காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு இரத்த தட்டணுக்களைக் கணக்கிடும் கருவி தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற விழாவில், தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் அதன் பயன்பாட்டைத் துவக்கி வைத்துள்ளனர். விரிவான விபரம்:-
தூத்துக்குடி மாவட்டம் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், இரத்த தட்டணுக்களைக் கணக்கிடும் கருவி பயன்பாடு துவக்க விழா மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மூ.வீரப்பன் தலைமையில் நடைபெற்றது. 12.10.2017. வியாழக்கிழமையன்று 11.00 மணிக்கு நடைபெற்றது.
தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் கருவி பயன்பாட்டைத் துவக்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது:-
மறைந்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அனைத்தையும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பொது சுகாதாரத் துறையின் மூலம் மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் – டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டம், அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம், சிறப்பு மருத்துவ முகாம்கள் என பல்வேறு சிறப்பு திட்டங்கள் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நமது மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இரத்த தட்டணுக்கள் கணக்கிடும் கருவிகள் 24 வழங்கப்பட்டுள்ளன. ஒரு கருவியின் மதிப்பு 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் ஆகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் பருவ மழைக்காலங்களின்போது ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்துவதற்கும், குறிப்பாக டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து அவற்றை அழிப்பதற்கும் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில், டெங்கு தடுப்பு நாள் என அனுசரித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவரபடுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுகாதாரத்தை ஏற்படுத்திட பொதுமக்கள், அரசு அலுவலர்கள் இணைந்து, சுகாதாரப் பணிகள் முழு வீச்சுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில், தாமதமின்றி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு காலையும், மாலையும் இரத்த தட்டணுக்கள் கணக்கிடும் கருவியின் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியப்பட்டு, அதற்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எவ்வித அச்சப்பட வேண்டாம்.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனையாக செயல்பட வேண்டும் என்ற - இப்பகுதி மக்களின் கோரிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சீறாப்புராணம் இயற்றிய அமுதகவி உமறுப்புலவர் அவர்களைச் சிறப்பிக்குமாறு இந்தப் பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் அளித்த கோரிக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. நீங்கள் அளித்த கோரிக்கையை ஏற்று இந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி முதல், ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசு சார்பில் அமுதகவி உமறுப்புலவர் அவர்களைச் சிறப்பிக்கும் வகையில் விழா நடத்தப்படும் என்ற நல்ல செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். இவ்விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.டீ.ஆர்.ராஜகோபால், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கணேஷ்குமார், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.கீதாராணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
விழா நிறைவில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களைத் தடுக்கும் நிலவேம்புக் குடிநீரை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் – காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கிடம் வழங்கி வினியோகத்தைத் துவக்கி வைத்து, தொடர்ந்து நகராப் பிரமுகர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினர்.
|