காயல்பட்டினத்தில் ஜூலை 07 வியாழக்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. குருவித்துறைப் பள்ளியில் முந்திய நாள் (ஜூலை 06 புதன்கிழமை) 22.00 மணியளவில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ், ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் முத்துவாப்பா தலைமையில் நடைபெற்றது.
மறுநாள் (ஜூலை 07 வியாழக்கிழமை) பெருநாளன்று காலை 09.45 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ தொழுகையை வழிநடத்த, ஐக்கிய சமாதானப் பேரவை & தாருஸ் ஸலாம் தஃவா சென்டர் ஆகியவற்றின் நிறுவனர் தலைவர் மவ்லவீ டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ குத்பா பேருரையாற்றினார்.
கலந்துகொண்டோர்:
இத்தொழுகையில், பள்ளியின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், துணைத்தலைவர் என்.எஸ்.நூஹ் ஹமீத், இணைச் செயலாளர்களான எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், கே.எஸ்.முஹம்மத் நூஹ், கே.எம்.செய்யித் அஹ்மத், கணக்கர் அஹ்மத் லெப்பை, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் பிரபு சுல்தான், அதன் ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் செயலாளர் என்.டீ.இஸ்ஹாக் லெப்பை ஜுமானீ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், அதன் மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட துணைச் செயலாளர் ‘பெத்தப்பா’ சுல்தான், நகரப் பிரமுகர்களான எஸ்.எம்.கபீர், அரஃபாத் சிந்தா, காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், காயல் மவ்லானா உட்பட அப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
தொழுகை, உரைகள், துஆ நிறைவுற்றதும் அனைவரும் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
சிற்சிறு குழந்தைகளுக்கும் பலவண்ணப் புத்தாடைகளை அணிவித்து பொதுமக்கள் தொழுகைக்கு அழைத்து வந்திருந்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
வாழ்த்துக்கள் பரிமாற்றம்:
தொழுகை நிறைவுற்ற பின்னர், பொதுமக்கள் தமது நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்து, பெருநாள் வாழ்த்துக்களைக் கூறி, கட்டித் தழுவி, கைலாகு செய்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
பெருநாள் தொழுகையையொட்டி, பள்ளி நலனுக்காக நன்கொடை வசூலிக்கப்பட்டது. மொத்தம் 26 ஆயிரத்து 610 ரூபாய் சேகரமானது.
சிதிலம் கண்டுள்ள வெளிப்பள்ளியை இடித்தகற்றி, புதுப்பித்துக் கட்டுவதற்கான பணிகள் பெருநாள் தொழுகைக்குப் பின் துவக்கப்படுவதால், இதற்கான நிதியாதாரத்தைத் திரட்டுவதற்காகவும், குருவித்துறைப் பள்ளி மஹல்லாவின் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், தொழுகையில் பங்கேற்ற அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பில் பின்வருமாறு படிவம் அளிக்கப்பட்டது. அப்படிவத்தில் மஹல்லாவாசிகள் தமது விருப்பத் தொகையைக் குறிப்பிட்டு பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தனர்:-
தொழுகை நிறைவுற்ற பின்னர், அனைவரும் குழுக்குழுவாக நின்று படமெடுத்துக்கொண்டனர்.
பள்ளியில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுற்ற பின்னர், தொழுகையை வழிநடத்திய இமாம், குத்பா பேருரையாற்றிய கத்தீப் ஆகியோர் டங்கா (முரசு) முழங்க, பைத் பாடி அழைத்துச் செல்லப்பட்டனர். மஹான் ஈக்கியப்பா தைக்கா, மஹான் பெரிய முத்துவாப்பா தைக்கா ஆகிய இடங்களில் ஜியாரத்தை முடித்துவிட்டு, அனைவரும் களைந்து சென்றனர்.
குருவித்துறைப் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1436) நடைபெற்ற ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |