நிராதரவான நிலையில் இறந்த இளைஞரின் உடல், 19 மணி நேர அலைச்சலுக்குப் பின், ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவைச் சேர்ந்த காஜா என்பவரின் மகன் திவான்ஷா (வயது 37). கூலித் தொழிலாளியான இவர் தூத்துக்குடி மாவட்டம் - தருவைக்குளம் அஞ்சல் பட்டினமருதூர் எனும் ஊரைச் சேர்ந்த கஸ்ஸாலி மரைக்கார் என்பவரின் மகள் பீர் நிசா (வயது 27) என்பவரைத் திருமணம் செய்திருந்தார். தகராறு காரணமாக, கணவன் - மனைவி இருவரும் சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அருகிலுள்ள கரிசல்குளம் என்ற ஊரில் திவான்ஷா வசித்து வந்துள்ளார். காசநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், 08.09.2015 செவ்வாய்க்கிழமையன்று 14.00 மணியளவில், அங்குள்ள கோயில் அருகில் இறந்து கிடந்ததாகவும், அருகிலிருந்தோர் அவரது உடலைச் சோதித்துப் பார்த்ததில், அவர் முஸ்லிம் இளைஞர் என்பதை அறிந்துகொண்டு, அங்குள்ள மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் இறந்தவரின் உடமைகளைச் சோதித்ததில், அவரது சட்டைப்பையிலிருந்த தாளில் காயல்பட்டினம் முகவரி இருந்ததைக் கண்ணுற்று, தமது அமைப்பின் மருத்துவ ஊர்தியில் (ஆம்புலன்ஸ்) உடலை காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் சேர்த்தனர்.
பெரிய குத்பா பள்ளியில் அவரை அடக்குவதற்காக மண்ணறை தோண்டப்பட்டிருந்தது. சமூக ஆர்வலர்கள் துணையுடன் அவரது உடல் குளிப்பாட்டப்பட்டு, அடக்க ஆயத்தம் செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி வீட்டார் திடீரென அங்கு வந்து ரகளையில் ஈடுபட்டதாகவும், பிரேத பரிசோதனை செய்ய வலியுறுத்தியதாகவும், அதன் தொடர்ச்சியாக உடல் பிரேத பரிசோதனைக்காக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் கிளை ஆம்புலன்ஸ் வாகனத்தில் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அங்கு போதிய வசதிகள் இல்லாததால் தூத்துக்குடியில் பிரேத பரிசோதனை செய்யுமாறு மருத்துவமனையிலிருந்து தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில்தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மருத்துவமனை வளாகத்தில் பிணத்தை வைத்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகவும் நகர தமுமுகவினர் கூறியதாகவும், அதன் தொடர்ச்சியாக, இன்று 16.00 மணியளவில் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தனை சர்ச்சைகள் நடந்துவிட்டதால், சட்டச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, பெரிய குத்பா பள்ளியில் தோண்டப்பட்டிருந்த மண்ணறை நல்லடக்கம் செய்யப்படாமலேயே மூடப்பட்டது.
பின்னர், இறந்தவரின் உடலை காயல்பட்டினத்தில் அடக்கம் செய்வதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று அவரது மனைவி தரப்பில் எழுதிக் கொடுக்கப்பட்டதாகவும், அடக்கம் செய்வதில் சட்டச்சிக்கல் எதுவுமில்லை என ஆறுமுகநேரி காவல்துறை சார்பிலும் அத்தாட்சி பெறப்பட்டதாகவும், நகர தமுமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த ஆவணங்களுடன், உடலை அடக்கம் செய்வதற்காக காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் - நகர தமுமுக சார்பில் அனுமதி கோரப்பட, இறந்தவர் தமது ஜமாஅத்தைச் சார்ந்தவர்தான் என்றும், உடலை வேறு பள்ளியில் நல்லடக்கம் செய்ய ஆட்சேபணை இல்லை என்றும் பெரிய குத்பா பள்ளி நிர்வாகத்திடமிருந்து கடிதம் பெற்று வந்து அடக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தைப் பெறுவதற்காக நகர தமுமுக சார்பில், இறந்தவரின் உடலைத் தாங்கிய ஆம்புலன்ஸுடன், பெரிய குத்பா பள்ளி நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நடந்த நிகழ்வுகளைக் கருத்திற்கொண்டு, கடிதம் கொடுப்பதில் பள்ளி நிர்வாகம் தயக்கம் காண்பித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பெரிய குத்பா பள்ளி ஜமாஅத் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர், “அண்மையில் தீ விபத்தில் கருகி இறந்த கணவன் - மனைவி இருவரும் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றபோதிலும், சட்டச்சிக்கல்கள் இல்லாதிருந்ததால் பெருந்தன்மையுடன் பெரிய குத்பா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது... அதுபோல, இந்த மய்யித்தையும் அடக்குவதற்காக மண்ணறையும் தோண்டப்பட்டு, அடக்கச் செய்தி பள்ளிவாசல்களில் அறிவிப்பும் செய்யப்பட்டுவிட்ட நிலையில், நிகழ்ந்துவிட்ட சர்ச்சைகளால் நிர்வாகம் தயக்கம் காட்டியது...” என்றார்.
இதனிடையே, “இறந்து பல மணி நேரம் ஆகியும் இதுவரை அடக்கம் செய்யப்படாததால் உடல் துர்வாடை வீசத் துவங்கியுள்ளது... பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கடிதம் தரப்படாவிட்டால், இறந்தவரின் உடலை பள்ளிவாசல் முன்பு வைத்துவிட்டுச் சென்றுவிடுவோம்” என தமுமுக சார்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சர்ச்சை காரணமாக, சிறிய குத்பா பள்ளியருகில் மக்கள் திரளவே, அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நீண்ட விவாதங்களுக்குப் பின் இன்று 20.45 மணியளவில், பெரிய குத்பா பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஆட்சேபணையில்லை என்பதற்கான கடிதம் வழங்கப்பட்டதையடுத்து, 19 மணி நேர அலைச்சலுக்குப் பின், இன்று 21.00 மணியளவில், ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளியில் தொழுகை நடத்தப்பட்டு, அங்குள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்கத்தில், காயல்பட்டினம் தமுமுக - மமக நிர்வாகிகள், அங்கத்தினர், நகர பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தகவல்களில் உதவி:
A.காதர்
(துணைச் செயலாளர் - தமுமுக காயல்பட்டினம் நகர கிளை)
தமுமுக / மமக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |