காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவின் சார்பில், நாட்டு நலப்பணித் திட்ட கிராம சீரமைப்பு முகாம் ஒரு வார காலமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
எல்.கே.மேனிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட கிராம சீரமைப்பு முகாம், சுலைமான் நகர் – தேங்காய் பண்டக சாலையிலுள்ள அல்அமீன் நர்ஸரி & துவக்கப் பள்ளி வளாகத்தில், 23.06.2016. வெள்ளிக்கிழமையன்று 17.00 மணிக்குத் துவங்கியது.
எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். முன்னிலை வகித்த - எல்.கே.மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் அறிமுகவுரையாற்றினார். ஆசிரியர் எம்.முஹம்மத் ஹுஸைன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
நாட்டு நலப்பணித் திட்ட விளக்கத்தை, பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட (NSS) அலுவலரும் - முதுகலை ஆசிரியருமான ஏ.முஹம்மத் சித்தீக் சமர்ப்பித்தார். ஆசிரியர் ஆனந்தக் கூத்தன் முகாமைத் துவக்கி வைத்துப் பேசினார்.
அல்அமீன் பள்ளியின் முதல்வரும், தாளாளருமான எம்.ஏ.புகாரீ, அதன் தலைமையாசிரியை ஃபாத்திமா ஆஃப்ரீன், எல்.கே.மேனிலைப் பள்ளியின் உதவி தலைமையாசிரியர்கள் செய்யித் முகைதீன், சிதம்பரம், ஆசிரியர் சதக்கத்துல்லாஹ், அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் எம்.எம்.டீ.பீவி ஃபாத்திமா ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். ஆசிரியர் செய்யித் ரஃபீக் நன்றியுரையுடன் துவக்க நிகழ்ச்சிகள் நிறைவுற்று, 24.09.2016. முதல் முகாம் பணிகள் முறைப்படி துவங்கின.
நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் - முகாமுக்கு உட்பட்ட வீடுகள்தோறும் சென்று, அவர்களின் பொருளாதார நிலை குறித்து புள்ளிவிபரங்களைச் சேகரித்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் வளர்ந்திருந்த முட்புதர்களை வெட்டியகற்றினர்.
தொடர்ந்து நடைபெற்ற கல்வி - மத நல்லிணக்கப் பேரணியில் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், அல்அமீன் பள்ளியின் மாணவ-மாணவியர், இரு பள்ளிகளின் ஆசிரியர்கள், முதல்வர்கள் கலந்துகொண்டனர்.
நீரழிவு நோய், இரத்த சர்க்கரை அளவைக் கண்டறியும் இலவச முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாமை டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் துவக்கி வைத்து விளக்கிப் பேசியதுடன், பயனாளிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.
இம்முகாமை, மருத்துவர் அப்துல் ஹக் வழிநடத்தி, இரத்த சர்க்கரை அளவைக் கண்டறிந்து, பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார்.
பின்னர், கிராம விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது. எல்.கே.மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் இஸ்மாஈல், அல்அமீன் பள்ளியின் ஆசிரியர்கள் இணைந்து இப்போட்டியை நடத்தி, பரிசுக்குரிய மாணவ-மாணவியரைத் தேர்ந்தெடுத்தனர்.
முகாம் நிறைவு விழா, 29.09.2016. வியாழக்கிழமையன்று 17.00 மணிக்கு அல்அமீன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் வரவேற்றுப் பேசினார்.
அல்அமீன் பள்ளியின் முதல்வர் எம்.ஏ.புகாரீ, தலைமையாசிரியை ஃபாத்திமா ஆஃப்ரீன், எல்.கே.பள்ளியின் உதவி தலைமையாசிரியர் சிதம்பரம், ஆசிரியர்கள் சதக்கத்துல்லாஹ், ஆனந்தக் கூத்தன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கி, வாழ்த்துப் பாடல்களும் பாடினர்.
விளையாட்டில் வென்ற மாணவ-மாணவியர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு இதன்போது பரிசுகள் வழங்கப்பட்டன.
முகாம் மாணவர்கள் தங்குவதற்கு இடவசதி, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அல்அமீன் பள்ளியின் சார்பில் வழங்கப்பட்டது. இதற்காக அப்பள்ளிக்கு எல்.கே. பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டப் பிரிவின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
எல்.கே. பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும், முதுகலை ஆசிரியருமான ஏ.முஹம்மத் சித்தீக் நன்றி கூறினார்.
இவ்விழாவில், இரு பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவ-மாணவியர், பகுதி பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|