தமிழக அரசின் கேபிள் டீவி இலவச செட் டாப் பாக்ஸ் பெற ரூ. 200 மட்டும் செலுத்துமாறும், அரசு கேபிள் நிறுவனத்திற்கும் - AMN நிறுவனத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், “நடப்பது என்ன?” குழுமத்திற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினத்தில் கடந்த சில ஆண்டுகளாக - அரசு கேபிள் நிறுவனம் மூலம் - 10 உள்ளூர் கேபிள் நிறுவனங்கள், சேவைகளை வழங்கி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக, உள்ளூர் கேபிள் நிறுவனங்களில் சில - தனியார் நிறுவனம் ஒன்றின் SET TOP BOX யை அதிக விலைகொடுத்து வாங்கிட, சந்தாதாரர்களை வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, இது சம்பந்தமாக - மாவட்ட ஆட்சியரிடம், பல்வேறு தருணங்களில் - நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் மூலமாக, புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டன.
சமீபத்தில் கொடுக்கப்பட்ட மனுவில் - இது சம்பந்தமாக நகரில் விழிப்புணர்வு முகாம் ஒன்றினை நடத்தவும் கோரப்பட்டிருந்தது. அவ்வாறு விழிப்புணர்வு முகாம் நடத்திட உத்தரவிட, மாவட்ட ஆட்சியரும் உறுதி அளித்துள்ளார்.
இதற்கிடையே, சமீபத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு, அதிகாரப்பூர்வமாக - தற்போது பதில் வழங்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
-----------------------
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழங்கியுள்ள பதில்
காயல்பட்டினத்தில் மட்டும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் 10 நபர்களுக்கு உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் வட்டத்தில் டிஜிட்டல் சேவை அமைத்திட பூர்வாங்க பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் விரைவில் விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.
இதற்கு பொது மக்கள் சம்பந்தப்பட்ட உள்ளுர் கேபிள் டிவி ஆபரேட்டருக்கு செட்டாப் பாக்ஸ் செயல்படுத்தும் கட்டணமாக ரூ.200/- மட்டும் வசூலித்திட (செலுத்திட) அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தவிர வேறு எந்த கட்டணமும் செலுத்திட வேண்டாம்
மேலும் AMN நிறுவனத்தினர் தனியாக மத்திய அரசிடம் டிஜிட்டல் உரிமம் பெற்று தனது (தங்களது) சொந்த செட்டாப் பாக்ஸ் வழங்கி வருகின்றனர்.
அதற்கு(ம்) தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபரத்தினை தாங்கள் பொது மக்களிடம் தெரிவித்திட. கேட்டுக் கொள்ளப்படுகிறது.
----------------------------
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 25, 2017; 12:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|