எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளி வளாகத்தில், 15.10.2017 ஞாயிறன்று ”அரபு வனப்பெழுத்து வரைகலை கண்காட்சி” (Arabic Calligraphy Art Gallery) நடைபெற உள்ளது. இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலறிக்கை & அழைப்பிதழ்:
வருகின்ற 15.10.2017 ஞாயிறன்று (இறைவன் நாடினால்), காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளி வளாகத்தில், “அரபு வனப்பெழுத்து வரைகலை கண்காட்சி” (Arabic Calligraphy Art Gallery) ஒன்றினை, எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் (KWAQ) & பெங்களூரு காயல் நல மன்றம் (KWAB) இணைவில் நடத்திட ஏற்பாடு செய்துள்ளோம்.
பண்டைய கலை!
சீன அறிஞர் கன்பூசியஸ் (Confucius), பழங்கால மனிதர்களிடம் காணப்பட்ட ஆறு சிறந்த கலை உத்திகளுள் ஒன்றாக, வனப்பெழுத்து வரைகலையை கருதினார். எழுத்து வடிவங்களை படித்து-புரிந்துகொள்வதற்கு பெரும் மதிப்பளிக்கப்பட்ட அக்காலங்களில்,’கலை’ எனும் அடையாளத்தை கடந்து, இது ஒரு அறிவார்ந்த செயலாகவே கருதப்பட்டது.
பழங்காலந்தொட்டே, இஸ்லாமிய காண்கலைகளின் (Islamic Visual Arts) உச்சமாகவே அரபு வனப்பெழுத்து வரைகலை கருதப்படுகிறது. வழமையான கையெழுத்துகளிலேயே கலை வடிவம் காணும் தன்மை கொண்ட இவ்வேத மொழியின் எழுத்துக்களை, வனப்பெழுத்து வரைகலை நுட்பத்தோடும் - விதிகளோடும் எழுதும்போது, அது உண்டாக்கும் கலைப் படைப்பின் அழகைச் சொற்களால் விவரிக்க இயலாது.
அரபு உலகம் (அரேபிய்யா முதல் மொரோக்கோ வரை), உதுமானிய பேரரசு (தற்கால துருக்கி) & பாரசீகம் (தற்கால ஈரான்) என வெவ்வேறு பிராந்தியங்களில் - வெவ்வேறு காலகட்டங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்ததால், இக்கலை பல்வேறு அழகிய எழுத்து வடிவங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கலையாக்கங்களின் கண்காட்சி!
இந்நிகழ்வில், பெங்களூரை சார்ந்த ஜனாப் முஹ்தார் அஹ்மத் தனது கலையாக்கங்களை காட்சிப்படுத்துகிறார். இவர் அரபு வனப்பெழுத்து வரைகலையை துருக்கியில் முறையாக பயின்று-பட்டயம் (إجازة) பெற்ற முதல் & ஒரே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் நடந்த உலகளாவிய அரபு வனப்பெழுத்து வரைகலைப் போட்டியில் பங்கேற்ற 700 கலைப்படைப்புகளில், இவரது அழகிய ஆக்கத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
பல இலட்சங்கள் வரை விலைபோகும் இவரது ஆக்கங்கள், பல்வேறு தேசங்களில் எண்ணற்ற இல்லங்களை அலங்கரிக்கின்றன; அதில், கனடாவிலுள்ள ஓர் இறை இல்லமும் அடக்கம்.
காயல் அரபி ஹாஜியாருக்கு விருது!
முஹம்மத் முஹ்யித்தீன் எனும் அரபி ஹாஜியார், நமதூரின் எண்ணற்ற வீடுகளது முகப்புகளிலும், பள்ளிவாசல்களிலும், பலகைகளிலும் அரபு எழுத்துக்களை அழகுற பதிக்கும், நவீன காயலின் ஒரே “கல் செதுக்குக்கலை வல்லுநர் (Stone Carving Expert)” ஆவார்.
நமதூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பிற இடங்கள் & இலங்கையிலும், தமிழ், அரபு, ஆங்கிலம் & மலையாளம் என பல மொழிகளின் எழுத்துக்களையும் தனது கைவண்ணத்தால் பதித்துள்ளார்.
இந்த கண்காட்சியின்போது, இவரது கலை வாழ்வை பாராட்டி கண்ணியப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவின் சார்பில் - சிறப்பு விருது ஒன்றினை வழங்கிட உள்ளோம், இன்ஷா அல்லாஹ்.
அனுமதி இலவசம்!
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த கலைக் கண்காட்சிக்கான அழைப்பிதழ் கீழே:
கண்காட்சி அரங்கம் பெண்களுக்கு காலை 09:30 முதல் மதியம் 12:30 வரையிலும், ஆண்களுக்கு மதியம் 01:30 முதல் மாலை 04:30 வரையிலும் பார்வைக்காக திறக்கப்படும். இதில், நகர மக்கள் & பள்ளி/மத்ரஸா மாணவ-மாணவியர் அனைவரும் கலந்துகொண்டு கலையாக்கங்களை கண்டு மகிழுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
கூடுதல் தகவலுக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவை, கீழுள்ள அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்:9902001223 / 9865819541 / 9486655338
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
1. அக். 15 அன்று மத்ரஸா மாணவ-மாணவியருக்கு “அரபு வனப்பெழுத்து வரைகலை அறிமுகப் பயிற்சி பட்டறை” (Arabic Calligraphy Introductory Training Workshop)!! எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில் ஏற்பாடு!!
(10.10.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19775)
2. “எழுத்துக்களின் காதலர்கள்!” - அ.ர.ஹபீப் இப்றாஹீம் ஆக்கத்தில் எழுத்து மேடை கட்டுரை
(08.11.2016; http://www.kayalpatnam.com/columns.asp?id=211)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம்
|