காயல்பட்டினத்தில் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல் தொடர்பாக, கடந்த நகர்மன்றத்தில் தலைவராக இருந்த ஐ.ஆபிதா ஷேக் மீதும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் மீதும் சிலர் பரப்பிய அவதூறுகளைக் கேள்விகளாக்கி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன?” குழுமம் விளக்கம் பெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் (URBAN PHC) அமைக்கப்படும் என தமிழக அரசு, 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது. அம்மாத இறுதியிலேயே, அரசுக்கு - கோமான் ஜமாஅத் வழங்கிட இசைவு தெரிவித்த இடத்திலேயே, இக்கட்டிடத்தைக் கொண்டு வரலாம் என திருமதி ஐ.ஆபிதா ஷேக் தலைமையிலான நகர்மன்றம் ஒப்புதலும் அளித்தது.
அதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் (2012) - வாடகைக் கட்டிடம் ஒன்றில், ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படத் துவங்கியது. அதற்குத் தேவையான 50 சென்ட் நிலத்தை, அதே ஆண்டு, டிசம்பர் மாதம் கோமான் ஜமாஅத்தும் அரசுக்கு எழுதி வைத்தது. அதன் பிறகு, இத்திட்டம் தொடர்பாக எவ்வித முன்னேற்றமும் நிகழவில்லை.
இதுகுறித்து அப்போதைய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - பல்வேறு அதிகாரிகளை சந்தித்து வினவியபோதெல்லாம், அது தொடர்பாக தணிக்கைத் துறை சில ஆட்சேபனைகளைத் தெரிவித்துள்ளதாகக் கூறினர்.
அந்தத் தணிக்கைத் தடையை போக்குவதற்காக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக, கடந்த சில மாதங்களாக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அரசு மூலம் நிதி ஒதுக்கப்பட்டது என்றும், அதனை முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் மற்றும் “நடப்பது என்ன?” குழுமத்தைச் சார்ந்தவர்கள் திருப்பி அனுப்பிடச் செய்தார்கள்" எனவும் ஜெய்னுலாப்தீன் என்பவரும், முண்ட சாமி என்பவரும், ஷாம் ஷிஹாபுதீன் என்பவரும், சுலைமான் என்பவரும் அவதூறு செய்தி வெளியிட்டு, சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்பினர்.
உண்மைக்குப் புறம்பான இந்தத் தகவலை வெளியிட்டவர்கள், 30 தினங்களுக்குள் - அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்று “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்ததது.
இந்த அவதூறைப் பரப்பிய நபர்கள், இன்றைய நாள் வரை அதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
இவ்விஷயத்தின் உண்மை நிலையை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் நோக்குடன், இது சம்பந்தமான ஐந்து கேள்விகளை – “நடப்பது என்ன?” குழுமம், DIRECTORATE OF PUBLIC HEALTH AND PREVENTIVE MEDICINE (DPH) என்ற அரசு அமைப்பின் பொது தகவல் அலுவலரிடம் – தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தது. அதற்கான பதில்கள் தற்போது பெறப்பட்டுள்ளன.
“நடப்பது என்ன?” குழுமம் மூலம், பொது தகவல் அலுவலரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கான பதில்களும் கீழே:-
(1) அரசாணை வெளிவந்த பின்னர், காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தமிழக அரசு ஏதாவது நிதி ஒதுக்கியதா? ஆம் எனில், ஒதுக்கப்பட்ட தொகை விபரம், தேதி மற்றும் அது சம்பந்தமான ஆணை ஆகியவற்றை வழங்கவும்.
இல்லை
(2) (நிதி ஒதுக்கப்பட்டிருந்தால்), நகராட்சியினால் அந்த நிதி பயன்படுத்தப்படாத காரணத்திற்காக - காலாவதியானதா? ஆம் எனில் - காலாவதியான தேதியை வழங்கவும்.
கேள்வி எழவில்லை
(3) (நிதி ஒதுக்கப்பட்டிருந்தால்), நகராட்சியினால் அந்த நிதி, அரசுக்கு திருப்பி - அனுப்பப்பட்டதா? ஆம் எனில் - திருப்பி அனுப்பப்பட்ட தேதியும், அதற்கு தெரிவிக்கப்பட்ட காரணத்தையும் வழங்கவும்.
கேள்வி எழவில்லை
(4) காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க - ஏதாவது அமைப்பு, எதிர்ப்பு தெரிவித்ததா? ஆம் எனில் - அந்த அமைப்பின் பெயரையும், தெரிவிக்கப்பட்ட காரணங்களையும் வழங்கவும்.
இல்லை
(5) காயல்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட, தணிக்கைத்துறை ஏதாவது ஆட்சேபனை தெரிவித்துள்ளதா? ஆம் எனில் - ஆவணத்தின் நகலை வழங்கவும்.
ஆம். ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் மீதும், முன்னாள் நகர்மன்றத் தலைவர் மீதும் சொல்லப்பட்ட குற்றச்சாட்டு - திட்டமிட்ட அவதூறு, என்பதையே மேலே உள்ள பதில்கள் உறுதி செய்துள்ளன.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன, சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 21, 2017; 11:59 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|