மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராகச் செயல்படுவதாக காயல்பட்டினத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக சட்டமன்றக் கட்சித் தலைவரும் – அதன் மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. காயல்பட்டினத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அளித்த பேட்டி வருமாறு:-
மத்தியில் பா.ஜ.க. பொறுப்பேற்ற பிறகு சிறுபான்மை சமுதாய மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. இங்கு பல்வேறு மொழி, இனம், கலாச்சாரங்களை கொண்டது.
ஆனால் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை அடிப் படையாக கொண்ட ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மக்கள் என்ற ரீதியில் மத்திய அரசு செயல்படுகிறது. இதற்காக மற்ற கட்சிகளை தடை செய்வது, உரிமைகளை பறிப்பது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்து வது, ஹஜ் பயணிகளுக்கு மானியத்தை நிறுத்துவது, சுற்றுலா தலங்களின் பெயர் பட்டியலிலிருந்து தாஜ்மஹால் பெயரை அகற்றியது, கல்வி கொள்கைகளை மாற்றியது, இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை திணிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. தமிழக அரசும் இதை கண்டு கொள்ளாமல் மத்திய அரசை கண்மூடித்தனமாக ஆதரித்து வருகிறது.
காயல்பட்டினத்தில் வரும் அக்டோபர் 14ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சிறுபான்மையினர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது. தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், சிறுபான்மை யினரின் கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாத்திட இம்மாநாட்டில் உறுதிமொழி ஏற்கப்படும். இம்மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 250 பள்ளிவாசல் ஜமாஅத்கள் பங்கேற்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து வரும் 28ம் தேதி கடலூரிலும், டிசம்பர் 23ம் தேதி திருச்சியிலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி கடையநல்லூரிலும் இம்மாநாடு நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இம்மாநாடு நடத்தி முடிக்கப்படும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் நூற்றுக்கணக் கானவர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த பாதிப்பு அதிகரித்து விட்டது.
அதிமுக கட்சி குழப்பத்தை மட்டும் பார்க்காமல் மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டும். தமிழகத்திலுள்ள குழப்பமான சூழ்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற கவர்னர் இதற்குத் தீர்வு காண வேண்டும். தமிழக அரசு 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டும் அது தொடர்பாக அரசு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சியியினர் ஓரணியில் நின்று வலியுறுத்தி வருகிறோம்.
மேலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீதும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு ஜனநாயகத்தை செயல் இழக்க செய்துவிட்டனர். இவ்விஷயத்தில் தமிழக கவர்னர் எந்தவித நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் பாரபட்சமற்ற முறையில் ஜனநாயகத்தை தழைக்க செய்ய வேண்டும். மத்தியஅரசு நதிநீர் பிரச்சினை, காவிரி நீர், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எந்த திட்டங்களுக்கும் தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமையவேண்டும். இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாநாடு அச்சாணியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச்செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கீ, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் வாகித், சுல்தான், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் என்.டி. முஹம்மது இஸ்மாயில், மாவட்ட எஸ்.டி.யூ. செயலாளர் எலக்ட்ரிஷன் பஷீர், காயல்பட்டினம் நகர தலைவர் என்.ஏ. முஹம்மது ஹஸன், நகர செயலாளர் ஏ.எல்.எஸ். அபுசாலிஹ், நகர பொருளாளர் கே.எம்.என். மஹ்மூது லெப்பை , வார்டு பிரைமரி நிர்வாகிகள் பி.எம்.எஸ். அமானுல்லாஹ், ஏ.கே. மஹ்மூது சுலைமான், எம்.டி.ஏ. மஹ்மூது முகைதீன், என்.டி. அஹமது சலாவுதீன்,எம்.இஸட். சித்தீக், கே.என்.டி. அபூபக்கர் சித்தீக்,கே.வி.எச்.எம். மஹ்மூது ஜிப்ரி உள்ளிட்ட நிர்வாகிகள் பேட்டியின் போது உடனிருந்தனர்.
|