திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே, அவர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆவது உறுதியாகியுள்ளது.
சென்னை - அறிவாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில், திமுக சட்டப்பேரவைக் குழு துணைத் தலைவராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். திமுக கொறடாவாக சக்கரபாணியும், துணைக் கொறடாவாக கு.பிச்சாண்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்துள்ளன. திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
திமுக கூட்டணிக்கு 98 எம்எல்ஏக்கள் இருப்பதால் சட்டப்பேரவையில் கடும் சவாலை ஏற்படுத்த முடியும். எனவே, திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுபவர்தான் எதிர்க்கட்சித் தலைவராக முடியும். இந்நிலையில், திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
'திமுக தலைவர் கருணாநிதிக்கு வயதாகிவிட்டதால் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்க முடியாது. அவர் அமர்வதற்கு ஏற்ப இருக்கை வசதியும் செய்யமாட்டார்கள். எனவே, மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்' என்று திமுக தரப்பினர் தெரிவித்தனர்.
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 23 இடங்களில் வென்ற திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. 29 இடங்களில் வென்ற தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார் என்பது நினைவுகூரத்தக்கது.
தகவல்:
தி இந்து
|