காயல்பட்டினம் புன்னகை மன்றம் வாட்ஸ்அப் குழுமம், அரிமா சங்க காயல்பட்டினம் கிளை, திருநெல்வேலி அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை, அல்அமீன் மழலையர் & துவக்கப் பள்ளி ஆகியன இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாமில் 490 பேர் பங்கேற்றுள்ளனர். விரிவான விபரம்:-
காயல்பட்டினம் புன்னகை மன்றம் வாட்ஸ்அப் குழுமம், அரிமா சங்க காயல்பட்டினம் கிளை, திருநெல்வேலி அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை ஆகியன இணைந்து, காயல்பட்டினம் அல்அமீன் மழலையர் & துவக்கப் பள்ளியின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, அப்பள்ளி வளாகத்தில் 15.10.2017. ஞாயிற்றுக்கிழமையன்று பொது மருத்துவ இலவச முகாமை நடத்தின.
துவக்க நிகழ்ச்சிக்கு அல்அமீன் பள்ளி நிர்வாகி எஸ்.ஓ.அபுல் ஹஸன் கலாமீ தலைமை தாங்கினார். அதன் தாளாளர் எம்.ஏ.புகாரீ வரவேற்றார். ‘புன்னகை மன்றம்’ வாட்ஸ்அப் குழும நிர்வாகி ஏ.எல்.முஹம்மத் நிஜார் முகாம் அறிமுகவுரையாற்றினார். அரிமா சங்க துணை ஆளுநர் ஜெ.கே.ஆர்.முருகன் முகாமைத் துவக்கி வைத்தார். காயல் அமானுல்லாஹ் நன்றி கூறினார்.
பின்னர் பேசிய மருத்துவர்கள், மனநலம் - புற்றுநோய் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வுரையாற்றினர்.
தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ முகாமில், திருநேல்வேலி அன்னை வேளாங்கன்னி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ஜிஜி செல்வன் தலைமையில், அதன் மருத்துவர்கள், அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள், காயல்பட்டினம் நகரில் மருத்துவப் பணியாற்றும் உள்ளூர் மருத்துவர்கள் என ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்று, மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
இதில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த 490 பேர் பங்கேற்று, மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை, ‘புன்னகை மன்றம்’ வாட்ஸ் அப் குழுவினரும், அல்அமீன் பள்ளி அங்கத்தினரும் இணைந்து செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
A.L.முஹம்மத் நிஜார்
|