காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற விழாவில், மருத்துவமனை மேம்பாடு தொடர்பான கோரிக்கைகளை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் – தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம்:-
தூத்துக்குடி மாவட்டம் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், இரத்த தட்டணுக்களைக் கணக்கிடும் கருவி பயன்பாடு துவக்க விழா மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மூ.வீரப்பன் தலைமையில் நடைபெற்றது. 12.10.2017. வியாழக்கிழமையன்று 11.00 மணிக்கு நடைபெற்றது.
இவ்விழாவின்போது, மருத்துவமனை மேம்பாடு தொடர்பான கோரிக்கைகளை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக அதன் மகளிர் பிரிவு நிர்வாகியும் – காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக் – தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்.
>>> மகப்பேறு மருத்துவர் நிரந்தரமாக நியமிக்கப்பட வேண்டும்
>>> இம்மருத்துவமனை தாலுகா அளவிலான மருத்துவமனையாகத் தரமுயர்த்தப் பட வேண்டும்.
>>> ஆய்வுக் கூடம் (Laboratory) தனிக் கட்டிடத்தில் அமைக்கப்பட வேண்டும்
>>> மருத்துவமனை வளாகத்தில் புற நோயாளிகள், உள் நோயாளிகள் பயன்பாட்டுக்காக எந்நேரமும் கிடைக்கும் வகையில் சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்
>>> மருத்துவமனையில் தெரு நாய் தொல்லைகள் முழுமையாக போக்கப்பட வேண்டும்.
ஆகியன உட்பட பல்வேறு கோரிக்கைகள் அம்மனுவில் இடம்பெற்றிருந்தன.
அக்கோரிக்கைகள் தொடர்பாக – தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களிடமும் ஐ.ஆபிதா ஷேக் விளக்கமளித்தார்.
நிகழ்ச்சியின் நிறைவில், காயல்பட்டினம் நகராட்சி சார்பாக மருத்துவமனை வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. நகராட்சி ஆணையர் பொன்னம்பலம், மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் (MEGA) துணைத் தலைவர் ஏ.எஸ்.புகாரீ உள்ளிட்ட அரசு அதிகாரிகள் / நகரப் பிரமுகர்கள் மரங்களை நட்டு நீர் பாய்ச்சினர்.
|