சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இளம் மாணவியருக்கு விளக்கும் நோக்குடன் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் சார்பில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் ஒருங்கிணைப்பில், காயல்பட்டினத்தின் அனைத்து மகளிர் மேனிலைப் பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நிறைவு நிகழ்ச்சி எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்று வாழ்த்துரையாற்றியுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
சமூக ஊடகங்களால் (SOCIAL MEDIA) ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் – மாவட்டத்திலுள்ள மகளிர் பள்ளிக்கூடங்களில் “பெண் மக்களுடன் பேசுவோம்!” எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (Superintendent of Police; SP) உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் சார்பில், அதன் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலிருக்கும் மகளிர் பள்ளிக்கூடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
காயல்பட்டினத்திலுள்ள மகளிர் பள்ளிக்கூடங்களில் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துத் தருமாறு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் திருச்செந்தூர் மகளிர் காவல் நிலையம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அதற்கான ஏற்பாடுகளை “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் பெண்கள் பிரிவு நிர்வாகிகள் செய்தனர்.
அதன்படி, இத்தொடரின் முதல் நிகழ்ச்சி 09.09.2017. அன்று சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளியிலும், இரண்டாவது நிகழ்ச்சி, 16.09.2017. அன்று சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியிலும், மூன்றாவது நிகழ்ச்சி, 23.09.2017. அன்று முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியிலும், நான்காவது நிகழ்ச்சி, 06.10.2017. அன்று அரசு மகளிர் மேனிலைப் பள்ளியிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. (முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி மாணவியரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.)
இத்தொடரின் நிறைவு நிகழ்ச்சி, 10.10.2017. செவ்வாய்க்கிழமையன்று (நேற்று) 15.00 மணியளவில், *எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி*யில் நடைபெற்றது.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் மகளிர் பிரிவு நிர்வாகியும் – காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான *ஐ.ஆபிதா ஷேக்* நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். பள்ளி மாணவி கிராஅத் ஓத, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியை *மீனா சேகர்* வரவேற்புரையாற்றினார்.
*மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் (DSP) தீபு, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் (Inspector) சி.சாந்தி, ஆறுமுகநேரி காவல் ஆய்வாளர் (Inspector) சிவலிங்கம் ஆகியோர் துவக்கவுரையாற்றினர்.
பெண் மக்களுக்கெதிராக நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் குறித்தும், அவற்றிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை, அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்களை உள்ளடக்கி அவர்களின் உரைகள் அமைந்திருந்தன.
இந்நிகழ்ச்சியில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் அழைப்பையேற்று – *தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (Superintendent of Police; SP) மகேந்திரன்* சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகள் அவருக்குப் பூங்கொத்து அளித்தும், எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி மாணவியர் கரவொலி எழுப்பியும் வரவேற்பளித்தனர்.
மாணவியரின் ஒழுக்க மேம்பாடு, சமூகப் பணிகளில் ஈடுபடல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி – சுவையான கதைகளுடன் அவர் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 07.10.2017. அன்று – கத்தர் காயல் நல மன்றம் சார்பில் – இக்ராஃ கல்விச் சங்கம் & தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து நடத்தப்பட்ட – நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டியில் முதன்முறையாக முதலிடம் பெற்று கோப்பையை வென்ற எல்.கே.மெட்ரிக் பள்ளி மாணவியரின் சாதனையை அனைத்து மாணவியருக்கும் அறியத் தரும் வகையில், இந்நிகழ்ச்சியின்போது அம்மாணவியரான சித்தி ஃபாத்திமா, செய்யிதா சுமய்யா ஆகியோரிடம் – வெற்றிக் கோப்பை, பதக்கங்கள், சான்றிதழ்களை – சிறப்பு விருந்தினரான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் வழங்க, மாணவியர் அனைவரும் கரவொலி, குரலொலி எழுப்பி உற்சாகமூட்டினர்.
நிறைவாக, *அரசு வழக்குரைஞர் சாத்ராக்* – மாணவியருக்கான பொது அறிவு வினாடி-வினா போட்டியை சுவைபட நடத்தி, சரியான விடையளித்தோருக்கு “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் நன்னெறி நூல்களைப் பரிசாக வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் உள்ளிட்ட அவையோருக்கு – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அதன் நிர்வாகிகளான *ஐ.ஆபிதா ஷேக் (மகளிர் பிரிவு), எம்.ஏ.புகாரீ (48), ஏ.எஸ்.புகாரீ*, ஆகியோர் அவையோருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கண்ணியப்படுத்தினர்.
எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி சார்பில் அதன் தலைமையாசிரியை *மீனா சேகர்* & ஆசிரியையர் நினைவுப் பரிசுகளை வழங்கி கண்ணியப்படுத்தினர்.
“நடப்பது என்ன?” குழும மகளிர் பிரிவு நிர்வாகி *தஸ்லீமா அஜீஸ்* நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இந்நிகழ்ச்சியில் - மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் காசிராஜன்*, திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் சந்திரிகா, ஆறுமுகநேரி காவல் நிலைய துணை ஆய்வாளர் சரண்யா, வழக்குரைஞர் சுகன்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எல்.கே. மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் 06 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவியர் & அவர்களது பெற்றோர் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை – “நடப்பது என்ன?” மகளிர் பிரிவு நிர்வாகிகளான *மொஃபா மாலிக், நிலோஃபர் சாமு உள்ளிட்ட குழுவினரும், குழுமத்தின் ஆண்கள் பிரிவு ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |