IAS அகடமியின் நிர்வாக இயக்குநர், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகிகளுடன் சந்தித்துப் பேசியதில், அரசுப் பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
வரலாற்று சிறப்புமிக்க நமது காயல் மாநகர் பல ஆன்றோர்களையும்,சான்றோர்களையும், வாரி வழங்கும் வள்ளல்களையும் பெற்றெடுத்த திருநகர் மட்டுமல்ல மார்க்கக் கல்வி ஞானத்திலும், உலகக் கல்வியிலும், பல்வேறு துறைகளிலும் சாதனைகளை நிகழ்த்தியவர்களை தன்னகத்தே கொண்டுள்ள ஊராகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நமது காயல் பதியில் IAS, IPS, IFS போன்ற அரசின் உயர்ந்த ஆட்சிப் பொறுப்பிற்கான படிப்புகளையும், அரசாங்கத்தின் இதர அலுவலகப் பணிகளுக்கான படிப்புகளையும் படித்து அத்துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏனோ மக்கள் மத்தியில் துளிர் விடாமல் போனது துரதிர்ஷ்டவசமே. இந்நிலையை மாற்றி, இந்தத் துறையிலும் நமது சமுதாயம் தடம் பதிக்க வேண்டும் என்ற ஆவலில் சில கல்வி ஆர்வலர்களும், காயல் நல ,மன்றங்களும் கடந்த சில ஆண்டுகளாக மிகுதமான ஆர்வம் காட்டி வருகின்றன.
இதனை கருத்தில் கொண்டு இக்ராஃ கல்விச் சங்கமும், சமீப காலமாக -அரசின் உயர் பதவிகளிலும், இதர அலுவலகப் பணிகளிலும் நமது மக்களை பங்கேற்கச் செய்திடும் வழிமுறைகள் குறித்து பல்வேறு தரப்பிலும் கலந்தாலோசித்தும், அதனை நடைமுறைப்படுத்திடும் வழிமுறைகள் குறித்தும் ஆய்ந்து வருகிறது.சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற, இக்ராஃ கூட்டிய நகரின் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களின் கலந்தாலோசனைக் கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டு, பள்ளிகளின் முழுமையான ஆதரவும், ஒத்துழைப்பும் கோரப்பட்டது.அதனைத் தொடர்ந்து அரசுப்பணிகளுக்கான படிப்புகள், அதற்கான தகுதிகள், காலம், இதற்காக பயிற்சி வழங்கும் நிறுவனங்கள், அதற்கான கட்டணங்கள் குறித்த விரிவான விபரங்களை சேகரிக்கவும், இதனை நடைமுறைச் சாத்தியமாக்குவது குறித்து பேசிடவும் இக்ராஃவிலிருந்து ஒரு குழு சென்னை செல்ல தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அரசின் பல்வேறு உயர் பொறுப்புகளில் பணியாற்றி ஒய்வு பெற்ற அதிகாரி K.அலாவுதீன் IAS அவர்களை இயக்குநராகக் கொண்டு சென்னையில் செயலாற்றி வரும் S IAS அகாடமியின் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் முனைவர் சேமுமு முஹம்மது அலி அவர்கள் கடந்த 05-04-2016 அன்று காலை தனியார் கல்லூரி ஒன்றில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, அன்று மதியம் இக்ராஃ நிர்வாகிகளை சந்திக்க ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தார்.அதன்படி அன்றைய தினம் S IAS Academy யின் நிர்வாக இயக்குனர் பேராசிரியர் முனைவர் சேமுமு முஹம்மது அலி, இக்ராஃ அலுவலகம் வந்திருந்தார். அவர்களுடன் விரிவான பேச்சுவார்த்தைகள்/ கலந்தாலோசனைகள் நடைபெற்றது.
அரசின் உயர்ந்த பதவிகளிலும், நிர்வாகப் பணிகளிலும் நமது மக்களை இடம் பெறச் செய்யும் வழிமுறைகள் பற்றி தெளிவாக விவரிக்கப்பட்டது. அதற்கான முயற்சிகளை எப்படி மேற்கொள்வது என்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தாம் துபை, அபுதாபி, கத்தார் போன்ற நாடுகளுக்கு சென்றிருந்த போது அங்குள்ள காயல் நல மன்றத்தின் நிர்வாகிகள் இக்ராஃ கல்விச் சங்கத்தின் கல்விப் பணிகள் குறித்தும், இந்த அரசுப் பணிகளில் காயல் நகர மக்களை எப்படியேனும் நுழைத்திட வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசியதாக குறிப்பிட்ட அவர், ''திறமையான, ஆர்வமுள்ள மாணவர்களை இக்ராஃ மூலம் கண்டறிந்து தேர்ந்தெடுத்துத் தாருங்கள். அவர்களை IAS, IPS ஆக உருவாக்கிக் காட்டுவது எங்களது பொறுப்பு. அதற்கான முழு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் '' என்று கேட்டுக் கொண்டார்.
இன்ஷா அல்லாஹ்! கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறந்ததும்,(எதிர்வரும் நோன்புப் பெருநாள் முடிந்ததும்) துவக்கமாக 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள், Degree முடித்தவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியவர்களை உள்ளடக்கி இது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துவது என்றும், அதனைத் தொடர்ந்து இதற்கான வழிமுறைகளை, சாத்தியக் கூறுகளை ஒன்றன்பின் ஒன்றாக கடைபிடிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது இக்ராஃ சார்பாக நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது, இணைச் செயலர் என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், செயற்குழு மூத்த உறுப்பினர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மது இக்பால் மற்றும் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஜீம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்கண்ட S IAS அகாடமியின் இயக்குனர் K.அலாவுதீன் IAS அவர்கள் கடந்த 2013 ஆம் வருடம் நமதூரின் ரெட் ஸ்டார் சங்க வளாகத்தில் நடைபெற்ற இக்ராஃவின் ''சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவர்களை-2013'' நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, ''இந்த காயல் நகரிலிருந்து கூடிய விரைவில் IAS, IPS அதிகாரிகள் உருவாக வேண்டும்.அதற்காக தம்மால் இயன்ற அனைத்து உதவி, ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராக உள்ளதாக'' குறிப்பிட்டது இங்கே நினைவு கூறத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
என்.எஸ்.இ.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம்
காயல்பட்டினம்.
இக்ராஃ தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|