முகவர்களை (ஏஜென்டுகளை) நம்பி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை தேடி விசிட் விசாவில் சென்று ஏமாற்றமடைய வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தமிழ்நாட்டிலிருந்து விசிட் விசா மூலம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், வேலைக்குச் சென்ற இடத்தில் ஏமாற்றப்படுவதாகவும், உணவு, அடிப்படை வசதிகள், சம்பளம் அளிக்காமல் வேலை செய்ய துன்புறுத்தப்படுவதாகவும், இதனால் விசிட் விசா மூலம் ஐக்கிய அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டாம் என்றும் – ஐக்கிய அரபு அமீரகம் துபையிலுள்ள இந்திய தூதரகம் எச்சரித்துள்ளது.
மேற்படி ஐக்கிய நாடுகளுக்கு வேலைக்காக சென்று ஏமாற்றப்பட்டவர்களை மீட்டு இந்தியா அனுப்பி வைக்க 2016ஆம் ஆண்டில் 225 விமான டிக்கெட்டுகளும், 2017ஆம் ஆண்டில் 186 விமான டிக்கெட்டுகளும் அளித்துள்ளதாக இந்திய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்திய அரசாங்கத்தின் E-Migrate online Recruitment மூலம் எமிக்கிரேஷன் க்ளியரன்ஸ் (Emigration Clearance) பெற்று வேலைக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஏஜென்ட்டுகள் விசிட் விசா மூலம் ஐக்கிய அரபு நாடுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறுவதை நம்பிச் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|