ஹாங்காங் & சீனா நாடுகளில் நடைபெற்ற பாட்மிண்டன் இறகுப் பந்து போட்டியில், காயல்பட்டினம் காய் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC)ஐச் சார்ந்த வீரர் அர்ஷத் பங்கேற்ற அணி இறுதிப்போட்டியில் வென்று வெற்றிக் கோப்பையைப் பெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
இந்திய – சீன மக்களிடையே கலாச்சாரம் & விளையாட்டை மேம்படுத்தும் நோக்குடன் – இந்தியாவின் பாட்மிண்டன் முன்னாள் விளையாட்டு வீரர் டாக்டர் யுவ தயாளனால் நடத்தப்பட்டு வரும் அமைப்பு தயாள் ஸ்போர்ட்ஸ் அகடமி.
இதன் சார்பில், ஆண்டுதோறும் ஹாங்காங் & சீனா நாடுகளில், இந்தியா – சீனா நாடுகளைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்கும் பாட்மிண்டன் இறகுப் பந்துப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் நடைபெற்ற 9ஆம் ஆண்டு போட்டியில் ஏராளமான இந்திய – சீன வீரர்கள் பங்கேற்றனர். அவர்களுள், கமல் ஆர்யா & ஹோ யின் ஆகியோரைக் கொண்ட சீன அணியும், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC)இன் பாட்மிண்டன் வீரர் அர்ஷத் & கார்லோஸ் ஆகியோரைக் கொண்ட ஹாங்காங் அணியும் இறுதிப் போட்டியில் களம் கண்டன.
3 செட்களாக நடைபெற்ற போட்டியில், 21-19, 18-21, 21-19 என்ற புள்ளிகள் கணக்கில், ஹாங்காங் அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது.
வெற்றி பெற்ற அர்ஷத் அணியினருக்கு, காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) நிர்வாகிகளும், அங்கத்தினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இப்போட்டியின் மூலமாக, இந்திய ரூபாய் 50 ஆயிரம் தொகை, “Help The Blind Foundation” என்ற அமைப்புக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
சுலைமான்
|