தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு காணும் தாய்மாருக்கு, “அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்” வழங்கப்படும் என சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அண்மையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் “அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் - Amma Baby Care Kit” வழங்கும் விழா இன்று (செப்டம்பர் 12) காலை 11.00 மணியளவில், மருத்துவமனை வெளி வளாகத்தில் நடைபெற்றது.
தலைமை மருத்துவர் டாக்டர் ராணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, அரசு மருத்துவமனையில் மகப்பேறு கண்ட காயல்பட்டினம் கீழ லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த லட்சுமி, கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியைச் சேர்ந்த பென்சிலா ஆகிய தாய்மாருக்கு, “அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்” வழங்கினார்.
புதிதாய்ப் பிறந்த குழந்தைகளுக்கான பராமரிப்புத் துண்டு, உடை, படுக்கை, கொசு வலை, நேப்கின் - துப்புரவுத் துண்டு, எண்ணெய், ஷாம்பூ, சோப்பு வகைகள், கை கழுவும் திரவம், சோப்பு பெட்டி, நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சவுபாக்கியா சுண்டி லேகியம், இப்பொருட்கள் அனைத்தையும் வைத்துக்கொள்ள பெட்டி ஆகியன இப்பரிசுப் பொதியில் அடக்கம்.
அரசு மருத்துவமனை பல் மருத்துவர், மருந்தாளுநர் ஸ்டீஃபன் மற்றும் செவிலியரும், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால், 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோரும், அதிமுக காயல்பட்டினம் நகர கிளை துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதிர், அதன் நகர நிர்வாகிகளான எஸ்.ஏ.முகைதீன், செந்தமிழ்ச்செல்வன், புரட்சி சங்கர், செல்வராஜ், இல்யாஸ், புகாரீ ஸலீம் உள்ளிட்டோரும், அரசு மருத்துவமனையின் புற நோயாளிகள் மற்றும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.
அரசு மருத்துவமனை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |