தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து ஆயிரத்து 620 பேர் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 138 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் என்ற பெயரில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் ஆகியவை செய்யப்படுகின்றன.ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடப்பதால், வாக்காளர் பட்டியலை செம்மைப் படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல், மழை வெள்ளம் காரணமாக சற்று தாமதமாக ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 2 கோடியே 88 லட்சத்து 17 ஆயிரத்து 750 ஆண்கள், 2 கோடியே 90 லட்சத்து 93 ஆயிரத்து 349 பெண்கள், 4 ஆயிரத்து 383 மூன்றாம் பாலினத்தவர் என 5 கோடியே 79 லட்சத்து 15 ஆயிரத்து 482 வாக்காளர்கள் இருந்தனர்.
ஆனால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தமிழக வாக்காளர் பட்டியலில் 50 லட்சத்துக்கும் அதிகமாக இறந்தவர்கள், இரட்டை பதிவுகள் இருப்பதாக புகார் அளித்தன. இதையடுத்து, இரண்டு சிறப்பு முகாம்கள் நடத்தியும் ஆய்வு செய்யப்பட்டும் இறந்தவர், இரட்டை பதிவுகள் உள்ளிட்ட பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
மேலும், தமிழகம் வந்த தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இரட்டை பதிவுகள் அதிக அளவில் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இது தவிர, 19 முதல் 29 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் முழுமையாக சேர்க்கப்படவில்லை என்பதை உணர்ந்த தேர்தல் ஆணையம், கூடுதலாக கால அவகாசம் அளித்தது. இதன் பேரில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி வரை ஆன்லைனில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. இப்பணிகள் முடிந்த நிலையில், நேற்று துணை வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் தற்போது 2 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்து 973 ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 33 ஆயிரத்து 927 பெண்கள், 4 ஆயிரத்து 720 மூன்றாம் பாலினத்தவர் என 5 கோடியே 82 லட்சத்து ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர். கூடுதலாக 2 லட்சத்து 86 ஆயிரத்து 138 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள், இரட்டை பதிவுகள் என பல லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்க நல்லூரில் அதிக வாக்காளர்கள் (6,02,407), திருவாரூர் மாவட்டம் கீழ்வேளூரில் குறைவான வாக்கா ளர்கள் (1,63,370) உள்ளனர். சோழிங்க நல்லூர் தொகுதியில்தான் தமிழகத் திலேயே அதிக பெண் வாக்காளர்கள் (2,99,573) உள்ளனர். ஆண், பெண் விகிதாச்சாரத்தை பொறுத்தவரை, கரூர் தொகுதியில் ஆயிரம் ஆணுக்கு, ஆயிரத்து 89 பெண் வாக்காளர்கள் உள்ளனர். மதுரவாயல் தொகுதியில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் (127) அதிகமாக உள்ளனர்.
ஆன்லைனில் பெயர் சேர்க்க 2 லட்சத்து 46 ஆயிரத்து 270 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் உரிய ஆவணங்கள் இல்லாத ஒரு லட்சத்து 27 ஆயிரம் மனுக்கள் தள்ளுபடி செய் யப்பட்டன. வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணைய இணையதளத்தில் சனிக்கிழமை (இன்று) காலை முதல் பார்க்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த தேர்தல்களில்...
2011 சட்டப்பேரவை தேர்தலின் போது 4.71 கோடி வாக்காளர்கள் இருந்தனர். 2014 நாடாளுமன்ற தேர்தலில் 5.51 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.
தகவல்:
தி இந்து |