எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளி வளாகத்தில், 15.10.2017 ஞாயிறன்று மத்ரஸா மாணவ-மாணவியருக்கு “அரபு வனப்பெழுத்து வரைகலை அறிமுகப் பயிற்சி பட்டறை” (Arabic Calligraphy Introductory Training Workshop) நடைபெற உள்ளது. இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பு வெளியிட்டுள்ள தகவலறிக்கை:
சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு, பல்வேறு நிகழ்வுகளின் மூலம் - நம் மக்களிடம் மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தளமாக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” விளங்குகிறது.
நிகழ்வு # 20
இவ்வமைப்பின் புதிய முயற்சியாக, கத்தர் காயல் நல மன்றம் (KWAQ) & பெங்களூரு காயல் நல மன்றம் (KWAB) அமைப்புகளுடன் கைகோர்த்து, “அரபு வனப்பெழுத்து வரைகலை” (Arabic Calligraphy)-யை நமதூரின் அரபு மத்ரஸாக்களில் பயிலும் மாணவ-மாணவியருக்கு அறிமுகம் செய்யும் பொருட்டு, வருகின்ற 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று (இறைவன் நாடினால்), சிறப்பு அறிமுகப் பயிற்சி பட்டறை (Introductory Training Workshop) ஒன்றை நடத்திட ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்நிகழ்வு, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பு நடத்தும் 20-வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி நோக்கம்
பண்டைய மனிதர்கள் கொண்டாடிய அரபு வனப்பெழுத்து வரைகலையானது, இன்று நம் சமூகத்தால் பெருமளவு புறக்கணிக்கப்படுவது வேதனையான உண்மை. ஹாஃபிழ்களையும் ஆலிம்களையும் மிகுதியாக உருவாக்கும் நாம், இக்கலை உயிர்ப்புடன் இருப்பதற்கும் ஆவண செய்தல் காலத்தின் கட்டாயம்.
உண்மையில் ஒருவர் இக்கலையை கற்பதற்கு, தன்-விருப்பத்தை தவிர வேறு காரணங்கள் எதுவும் தேவையில்லை. எனினும், இன்ன பிற நோக்கங்களையும் அவர் தேடுபவராக இருந்தால், இதோ கீழே கூறப்பட்டுள்ள அனைத்தையுமே இக்கலை அளிக்கிறது:
• குர்ஆன்-மொழியில் உள்ள அழகிய எழுத்துகளை மேலும் அழகுபடுத்தப்படுகிறது
• வாழ்க்கை ஓட்டத்தின் வேகத்தை குறைத்து மனதை அமைதிபடுத்த உதவுகிறது
• பண்பாட்டு வேர்களோடு நம்மை இணைக்கிறது
• பல நேரங்களில், இக்கலையே ஒரு சிகிச்சையாக அமைகிறது
• தியான நிலையை அடையச் செய்கிறது
• நம் குணத்தினை செழுமையாக்கிட பயிற்சி அளிக்கிறது
• அரிதான கலையை மீட்டெடுக்கிறோம் எனும் திருப்தியை அளிக்கிறது
• படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது
• அறிவுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஒருசேர தீனிப் போடுகிறது
• எல்லா வயதினருக்கும் ஏற்ற மகிழ்ச்சியான பொழுதுபோக்கு
• ஒரு தனிப்பட்ட வர்த்தக அடையாளத்தை தோற்றுவிக்க வழிவகை செய்கிறது
நம் சமூகம் இனியும் இழந்துவிடக்கூடாதவைகளுள் இக்கலையும் ஒன்று! நாம் மறந்துவிட்ட இதனை - நமதூரின் மத்ரஸா மாணவ-மாணவியருக்கு கொண்டு செல்லும் உயரிய நோக்கோடு, இச்சிறப்பு பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துருக்கியில் பயின்ற சிறப்பு பயிற்சியாளர்!
இந்நிகழ்வில், பெங்களூரை சார்ந்த ஜனாப் முஹ்தார் அஹ்மத் பயிற்சியாளராக கலந்துகொண்டு சிறப்பிக்கிறார். இவர் அரபு வனப்பெழுத்து வரைகலையை துருக்கியில் முறையாக பயின்று-பட்டயம் (إجازة) பெற்ற முதல் & ஒரே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது “இந்திய-இஸ்லாமிய கலை & பண்பாட்டு நிறுவனத்தின் (Institute of Indo-Islamic Art and Culture)” மூலம், பலதரப்பட்ட மாணவ-மாணவியருக்கு அரபு வனப்பெழுத்து வரைகலையை கற்பித்து வருகிறார்.
நிகழ்ச்சி அழைப்பிதழ்
காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள இந்த பயிற்சி பட்டறைக்கான அழைப்பிதழ் கீழே:
மத்ரஸாக்களில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி!
காயல்பட்டினத்தின் ஆண்கள் அரபு மத்ரஸாக்களில் இருந்து 8 மாணவர்கள் வீதமும், பெண்கள் மத்ரஸாக்களில் இருந்து 15 மாணவிகள் வீதமும் - முன்பதிவு செய்யப்பட்டு, சுமார் 100 (பன்னிரண்டு வயதுக்கு மேலுள்ள) மாணவ-மாணவியர் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவ-மாணவியர்களை முன்பதிவு செய்யும் பணிகள், நிகழ்ச்சியில் பங்கேற்கும் மத்ரஸாக்களில் துவங்கியுள்ளன. கூடுதல் தகவலுக்கு, மாணவ-மாணவியர்கள் தங்களின் மத்ரஸாக்களையோ / நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையோ (9902001223 / 9865819541 / 9486655338) அனுகலாம்.
தொடர்புடைய முந்தைய பதிவு:
1. “எழுத்துக்களின் காதலர்கள்!” - அ.ர.ஹபீப் இப்றாஹீம் ஆக்கத்தில் எழுத்து மேடை கட்டுரை
(08.11.2016; http://www.kayalpatnam.com/columns.asp?id=211)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம்
|