைக் கல்வி, வணிகவியல் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம், மாநில சாதனை மாணவியராக அறிவிக்கப்பட்ட பின்னர் கலந்துகொண்ட - தமிழக முதல்வர் உட்பட பல்வேறு தரப்பினரின் பாராட்டு நிகழ்ச்சிகள் குறித்து அவர்கள் தகவல்களை வழங்கினர். மாநில சாதனை மதிப்பெண் என்பது எட்டாக்கனியல்ல என்றும், மனதை ஓர்மைப்படுத்தி முயற்சித்தால் யாருக்கும் அது கைகூடும் என்றும் அவர்கள் கூறினர்.
பரிசளிப்பு விழா:
அன்று 19.00 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஜெஸ்மின் ஏ.கே.கலீல், வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், எம்.ஏ.எஸ்.ஜரூக், மக்கள் தொடர்பாளர் என்.எஸ்.இ.மஹ்மூது, எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் முஹம்மத் ஆயிஷா, ஜுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மு.ஜெஸீமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
மாணவர் ஹாஃபிழ் ஃபரீதுத்தீன் கிராஅத் ஓதினார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வரவேற்புரையாற்றினார்.
விழாவிற்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையுரையாற்றினார்.
சாதனை மாநில - நகர சாதனை மாணவ-மாணவியரைப் பாராட்டிப் பேசிய அவர், காயல்பட்டினம் கடற்கரை இளம்பருவத்திலுள்ள மாணவர்கள் சமூகச் சீரழிவில் திளைப்பதற்குக் களமாகிவிடுமோ என்று அச்சப்படுவதாகவும், தனிக்கவனம் செலுத்தி கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுவதாகவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னிஸ் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மாணவ சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்தரத்தக்க இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும், இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்த அமைப்பினரைப் பாராட்டியும் பேசிய அவர், மாணவர்களின் நல்ல எதிர்காலம் அவர்களது ஆசிரியர்கள் கைகளிலேயே உள்ளதாகவும், அதை மனதிற்கொண்டு அவர்கள் செயலாற்றி, நாட்டை வளமான பாதையில் வழிநடத்த மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அவருக்கு, இக்ராஃவின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் கே.ஏ.ஆர்.செய்யித் என்ற டைமண்ட் செய்யித் நினைவுப் பரிசு வழங்கினார்.
பின்னர், சாதனை மாணவியருக்கு - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் சார்பில் 10 ஆயிரம் ரூபாய் பணப்பரிசு, சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினத்திலிருந்து 10, 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளை எழுதி பல்வேறு சிறப்பிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கும் பணப்பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன், நகரின் சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. [பரிசளிப்பு குறித்த விரிவான தகவல்கள் விரைவில் செய்தியாக வெளியிடப்படும்.]
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்கள், நகரப் பிரமுகர்கள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் பரிசுகளை மாணவ-மாணவியருக்கு வழங்கினர்.
இவ்விழாவின் இணையனுசரணையாளர்களுள் ஒருவரான முள்ளக்காடு சாண்டி பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவர் எஸ்.பீ.சாண்டி வாழ்த்துரையாற்றினார்.
இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் நன்றி கூற, துஆ பிரார்த்தனையைத் தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது. காயல்பட்டினம் நகரிலுள்ள அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவ-மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் இந்நிகழ்ச்சிகளில் திரளாகக் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருங்கிணைப்பில், அதன் பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான், அதன் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், பி.ஏ.புகாரீ, சமூக ஆர்வலர்களான ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.ஈஸா ஜக்கரிய்யா, ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ உட்பட பலர் செய்திருந்தனர்.
படங்கள்:
‘வீனஸ் ஸ்டூடியோ’
கடந்தாண்டு (2014) நடைபெற்ற ”சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014” நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |