நிராதரவான நிலையில் இறந்த இளைஞரின் உடல், 19 மணி நேர அலைச்சலுக்குப் பின் நல்லடக்கம் செய்யப்பட்ட செய்தியை காயல்பட்டணம்.காம் வெளியிட்டிருந்தது.
இது தொடர்பாக விடுபட்ட தகவல்கள் மற்றும் கூடுதல் விபரங்களை, இந்நிகழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை பின்வருமாறு சுருக்கமாகத் தெரிவித்துள்ளார்:-
பேட்டையில் இறந்த திவான்ஷாவின் உடல், மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் அமைப்பின் சார்பில் காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - இறந்த திவான்ஷாவின் சகோதரி வாடகைக்கு குடியிருந்த வீட்டில், 09.09.2015 நள்ளிரவு 02.00 மணியளவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவ்வமைப்பின் சேவை அணி செயலாளர் யு.ஜெய்லானியும், மற்றொருவரும் - காயல்பட்டினத்திலுள்ள ஆண்களைச் சந்தித்து தகவல் தெரிவிப்பதற்காக அதிகாலை வரை காத்திருந்தனர்.
உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு அருகிலுள்ள அஹ்மத் நெய்னார் பள்ளியில் ஃபஜ்ர் தொழுகை நிறைவுற்றதும் அவர்கள் எங்களை அணுகி விபரம் கூறி, புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
பின்னர், இறந்தவரின் சகோதரியைச் சந்தித்து இதுகுறித்து விசாரித்தபோது, உடலை அடக்குவதற்கான செலவுகளைச் சந்திக்க போதிய பொருளாதார வசதி தங்களிடம் இல்லையெனவும், குடும்பத்தார் யாரின் ஆதரவும் இல்லை என்றும் தெரிவித்ததையடுத்து, சமூக ஆர்வலர்கள் சிலருடன் இணைந்து நமதூர் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்வதற்காக, பள்ளி நிர்வாகத்தை அணுகினோம்.
சட்டச்சிக்கல்கள் எதுவுமில்லையெனில் தாராளமாக அடக்கம் செய்யலாம் என்றும், அடக்கம் செய்ய ஆட்சேபனையில்லை என இறந்தவரின் குடும்பத்தாரிடமிருந்து ஒரு கடிதம் மட்டும் பெற்றுத் தருமாறும் கூறியதையடுத்து, அதற்கான வேலையில் இறங்கினோம்.
இதற்கிடையே, உடல் பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது குறித்து பள்ளிவாசல்களில் அறிவிப்பும் செய்யப்பட்டுவிட்டது. உடலைக் குளிப்பாட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன.
இவ்வாறிருக்க, அன்று காலை 09.00 மணியளவில், இறந்த திவான்ஷாவின் மனைவி பீர் நிசா மற்றும் குடும்பத்தினர் தம் சொந்த ஊரான பட்டினமருதூரிலிருந்து காயல்பட்டினம் வந்து சேர்ந்தனர். தன் கணவரைக் காணவில்லை என திவான்ஷாவின் மனைவி காவல்துறையிடம் ஏற்கனவே புகார் அளித்திருந்தார்.
இதைக் கருத்திற்கொண்டு, அவரிடம் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய ஆறுமுகநேரி காவல்துறையினர், காணவில்லை என புகார் தரப்பட்ட இளைஞரின் உடல் இறந்த நிலையில் தற்போது பெறப்பட்டுள்ளது என்றும், இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளதா என்றும் கேட்க, அவரது மனைவி பீர் நிசாவும், குடும்பத்தினரும் தங்களுக்கு மரணத்தில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று அனைவர் முன்னிலையிலும் கூறிவிட்டனர்.
அப்படியானால், பிரேத பரிசோதனைக்கு அவசியமில்லை என்றும், ஜமாஅத் ஒத்துழைப்புடன் முறைப்படி நல்லடக்கம் செய்துகொள்ளலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துவிட்ட நிலையில் குறுக்கிட்ட அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர், “எங்களுக்கு இன்னின்ன சீதனப் பொருட்களை அவர் தர வேண்டியதுள்ளது... அவற்றைப் பெற்றுத் தர வேண்டும்” என்று கூறினர். இதைக் கேட்ட காவல்துறையினர், “கணவரைக் காணவில்லை என புகார் தந்தீர்கள்... அவர் இறந்த நிலையில் கிடைத்துவிட்டார்... மரணத்தில் சந்தேகமில்லை என்றும் கூறிவிட்டீர்கள்... இவ்வாறிருக்க, சீதனப் பொருட்களைத் தர வேண்டும் என்ற உங்களது கோரிக்கை எங்களுக்கு அவசியமற்றது...” என்று கூறிவிட்டனர்.
இவ்வாறு விவாதம் சென்றுகொண்டிருக்க, பெரிய குத்பா பள்ளியில் கேட்ட படி - உடலை நல்லடக்கம் செய்திட சம்மதம் தெரிவித்து - இறந்தவரின் மனைவி கையெழுத்திட்டு கடிதம் தராத காரணத்தால், தோண்டப்பட்ட மண்ணறை மூடப்பட்டது.
பொதுமக்களும், சமூக ஆர்வலர்களுமான நாங்கள் ஒன்றுசேர்ந்து, பிரேத பரிசோதனைக்கு இடமளிக்காத நிலையில், சட்டத்திற்குட்பட்டு உடலை நல்லடக்கம் செய்ய அனைத்து முயற்சிகளையும் முன்னின்று மேற்கொண்டோம். எனினும், இறந்தவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டதோடு மட்டுமின்றி, எங்களைப் பார்த்து, “இந்த மய்யித்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்... யாரும் கவலைப்படத் தேவையில்லை” என்றும் கூறிய காரணத்தால் அதற்குப் பிறகு எங்களால் தலையிட இயலவில்லை. இதுவே உண்மை. எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்.
இவ்வாறு சமூக ஆர்வலர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை தெரிவித்துள்ளார். |