DCW தொழிற்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, தேசிய பசுமை
தீர்ப்பாயத்தில் செப்டம்பர் 3 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி
தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA
சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மே 26, 2014 அன்று தீர்ப்பாயத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வழக்கு, தொடர்ந்து ஜூலை 10, 2014, ஆகஸ்ட் 28, 2014, நவம்பர் 13,
2014, டிசம்பர் 2, 2014, ஜனவரி 29, 2015, பிப்ரவரி 25, 2015, மார்ச் 17, 2015 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு
வந்தது.
6 எதிர் மனுதாரர்களின் பதில்கள் - மார்ச் 17 தேதியோடு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பாக - எதிர் மனுதாரர்களின் பதில்களுக்கான பதில் (REJOINDER) தாக்கல் செய்ய - வழக்கு மீண்டும் பதிவாளர் நீதிமன்றத்தில் (REGISTRAR'S COURT) - மே 13 மற்றும் மே 28 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வந்தது.
ஜூன் மாதம் - தீர்ப்பாயம் விடுமுறை என்பதால், விடுமுறைக்கு பிறகு - ஜூலை 3 அன்று - நீதிபதி எம்.சொக்கலிங்கம் மற்றும் நிபுணர் உறுப்பினர்
பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பாக, ஆறு எதிர்மனுதாரர்கள்
தாக்கல் செய்திருந்த பதில்களுக்கான (COUNTER-AFFIDAVITS) விரிவான பதில் (REJOINDER) - தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து - இரு தரப்பும் தங்கள் வாதங்களை துவங்கிட, ஆகஸ்ட் 4 தேதிக்கு வழக்கினை தீர்ப்பாணையம் ஒத்திவைத்தது.
மீண்டும் இவ்வழக்கு ஆகஸ்ட் 4 அன்று விசாரணைக்கு வந்தப்போது - DCW தொழிற்சாலையின் வழக்கறிஞர், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, தங்கள் பதிலில் (REJOINDER) - புதிய ஆவணங்களை அறிமுகப்படுத்தி உள்ளதால், அதற்கு பதில் சமர்ப்பிக்க 3 வாரம் கால அவகாசம் வேண்டும் என கூறினார். இதனை தொடர்ந்து - இவ்வழக்கு, செப்டம்பர் 3 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வழக்கு மீண்டும் செப்டம்பர் 3 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது DCW நிறுவனம் சார்பாகவும், DCW நிறுவனத்திற்கு ஆவணங்கள் தயாரித்த இரு நிறுவனங்களில் ஒரு நிறுவனமான PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED சார்பாகவும் பதில்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து எழுத்துப்பூர்வ வாதங்கள் நிறைவுற்றதாகவும், அனைத்து தரப்பு வாதங்கள், அக்டோபர் 5 அன்று துவங்கும் என்றும் நீதிபதி அறிவித்தார்.
இவ்வழக்கில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, டாக்டர் வி.சுரேஷ் மற்றும் பிரீஸ்ட்லி
மோசஸ் ஆகியோர் ஆஜராகின்றனர்.
மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் திருமதி சி.சங்கமித்திரை, DCW நிறுவனம் சார்பாக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கட்டவதன் மற்றும் நிவேதிதா,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் திருமதி ரீதா சந்திரசேகர், தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எம்.கே. சுப்ரமணியம்
மற்றும் எம்.ஆர்.கோகுல் கிருஷ்ணன், PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவன்ம் சார்பாக வழக்கறிஞர் வி.ஸ்ரீனிவாச பாபு,
CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED சார்பாக வழக்கறிஞர் பி.பிரேம்குமார் ஆகியோர் இவ்வழக்கில் ஆஜராகின்றனர்.
|