எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி ஆகியன இணைந்து, 08.10.2017 ஞாயிறன்று, அப்பள்ளி வளாகத்தில் - சிறப்பு இயற்கைக் கல்வி முகாம் ஒன்றை நடத்தின. இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:
இந்த செய்தியறிக்கையின் உள்ளடக்கங்கள்:
(அ) இரண்டாவது இயற்கை முகாம்
(ஆ) குயவுக் கலை
(இ) குறும்படங்கள் திரையிடல்
(ஈ) பறவைகளை அறிதல்
(உ) நல்லுணவும் இறை வழிபாடும்
(ஊ) கதை நேரம்
(எ) நூல் கொடை
(ஏ) மரக்கன்றுகள் நடுதல்
(ஐ) பரிசளிப்பு விழா & கருத்துகேட்பு
(ஒ) செய்ந்நன்றி மறவேல்
(ஓ) ஒளிப்பட செருகேடு
(ஔ) தொடர்புடைய முந்தைய பதிவுகள்
(அ) இரண்டாவது இயற்கை முகாம்!
நூலாய்வு, திரையிடல் & விவாத அரங்குகள் போன்ற நிகழ்வுகளின் மூலம், நகர மக்களிடம் மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் தனித்த சிந்தனைத் தளமாக விளங்கும் எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பு, சிறார் நிகழ்ச்சிகளுக்கென்று “கண்ணும்மா முற்றம்” எனும் பெயரில் தனித்துவமான நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
அவ்வகையில், இவ்வமைப்பின் 19-வது நிகழ்வாகவும் & “கண்ணும்மா முற்றம்” பிரிவின் 5 வது அமர்வாகவும், முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளி இணைவில் – பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு முகாம் ஒன்று - 08.10.2017 ஞாயிறன்று நடத்தப்பட்டது.
சென்ற ஆண்டு (30.10.2016) சிறப்பாக நடந்தேறிய “இயற்கையோடு இணைவோம்” இயற்கைக் கல்வி முகாமின் தொடர்ச்சியாக அமைந்த இந்நிகழ்வில், மதுரையை சார்ந்த பறவை ஆர்வலர் திரு. இரவீந்திரன் நடராஜன் & ஆழ்வார் திருநகரியை சார்ந்த குயவர் திரு. தர்மலிங்கம் ஆகியோர் சிறப்பு பயிற்சியாளர்களாக பங்கேற்றனர்.
முன்னதாக, காயல்பட்டினத்திலுள்ள பள்ளிகளுக்கு நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வழங்கப்பட்டு, அப்பள்ளிகளின் மூலமே மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. அவ்வகையில், 4 பள்ளிகளில் இருந்து மொத்தம் 71 மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
ஓவியர் திரு. மஹாராஜனின் (சன் ஆர்ட்ஸ்) கைவண்ணத்தில் உருவான கோணிப் பை பதாகைகள், நம்மிடம் வழமையாகிவிட்ட டிஜிட்டல் ஃபிளக்ஸ் / வினைல் பதாகைகளுக்கு பகரமாக அமைந்தன.
முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளியின் நிறுவனர் ஹாஜி அப்துல் லத்தீஃப் நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்றார். அப்பள்ளியின் துனை செயலாளர் ஜனாப் கே.எம்.டீ.சுலைமான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, முறையே அதற்கான ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தார்.
சென்ட்ரல் மேனிலைப் பள்ளி மாணவர் இளவல் கே.எம்.எஸ்.முஹம்மது ஹஸன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளை துவங்கி வைத்தார். பின்னர், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் அ.ர.ஹபீப் இப்றாஹீம், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்று, நிகழ்ச்சியின் நோக்கத்தை சுருக்கமாக கூறி, இரு பயிற்சியாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
(ஆ) குயவுக் கலை
நெகிழிப் பொருட்களின் வருகையால் இன்று அரிதாகிப் போன குயவுக் கலையை, ஆழ்வார் திருநகரியை சார்ந்த குயவர் திரு தர்மலிங்கம், முகாமில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, செய்முறை பயிற்சியும் வழங்கினார். பின்னர், திரு இரவீந்திரன் நடராஜன் மண்பாண்டங்களின் சிறப்பு குறித்து உரையாற்றினார்.
மண்பாண்டங்களினால் ஆன விளையாட்டுப் பொருட்களோடு - தங்களின் நேரத்தை செலவிடும் வாய்ப்பினைப் பெற்றிடாத இன்றைய குழந்தைகளுக்கு, இந்நிகழ்வு ஒரு வித்தியாசமான பட்டறிவை வழங்கியது. பல முயிற்சிகளுக்குப் பின்னும் தோல்வியுற்ற சிறுவர்களின் இந்த களிமண்-விரல் தருணங்களும்கூட, மகிழ்வையே பரிசாக அவர்களுக்கு அளித்தமை – இம்முகாமின் சிறப்பம்சமாக அமைந்தது.
(இ) குறும்படங்கள் திரையிடல்
குயவுக் கலை செய்முறை பயிற்சிக்குப் பின்னர், ஒளி விரிதிரை உதவியுடன், ஸ்டீவ் கட்ஸ் (Steve Cutts) இயக்கிய “மேன்” (Man - https://www.youtube.com/watch?v=WfGMYdalClU) எனும் ஆங்கில கோட்டோவிய (animation) குறும்படமும், ஸ்ரீ கணேஷ் இயக்கிய “501” (https://www.youtube.com/watch?v=h4qZyRZYnZM) எனும் தமிழ் குறும்படமும் மாணவர்களுக்கு திரையிடப்பட்டன.
இந்த இருவேறு குறும்படங்களும், மனிதன் பிற உயிர்களை மதிக்கத் தவறுவதை அழகாக சுட்டிக்காட்டுகின்றன.
(ஈ) பறவைகளை அறிதல்
மதுரை இயற்கை பேரவையின் (Madurai Nature Forum) ஒருங்கிணைப்பாளரும், பறவைகள் காணும் கலையின் (bird watching or birding) ஆர்வலருமான, திரு. இரவீந்திரன் நடராஜன், தான் எடுத்த ஒளிப்படங்களின் உதவியுடன் - காட்டுயிர்களின் (குறிப்பாக பறவைகள்) முக்கியத்துவத்தை விளக்கினார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணித்து, சுற்றுச்சூழலைப் பேணுவதன் அவசியத்தை எளிதாக புரியும் வண்ணம் சிறாருக்குக் கற்பிக்கும் இவர், 2011ஆம் ஆண்டு, பம்பாய் இயற்கை வரலாறு சங்கத்தில் (Bombay Natural History Society) பறவையியலை (ornithology) முறையாகக் கற்றவர். இவர் பறவைகள் & வனவிலங்குகள் கணக்கெடுப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(உ) நல்லுணவும் வழிபாடும்
காலை வேளை சிறுகுடி/கடி வகைக்காக, குளிர்ச்சியான மோரும் சுண்டலும் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது. ளுஹ்ர் தொழுகைக்கான நேரத்தையடைந்ததும், கூட்டாக தொழுகை நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது.
(ஊ) கதை நேரம்
சூழலியல் சார்ந்த சிறார் கதை நூல்களான ‘தும்பி’ & ‘குட்டி ஆகாயம்’ ஆகியவற்றை மாணவர்களுக்கு அறிமுகம் செய்த ஜனாப் அ.ர.ஹபீப் இப்றாஹீம், தும்பி நூலின் இரண்டாம் இதழில் வெளியான ‘பறவையை நேசித்த மலை’ (The Mountain That Loved a Bird) எனும் கதையை அவர்களுடன் சுருக்கமாக பகிர்ந்துகொண்டார்.
(எ) நூல் கொடை
அதனை தொடர்ந்து, மற்றுமொரு சூழலியல் சிறார் வெளியீடான ‘பூவுலகு மின்மினி’ நூலை திரு. இரவீந்திரன் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், இம்முகாமில் கலந்துகொண்ட 4 பள்ளிகளின் நூலகங்களுக்கும், பூவுலகு அமைப்பின் சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இந்நூலை – நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்களான ஜனாப் கே.எம்.டீ.சுலைகான் & ஜனாப் கவுஸ் முஹம்மது ஆகியோரிடம் அவர் வழங்கினார்.
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு சார்பில் ’தும்பி’, ‘குட்டி ஆகாயம்’ & ‘பூவுலகு மின்மினி’ ஆகிய சிறார் நூல்களின் ஓராண்டு கட்டணம் அன்பளிப்பாக செலுத்தப்பட்டு, அவை காயல்பட்டினம் அரசு பொது நூலகத்துக்கு கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ஏ) மரக்கன்றுகள் நடுதல்
முகாமின் ஒரு பகுதியாக, பள்ளி வளாகத்தில் நாட்டு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் தலைவர் ஜனாபா ஆபிதா ஷேக் தலைமையேற்று சிறப்பித்தார்.
இயற்கை ஆர்வலரான ஜனாப் கவுஸ் முஹம்மது மரம் வளர்ப்பதன் சிறப்பு குறித்து இந்நிகழ்வின் போது மாணவர்களுக்கு விளக்கி - செய்முறை பயிற்சி வழங்க, முஹ்யித்தீன் மேனிலைப் பள்ளியின் தோட்டப் பராமரிப்பாளர் திரு. சாமி மரக்கன்றுகளை மாணவர்கள் நடுவதற்கு உதவிப் புரிந்தார்.
(ஐ) பரிசளிப்பு விழா & கருத்துகேட்பு
முகாமில் கலந்துகொண்டு பயனடைந்த மாணவர்களுக்கு, ‘தும்பி’ & ‘குட்டி ஆகாயம்’ சிறார் நூலகள் துணிப் பைகளில் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. கூடவே, அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி நற்சான்றிதழ் ஒன்றும் வழங்கப்பட்டது.
அன்பளிப்புகளை திரு.இரவீந்திரன், ஜனாபா ஆபிதா ஷேக், ஜனாப் கே.எம்.டீ. சுலைமான் & ஜனாப் கவுஸ் முஹம்மது ஆகியோர் வழங்கினர்.
முகாமில் சிறப்பு பயிற்சியளித்த குயவர் திரு. தர்மலிங்கம் அவர்களுக்கு - ஜனாப் கே.எம்.டீ. சுலைமான் அவர்களும் & பறவை ஆர்வலர் திரு. இரவீந்திரன் அவர்களுக்கு - ஜனாபா ஆபிதா ஷேக் அவர்களும் பொன்னாடை வழங்கினர்.
கூடவே, திரு. இரவீந்திரன் அவர்களுக்கு, கீழ் வரும் சிறப்பு நூல்களை, ஜனாப் கே.எம்.டீ. சுலைமான் நினைவுப் பரிசாக வழங்கினார்: விலங்குப் பண்ணை (ஜார்ஜ் ஆர்வல்), வான்காரி மாத்தாய் (பேரா.ச.வின்சென்ட்) & சுற்றுச் சூழலியல்: உலகம் தழுவிய வரலாறு (ராமசந்திர குஹா).
பின்னர் நடைபெற்ற முகாம் குறித்த கருத்துகேட்பின் போது, மண்பாண்டங்கள் செய்து மகிழ்ந்ததை மாணவர்கள் நினைவுக்கூர்ந்தனர். அவ்வப்போது கண்களில்பட்டும், ஆனால் கண்டுகொள்ளாமல் இருந்த பல்வேறு பறவைகளைப் பற்றிய தகவல்களை அறிந்தது - மிகவும் பயனளித்ததாக அவர்கள் தெரிவித்தனர். கூடவே, அவர்களுக்கு அன்பளிப்பாக கிடைத்த வண்ண கதை நூல்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
(ஒ) செய்ந்நன்றி மறவேல்
வல்ல இறைவனின் அருளுக்குப் பின்பு, பலரது உழைப்பும் இந்நிகழ்வின் வெற்றிக்கு வித்திட்டது. மாணவர்களோடு கலந்துரையாட ஆவலோடு மதுரையில் இருந்து வருகைத் தந்த திரு. இரவீந்திரன்; தான் கற்ற கைவினைத் திறனை பகிர்ந்த ஆழ்வார் திருநகரி குயவர் திரு. தர்மலிங்கம் & அவருடன் பணியாற்றும் திரு. மாயாண்டி சேகர்; இடம் தந்து உதவிய முஹ்யித்தீன் மேனிலைப் பள்ளி நிர்வாகம், அதன் அலுவலர் ஜனாப் ஷேக் முஹம்மது, தோட்டப் பராமரிப்பாளர் திரு. சாமி & இன்ன பிற பள்ளி ஊழியர்கள்; மாணவர்களை அனுப்பிய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் & மாணவர்களுடன் முகாமுக்கு வந்த ஆசியரியப் பெருமக்கள்; பள்ளிகளின் நூலகங்களுக்கு வழங்குவதற்காக, ‘பூவுலகு மின்மினி’ நூலை அன்பளிப்பாக திரு.இரவீந்திரனுக்கு அனுப்பி தந்த திரு.ராஜாராம்; & இன்னும் இப்பட்டியலில் விடுபட்டுப்போன அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
(ஓ) ஒளிப்பட செருகேடு (Photo Album)
முகாமில் எடுக்கப்பட்ட அனைத்து ஒளிப்படங்களையும், தனி உயர்தெளிவான படங்களாக (high-resolution images) பதிவிறக்கம் செய்திட கீழுள்ள வலைப்பக்கத்தை சொடுக்கவும்:
https://www.irista.com/gallery/ftnnuu1b2jia
(ஔ) தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
1> அக்டோபர் 08-இல் இயற்கை முகாம்! எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு!!!
(16.09.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19701)
2> “கண்ணும்மா முற்றம்” எனும் பெயரில் “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” அமைப்பின் கீழ், சிறார் நிகழ்ச்சிகளுக்கென்று தனி பிரிவு துவக்கம்!!! நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல்!!!
15.09.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19700)
3> “இயற்கையோடு இணைவோம்!” - கத்தர் காயல் நல மன்றம் & இக்ராஃ கல்விச் சங்கம் இணைவில் சிறப்பு முகாம்! 3 பள்ளிகளிலிருந்து 54 மாணவர்கள் பங்கேற்பு!!
(30.10.2016; http://www.kayalpatnam.com/shownews.asp?id=18428)
4> பறவை ஆர்வலர் திரு இரவீந்திரன் நடராஜன் அவர்களின் நேர்காணல்
(23.07.2016; http://www.kayalpatnam.com/columns.asp?id=200)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள உதவி:
ஷேக் முஹம்மது (MMHSS)
ஒளிப்படங்கள்:
அ.ர. ஹபீப் இப்றாஹீம், கவுஸ் முஹம்மது & பள்ளி மாணவர்கள்
செய்தியாக்கம்:
அ.ர. ஹபீப் இப்றாஹீம்
|