தூத்துக்குடியில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவுக்கு - 06.10.2017 வெள்ளிக்கிழமையன்று, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில், அப்பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிகழ்வில், காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தின் நூலகர் ஜனாப் முஜீப் பங்கேற்றுள்ளார். இது குறித்து, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:
பொது மக்கள் & மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்குடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகம் & பாபாப்ஸி (BAPAPSI) நிறுவனமும் இணைந்து, அக்டோபர் 02 முதல் 11 வரை தூத்துக்குடியில் புத்தக திருவிழாவை நடத்துகின்றன. பட்டிமன்றங்கள், புகழ்பெற்ற பேச்சாளர்களின் சிறப்புரைகள் என பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் இந்த புத்தக கண்காட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
"கண்ணும்மா முற்றம்" எனும் எழுத்து மேடை மையத்தின் சிறார் பிரிவின் 5-ஆம் நிகழ்வாக - முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி இணைவில் நடைபெறவிருக்கும் சூழலியல் இலக்கிய மன்றத்தையொட்டி (அக்டோபர் 8 அன்று நடைபெறவிருக்கும் இயற்கைக் கல்வி முகாமின் ஒரு பாகம்), இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்பதிவு செய்த முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி மாணவர்களை - தூத்துக்குடி புத்தக கண்காட்சிக்கு (அப்பள்ளியின் ஏற்பாட்டில்) அழைத்து செல்ல, பள்ளியின் துணை செயலாளர் ஜனாப் கே.எம்.டீ சுலைமான் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அவ்வகையில், 06.10.2017 வெள்ளிக்கிழமையன்று - பள்ளியின் சிற்றுந்தில் புத்தக கண்காட்சிக்கு மாணவர்கள் சென்று வந்தனர். இந்நிகழ்வில், அரசு பொது நூலகத்தின் நூலகர் ஜனாப் முஜீப், எழுத்து மேடை மையத்தின் நிர்வாக குழு உறுப்பினர் அ.ர.ஹபீப் இப்றாஹீம் & எழுத்து மேடை மையம் வாட்ஸ்-அப் குழுமத்தின் சார்பாக ஜனாப் கவுஸ் முஹம்மது ஆகியோர் மாணவர்களுடன் கலந்துகொண்டனர்.
பயணத்தின் போது, நூலகர் ஜனாப் முஜீப், வாசிப்பின் அவசியம் குறித்தும், ஜனாப் கவுஸ் முஹம்மது சூழலியல் குறித்தும் மாணவர்களுடன் உரையாடினர்.
காலச்சுவடு, நற்றினை, விகடன், சாகித்ய அகடெமி, இஸ்லாமிய பவுண்டேசன் டிரஸ்ட், தமிழினி, எதிர், கிழக்கு, யுனிவர்சல் & மினர்வா போன்ற பல்வேறு பதிப்பகங்கள் தத்தம் புத்தகங்களை காட்சிப்படுத்தியிருந்தன.
கண்காட்சிக்கு வருகை தருபவர்கள் அரசு பள்ளிகளுக்கு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கிட ஊக்குவிக்கும் வண்ணம், “Book on the Wall” எனும் சிறப்பு தொட்டி அமைக்கப்பட்டிருந்தது.
பல விதமான புத்தகங்களுடன், தமிழ்நாடு அரசு மீன் வளத்துறை, அரசு மருத்துவமனை, நோய் தடுப்பு மருந்துத் துறை, பேரிடர் மேலாண்மை & சமூக நலத்துறை போன்ற சில அமைபுகளும் இக்கண்காட்சியில் அரங்குகள் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களின் சார்பாக, காயல்பட்டினம் அரசு பொது நூலகத்துக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒளிப்படங்கள் & செய்தியாக்கம்:
அ.ர. ஹபீப் இப்றாஹீம்
கள உதவி:
கவுஸ் முஹம்மது
|