அதிமுக தேர்தல் அறிக்கையில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் "தற்போதைய கணக்கீட்டு முறைப் படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமின்றி
வீடுகளுக்கு வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. தமிழக முதல்வராக 6-வது முறை யாக ஜெயலலிதா
நேற்று பதவி யேற்றார். தொடர்ந்து அவர், தலைமைச் செயலகத்தில் முதல்வர் பொறுப்பையும் ஏற்றார். இதைத் தொடர்ந்து, 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று, 100 யூனிட் இலவச மின்சாரம்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், '100 யூனிட் இலவச மின்சாரம் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற கோப்பில் முதல்வர்
கையெழுத்திட்டார். மின்வாரியத்துக்கு ஆயிரத்து 607 கோடி மானியமாக அரசு வழங்கும். இந்த சலுகை மே 23-ம் தேதி (நேற்று) முதல்
அமல்படுத்தப்படும்' என கூறப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பின் மூலம் மின் நுகர்வோர் எவ்வாறு பயனடைவர் என காணும் முன், தற்போது எவ்வாறு மின் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என
காணலாம்:
மின்சார வாரியம், மின் நுகர்வோர்களை - நான்கு வகுப்பினராக பிரிக்கிறது:
(1) முதல் வகுப்பு:
100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்கள்
(2) இரண்டாம் வகுப்பு:
200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்கள்
(3) மூன்றாம் வகுப்பு:
500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்கள்
(4) நான்காம் வகுப்பு:
501 யூனிட்டுக்கும் மேலான மின்சாரம் பயன்படுத்துபவர்கள்
மேலே உள்ள பிரிவுகள் படி, இதுவரை எவ்வாறு கட்டணம் செலுத்தி வந்தார்கள் என கீழே உள்ள படம் விளக்குகிறது:
இந்த கட்டணத்துடன், குறைந்த கட்டணம் (FIXED CHARGES) என முதல் வகுப்பை சார்ந்தவர்கள் 20 ரூபாயும், இரண்டாம் வகுப்பை சார்ந்தவர்கள்
20 ரூபாயும், மூன்றாம் வகுப்பை சார்ந்தவர்கள் 30 ரூபாயும், நான்காம் வகுப்பை சார்ந்தவர்கள் 50 ரூபாயும் செலுத்தி வந்தார்கள்.
முதல்வரின் அறிவிப்பிற்கு பிறகு எவ்வாறு கட்டணம் மாறுகிறது?
முதல் வகுப்பு சார்ந்தவர்கள் - அதாவது 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தி வந்தவர்கள் - இனி எந்த கட்டணமும் செலுத்த
தேவையில்லை.
இரண்டாவது வகுப்பு சார்ந்தவர்கள் (0 - 200) - அதாவது 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தி வந்தவர்கள் - இனி, முதல் 100 யூனிட்டுக்கு எந்த
கட்டணமும் செலுத்த தேவையில்லை. மீதியுள்ள யூனிட்டுக்கு - இரண்டாவது வகுப்பு விகிதாசாரம்படி கட்டணம் செலுத்த வேண்டும்.
அதாவது - உதாரணமாக 160 யூனிட் பயன்படுத்துபவர், முதல் 100 யூனிட்டுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை; எஞ்சியுள்ள 60 யூனிட்டுக்கு, ஒரு
யூனிட்டுக்கு ரூபாய் 1.50 - அதாவது ரூபாய் 90 (+20) மட்டும் செலுத்த வேண்டும்.
இந்த அறிவிப்பிற்கு முன்னர், இவர் 240 (+20) ரூபாய் செலுத்தி இருப்பார்.
மூன்றாவது வகுப்பு சார்ந்தவர்கள் (200 - 500) - அதாவது 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தி வந்தவர்கள் - இனி, முதல் 100 யூனிட்டுக்கு எந்த
கட்டணமும் செலுத்த தேவையில்லை. மீதியுள்ள யூனிட்டுக்கு - மூன்றாவது வகுப்பு விகிதாசாரம்படி கட்டணம் செலுத்த வேண்டும்.
அதாவது - உதாரணமாக - 360 யூனிட் பயன்படுத்துபவர், முதல் 100 யூனிட்டுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை; எஞ்சியுள்ள 260 யூனிட்டுகளில்,
முதல் 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 2.00 என்றும், அடுத்த 160 யூனிட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 3.00 என்றும், அதாவது ரூபாய் 680
(+30) மட்டும் செலுத்த வேண்டும்.
இந்த அறிவிப்பிற்கு முன்னர், இவர் 880 (+30) ரூபாய் செலுத்தி இருப்பார்.
நான்காவது வகுப்பு சார்ந்தவர்கள் (500+) - அதாவது 500 யூனிட்டுக்கும் மேல் மின்சாரம் பயன்படுத்தி வந்தவர்கள் - இனி, முதல் 100 யூனிட்டுக்கு எந்த
கட்டணமும் செலுத்த தேவையில்லை. மீதியுள்ள யூனிட்டுக்கு - நான்காவதுவகுப்பு விகிதாசாரம்படி கட்டணம் செலுத்த வேண்டும்.
அதாவது - உதாரணமாக - 610 யூனிட் பயன்படுத்துபவர், முதல் 100 யூனிட்டுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை; எஞ்சியுள்ள 510 யூனிட்டுகளில்,
முதல் 100 யூனிட்டுக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 3.50 என்றும், அடுத்த 300 யூனிட்டுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 4.60 என்றும், எஞ்சியுள்ள 110
யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 6.60 என்றும், அதாவது ரூபாய் 2456 (+50) மட்டும் செலுத்த வேண்டும்.
இந்த அறிவிப்பிற்கு முன்னர், இவர் 2806 (+30) ரூபாய் செலுத்தி இருப்பார்.
இந்த அறிப்பின்படி, அதிகபட்சமாக - மின் நுகர்வோர்கள், 350 ரூபாய் சேமிக்க முடியும்.
தமிழகத்தில் முதல் வகுப்பை சார்ந்த 78.55 லட்சம் மின் நுகர்வோரும், இரண்டாம் வகுப்பை சார்ந்த 55.36 லட்சம் மின் நுகர்வோரும், மூன்றாம்
வகுப்பை சார்ந்த 49.66 லட்சம் மின் நுகர்வோரும், நான்காம் வகுப்பை சார்ந்த 7.30 லட்சம் நுகர்வோரும் உள்ளனர். |