காயல்பட்டினம் அரசு பொது மருத்துவமனையிலுள்ள ஆண் உள்நோயாளிகள் பிரிவில் குடிநீர், மின் விளக்கு வசதிகள் செய்து தரக் கோரியும். மருத்துவமனை வளாகத்தில் தெரு நாய்களின் தொல்லையை முற்றிலுமாக நீக்கக் கோரியும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலருக்கும், தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறைக்கும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் பல்வேறு தேவைகள் குறித்து கோரிக்கை மனு, நடப்பது என்ன? குழுமம் சார்பாக, சென்னையில் - தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலர் திரு ஜெ.ராதாகிருஷ்ணன் IAS அவர்களிடமும், மருத்துவத்துறை இயக்குனர் (DMS) டாக்டர் பி.பானு அவர்களிடமும் - இன்று வழங்கப்பட்டது.
அந்த கோரிக்கைகளில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் வருமாறு:
(1) காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஊழியர்கள், நோயாளிகள், பொது மக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் நாய்கள் குறித்து பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டு, ஊடகங்களில் செய்தி வெளிவந்த பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது
(2) ஆண்கள் வார்டில் - தண்ணீர் வசதி இல்லாமை, மின் விளக்குகள் பலநாட்களாக செயல்படாமல் இருப்பதால் - மாலை மற்றும் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு வருவோர் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர்
(3) அரசு மருத்துவமனைக்கு, போதிய அளவில், துப்புரவு மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் நியமனம் செய்யப்படவேண்டும்
(4) காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் இணைக்கப்பட்டுள்ளதாக காண்பிக்கப்பட்டு, NRHM திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக பணிப்புரியும் டாக்டர் ஹேமலதா அவர்களின் இடத்தை காலியாக அறிவித்து, அவ்விடத்தில் (நான்காவது) நிரந்தர மருத்துவர் நியமனம் செய்யப்படவேண்டும்
(5) காயல்பட்டினம் அரசு மருத்துவமனை - தாலுகா தகுதியிலான அரசு மருத்துவமனையாக தகுதி உயர்த்தப்படவேண்டும்
(6) காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக மகப்பேறு மருத்துவர் (DGO), அறுவை சிகிச்சை நிபுணர் (SURGEON) மற்றும் மயக்க மருந்து நிபுணர் (ANAESTHETIST) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவமனையாக மாற்றப்படவேண்டும்
(7) காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் தற்போது சிறப்பாக, வாரத்திற்கு மூன்று தினங்கள் செயல்படும் பல்மருத்துவ வசதி, நவீன உபகரணங்களுடன் - வாரம் முழுவதும் இயங்கும் விதமாக மாற்றப்படவேண்டும்
(8) காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், மருத்துவ சோதனை கூடம் (LABORATORY) தனி கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு, நவீன கருவிகள் நிறுவப்பட்டு, அரசின் "அம்மா முழுஉடல் பரிசோதனை திட்டம்" அமல்படுத்தப்படவேண்டும்
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 20, 2017; 7:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|