நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக காவல்துறையினர் விதிமுறை அறிவித்துள்ளனர். விபரம் வருமாறு:-
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில் 19.09.2015 சனிக்கிழமையன்று, ஆறுமுகநேரியிலிருந்து 108 விநாயகர் சிலைகள் ஊர்வலம் காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூருக்கு செல்கிறது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. கோபால் தலைமையில் நடைபெற்றது. ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட இந்து முன்னணி செயலாளர் எம்.கசமுத்து, திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் கே.ஜெயசிங், வடக்கு ஒன்றிய தலைவர் ஜி.ராமசாமி, செயலாளர் ஜெகன், நகர தலைவர் சோ;மத்துரை, பொதுச் செயலாளர் மணிகண்டன், செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், ஜெகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
>>> ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் இருந்து விநாயகர் ஊர்வலம் புறப்பட்டு, காயல்பட்டினம் மகாத்மா காந்தி வளைவு, விசாலாட்சி அம்மன் கோவில் தெரு, பூந்தோட்டம், ஓடக்கரை வழியாக திருச்செந்தூர் நாழிக்கிணறு கடற்கரைக்கு செல்ல வேண்டும்...
>>> ஊர்வலப் பாதையில் பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களுக்கு இடைஞ்சல் செய்யக் கூடாது...
>>> பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக கோஷம் எழுப்பகூடாது...
உள்ளிட்ட விதி முறைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து காயல்பட்டினம் முஸ்லிம் பிரமுகர்களுக்கான ஆலோசனைக் கூட்டமும் நடந்தது.
>>> விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையில் உள்ள காயல்பட்டினம் செய்யது ஹூஸைன் பள்ளிவாசல் மற்றும் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் யாரும் கூட்டமாக இருக்கக் கூடாது...
>>> ஊர்வலம் செல்லும்போது பிரச்சினைக்குறிய எவ்வித கோஷம் எழுப்பவோ, சைகை காட்டவோ கூடாது...
என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் காயல்பட்டினம் நகர காங்கிரஸ் தலைவர் கமால், முஸ்லிம் லீக் மாவட்டத் துணை தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், செய்தி தொடர்பாளர் ஷேக் முகம்மது, நகர செயலாளர் அபூசாலிஹ், த.மு.மு.க. மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது, நகர செயலாளர் ஆஸாத், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் முர்ஷித் முஹ்சின், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நகர தலைவர் சம்சுதீன், செய்யது ஹுஸைன் பள்ளியின் தலைவர் அலீ அக்பர், பொருளாளர் இஸ்மத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல் & படம்:
ச.பார்த்திபன்
கடந்தாண்டு விநாயர் சதுர்த்தி தொடர்பாக காவல்துறையால் நடத்தப்பட்ட கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு நடைபெற்ற விநாயர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |