காயல்பட்டினம் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்த 14 மாணவியருக்கு ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டயமும், மூன்றாண்டு பாடத்திட்டத்தின் கீழ் கற்றுத் தேர்ந்த 38 மாணவியருக்கு ‘ஆலிமா அரூஸிய்யா’ பட்டயமும் வழங்கப்பட்டுள்ளன. விரிவான விபரம்:-
நாற்பெரும் விழாக்கள்:
காயல்பட்டினம் தீவுத்தெரு பெண்கள் தைக்காவில் இயங்கி வரும் அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் 11ஆவது பட்டமளிப்பு விழா, அக்டோபர் மாதம் 06, 07, 08 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று நாட்களில், குருவித்துறைப் பள்ளி வடகிழக்கு மைதானம், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
உலகம் போற்றும் உத்தம நபியின் உதய தின விழா, மாமறையை மனதிலேற்றிய மகளிருககு ஹாஃபிழா பட்டமளிப்பு விழா, தீன் ஞானம் கற்றோருக்கு ஆலிமா அரூஸிய்யா ஸனது வழங்கும் விழா, கல்லூரியின் 35ஆம் ஆண்டு துவக்க விழா என நாற்பெரும் தலைப்புகளில் நடைபெற்ற இவ்விழாவின் முதல் இரண்டு நாட்கள் மகளிர் மட்டும் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவும், மூன்றாம் நாளன்று ஆண்கள் நிகழ்ச்சியாகவும் நடைபெற்றன.
முன்னோடி நிகழ்ச்சிகள்:
முன்னதாக, கல்லூரியை உருவாக்கியோர், உதவியோருள் காலஞ்சென்ற மர்ஹூம், மர்ஹூமாக்கள் பெயரில் 21.09.2017. அன்று கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
செப்டம்பர் 23, 25, 26 ஆகிய நாட்களில் முன்னோடிப் போட்டிகள் நடைபெற்றன. அவற்றின் தொடர்ச்சியாக – திருக்குர்ஆனை மனனம் செய்த 3 மாணவியர் – ஒரே நாளில் முழு குர்ஆனையும் மனனமாக ஒப்புவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
24.09.2017. வியாழக்கிழமையன்று கல்லூரி மாணவியர் பங்கேற்ற வினாடி-வினா போட்டி நடைபெற்றது. 05.10.2017. வியாழக்கிழமையன்று “உம்மத்தின் மீது உத்தம நபியின் கவனம்” எனும் தலைப்பில் மாணவியருக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்ச்சிகள்:
மகளிருக்கான முதல் நாள் நிகழ்ச்சி மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபில், 06.10.2017. வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. குருவித்துறைப் பள்ளி & புகாரி ஷரீஃப் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் தலைமை தாங்க, ஹாஃபிழ் கே.எம்.இஃப்திகாருத்தீன் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். இதன்போது – கல்லூரியின் மக்தப் பிரிவு மாணவியருக்கான சூரா மனனப் போட்டியும், பட்டம் பெறும் மாணவியருக்கான வினாடி-வினா போட்டியும் நடைபெற்றன.
குருவித்துறைப் பள்ளியின் துணை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.ஜாஃபர் ஸாதிக் துஆவுடன் அந்நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்:
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் 07.10.2017. சனிக்கிழமையன்று நடைபெற்றன. திருமறை குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழாக்களுக்கான திருக்குர்ஆன் மனனப் போட்டி, மாணவியர் சன்மார்க்க நிகழ்ச்சிகள், கல்லூரியின் ரகீபாக்களும் – ஆசிரியையரும் பங்கேற்ற மிஷ்காத்துல் மஸாபீஹ் ஹதீஸ் போட்டி ஆகியன நடைபெற்றன.
நிறைவு நாள் நிகழ்ச்சிகள்:
நிறைவு நாள் நிகழ்ச்சிகள் – ஆண்கள் நிகழ்ச்சிகளாக 08.10.2017. ஞாயிற்றுக்கிழமையன்று – காலையில் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபிலும், மாலையில் குருவித்துறைப் பள்ளி மைதானத்திலும் நடைபெற்றன.
காலை நிகழ்ச்சிகளுக்கு, ‘முத்துச் சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.ஷெய்கு முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ தலைமையேற்க, ஹாஃபிழ் எம்.ஜெ.நூஹுத்தம்பி கிராஅத் ஓத, அனைவரும் எழுந்து நின்று ‘லுத்பில் இலாஹி’ இறைவேண்டற்பா பாடினர்.
ஏ.எல்.முஹம்மத் நிஜார் வரவேற்றார். தலைமையுரையைத் தொடர்ந்து, கல்லூரியின் நிறுவனர் டீ.எம்.ரஹ்மத்துல்லாஹ் கல்லூரியின் அறிக்கையை சமர்ப்பித்தார்.
சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்களான மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எம்.அப்துல்லாஹ் மக்கீ காஷிஃபீ ஃபாழில் தேவ்பந்தீ ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மவ்லவீ சொளுக்கு எஸ்.ஒய்.எஸ்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் துஆவுடன் காலை நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
மாலை நிகழ்ச்சிகள், ‘கலீஃபத்துஷ் ஷாதுலீ’ மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எச்.முஹம்மத் ஹல்ஜீ ஃபாஸீ தலைமையில் நடைபெற்றது.
ஹாமிதிய்யா ஆசிரியர் ஹாஃபிழ் என்.டீ.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மஹ்ழரா அரபிக் கல்லூரியின் ஆசிரியர் ஹாஃபிழ் காரீ சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓத, ஜாவியா அரபிக் கல்லூரியின் முதல்வர் & அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் தலைவர் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ துவக்கவுரையாற்றினார்.
இலங்கை கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் இமாம் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ, ஜாவியா அரபிக் கல்லூரி & அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இரவு அமர்வுக்கு கல்லூரியின் நிர்வாகி பிரபு எம்.ஏ.சுல்தான் தலைமை தாங்கினார். அனைவரும் நபி புகழ்பாடலை நின்று பாடினர். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ வரவேற்றார்.
சென்னை அடையாறு குராசானி மஸ்ஜிதின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.சதீதுத்தீன் ஃபாழில் பாக்கவீ இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார்.
பட்டமளிப்பு:
ஆண்கள் பகுதியிலிருந்து – ஹாமிதிய்யா ஆசிரியர் என்.டீ.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ பட்டம் பெறும் மாணவியரின் பெயர்களை வாசிக்க, பெண்கள் பகுதியில் – சிறப்பு விருந்தினர்களால் மாணவியருக்கு பட்டயங்கள் வழங்கப்பட்டன.
திருமறை குர்ஆனை முழுமையாக மனதில் ஏற்றிய 14 மாணவியருக்கு ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ பட்டயமும், கல்லூரியின் மூன்றாண்டு பாடத்திட்டத்தின் கீழ் கற்றுத் தேர்ச்சி பெற்ற 38 மாணவியருக்கு ‘ஆலிமா அரூஸிய்யா’ பட்டயமும் இதன்போது வழங்கப்பட்டன.
சிங்கை கா.ந.மன்றத்தின் ஊக்கப் பரிசு:
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் – நகர மத்ரஸாக்கள் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், ‘ஹாஃபிழத்துல் குர்ஆன்’ ஸனது பெற்ற 14 மாணவியருக்கு – தலா 2,500 ரூபாய் வீதம் மொத்தம் 35 ஆயிரம் ரூபாய் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. அம்மன்றத்தின் பிரதிநிதி கே.எம்.டீ.சுலைமான் அவற்றை கல்லூரி நிர்வாகியிடம் வழங்கினார்.
கல்லூரியின் மாணவியர் ஒன்றுகூடலின்போது பாடுவதற்காக மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ இயற்றிய அரபியிலான இறைவேண்டற்பாவையும், கல்லூரியை வாழ்த்தும் தமிழ்ப்பாடலையும் – ஹாமிதிய்யா மாணவர்கள் பாடினர்.
கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஐ.முஹம்மத் அப்பாஸ் காஷிஃபீ ஸனது விளக்கவுரையாற்றினார். கல்லூரி நிர்வாகக் குழு உறுப்பினர் பீ.எம்.என்.ரியாஸுத்தீன் நன்றி கூற, ஹிஃப்ழுப் பிரிவு ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் மிஸ்பாஹீ துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் – கல்லூரியின் மாணவியர், அவர்களது பெற்றோர், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, கல்லூரியின் தலைவர், நிர்வாகிகள், ரகீபாக்கள், ஆசிரியர்கள், மாணவியர் செய்திருந்தனர்.
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் & பட்டம் பெற்ற மாணவியர் பெயர் உள்ளிட்ட விபரங்களை உள்ளடக்கிய பிரசுரம்:-
கள உதவி:
M.A.யூஸுஃப் (CCTV) |