நகர்மன்றக் கூட்டம்:
காயல்பட்டினம் நகராட்சியில், இன்று (செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை) மதியம், ஒற்றைப் பொருளை முன்வைத்து நடத்தப்பட்ட நகர்மன்றக் கூட்டத்தின் நிறைவில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் முனையிலிருந்து, கடற்கரை வரையிலான ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், பேவர் ப்ளாக் கற்களைக் கொண்டு, ரூபாய் 46 லட்சம் செலவு மதிப்பீட்டில் புதிய சாலை அமைத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பங்கேற்றோர்:
இன்று 15.30 மணியளவில் துவங்கிய இக்கூட்டத்திற்கு, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை தாங்கினார். ஆணையர் ம.காந்திராஜன் முன்னிலை வகித்தார். 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டீ.பீவி ஃபாத்திமா தவிர இதர 17 உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டப் பொருள்:
துவக்கமாக அனைவரையும் வரவேற்றுப் பேசிய அவர், பின்வருமாறு கூட்டப் பொருளை வாசித்தார்.
பின்னர் கருத்துக் கூறிய நகர்மன்றத் தலைவர், அதிகளவில் வாகனப் போக்குவரத்துள்ள ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் தரமான தார் சாலை அமைத்தால்தான், அது நீண்ட காலத்திற்குப் பிரச்சினையின்றி தாக்குப் பிடிக்கும் என்றும், எனவே தனது இக்கருத்தை ‘நகர்மன்றத் தலைவர் குறிப்பு’ என்று பதிவு செய்வதாகவும், என்றாலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பமே தீர்மானமாகும் என்றும் கூறினார்.
தீர்மானம் நிறைவேற்றம்:
அடுத்து பேசிய 11ஆவது வார்டு உறுப்பினரும் - நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், நகர்மன்றத் தலைவர் குறிப்பை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக மினிட் புத்தகத்தில் எழுத வேண்டும் என்று கூறினார். அதை பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரித்தனர்.
நிறைவில், நகர்மன்றத் தலைவர் குறிப்பு நிராகரிக்கப்பட்டு, ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் பேவர் ப்ளாக் கற்களைக் கொண்டு, 46 லட்சம் ரூபாய் செலவில் புதிய சாலை அமைக்கவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை விரைவாக வெளியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத் துளிகள்......
ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளதாலும், கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்வதாலும், அங்கு தரமான தார் சாலை அமைத்திட தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும், பேவர் ப்ளாக் சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் கூறினர்.
“அப்படியானால், 07ஆவது வார்டில் நிறைவேற்றப்படவுள்ள பேவர் ப்ளாக் சாலையை நிறுத்தி விடலாம்... ஏனெனில், அது அந்த வார்டு உறுப்பினருக்குப் பிடிக்காது அல்லவா?” என்று 12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு கேள்வியெழுப்பினார். 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் உள்ளிட்டோர் அவரது கருத்தை ஆதரித்துப் பேசினர்.
சில நிமிடங்களுக்குப் பின் எழுந்து பேசிய உறுப்பினர் ஜெ.அந்தோணி, ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் பேவர் ப்ளாக் கற்கள் கொண்டு புதிய சாலை அமைப்பதற்கு தானும் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். இதனால், இக்கூட்டத்தில் கலந்துகொண்ட 17 உறுப்பினர்களில், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் தவிர்த்து இதர உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன், பேவர் ப்ளாக் சாலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகராட்சி பொறியாளர் சிவக்குமார் மற்றும் சில அலுவலர்களும் இக்கூட்டத்தின்போது உடனிருந்தனர். கூட்டத்தின் முழு அசைபடப்பதிவைக் காண, கீழ்க்காணும் படத்தின் மீது சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சியில் இதற்கு முன் நடைபெற்ற கூட்டம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |