எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில், காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி வளாகத்தில், 15.10.2017 ஞாயிறன்று மத்ரஸா மாணவ-மாணவியருக்கு “அரபு வனப்பெழுத்து வரைகலை” அறிமுகப் பயிற்சி பட்டறை & கலைக் கண்காட்சி (Arabic Calligraphy Introductory Training Workshop & Art Gallery) நடைபெற்றது. இது குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:
உள்ளடக்கங்கள்:
(அ) கண்காட்சியுடன் நடந்தேறிய பயிற்சி முகாம்
(ஆ) எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு
(இ) கத்தர் காயல் நல மன்றம்
(ஈ) பெங்களூரு காயல் நல மன்றம்
(உ) சிறப்பு பயிற்சியாளர்
(ஊ) நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
(எ) நிகழ்முறை
(ஏ) அரபி ஹாஜிக்கு விருது
(ஐ) சிறப்பு மொழிபெயர்ப்பாளர்
(ஒ) பரிசளிப்பு & நிறைவு விழா
(ஓ) ஒளிப்பட செருகேடு & வலையொளி காணொளி
(ஔ) தொடர்புடைய முந்தைய பதிவுகள்
(அ) கண்காட்சியுடன் நடந்தேறிய பயிற்சி முகாம்!
எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் (KWAQ) & பெங்களூரு காயல் நல மன்றம் (KWAB) இணைவில், “அரபு வனப்பெழுத்து வரைகலை”-யை (Arabic Calligraphy) நமதூரின் அரபு மத்ரஸாக்களில் பயிலும் மாணவ-மாணவியருக்கு அறிமுகம் செய்யும் பொருட்டு, சென்ற அக்டோபர் 15, 2017 ஞாயிற்றுக்கிழமை அன்று, கலைக் கண்காட்சியுடன் கூடிய அறிமுகப் பயிற்சி பட்டறை (Introductory Training Workshop & Art Gallery) ஒன்றை சிறப்புற நடத்தினோம், அல்ஹம்துலில்லாஹ்.
முன்னதாக, இப்பயிற்சி குறித்து நகரின் பல்வேறு ஆண்கள் & பெண்கள் அரபு மத்ரஸாக்கள் தொடர்புகொள்ளப்பட்டு, தனித்தனியே மாணவ-மாணவியர் சேர்க்கை நடைபெற்றது. கூடவே, கண்காட்சி குறித்து ஜும்ஆ பள்ளிகளில் பிரசுரமும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவால் வழங்கப்பட்டது.
(ஆ) எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு
சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு, திரையிடல், நூலாய்வுகள், இயற்கைக் கல்வி முகாம், கதைசொல்லல், கைவினைப் பொருட்கள் உருவாகும் பயிற்சி & விவாத அரங்கம் போன்ற பல்வேறு நிகழ்வுகளின் மூலம் - நம் மக்களிடம் மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தளமாக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” விளங்குகிறது.
இவ்வமைப்பின் புதிய முயற்சியாக அமைந்த இந்த நிகழ்வு, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பு நடத்திய 20ஆவது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
(இ) கத்தர் காயல் நல மன்றம்
பள்ளி மாணவ-மாணவியருக்கான வருடாந்திர வினாடி-வினா போட்டி & இயற்கை முகாம், பொதுமக்களுக்கான புற்றுநோய் பரிசோதனை முகாம், மாடித் தோட்டப் பயிற்சி முகாம் & உணவே மருந்து என மாறுபட்ட நிகழ்ச்சிகள் பலவற்றை முற்காலங்களில் சிறப்புற நடத்திய கத்தர் காயல் நல மன்றத்தின் நிகழ்ச்சி வரிசையில் இம்முகாமும் ஒன்று.
(ஈ) பெங்களூரு காயல் நல மன்றம்
மாணவர்களுக்கான துறைசார் ஆலோசகர் நியமனத் திட்டம் (Mentor & Mentee Programme), வேலைவாய்ப்பு தேடும் மாணவர்களுக்கான பயிற்சி & தங்கும் விடுதி ஏற்பாடு, இயலாநிலை மாணவர்களைக் கொண்ட பள்ளிக்கு அனுசரணை & உயர்கல்வி வழிகாட்டல் முகாம் போன்ற பல்வேறு சிறப்பம்சமிக்க நிகழ்ச்சிகள் / திட்டங்களை செயல்படுத்திய பெங்களூரு காயல் நல மன்றம், இம்முகாமின் மூலம் மற்ற இரு அமைப்புகளுடன் முதன்முறையாகக் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(உ) சிறப்பு பயிற்சியாளர்
இந்நிகழ்வில், பெங்களூரைச் சார்ந்த இந்திய இஸ்லாமிய கலை & பண்பாட்டு மையத்தின் (Indo-Islamic Institute of Art & Culture) நிறுவனர் ஜனாப் முஹ்தார் அஹ்மத் பயிற்சியாளராக பங்கேற்றார். இவர் அரபு வனப்பெழுத்து வரைகலையை துருக்கியில் முறையாக பயின்று-பட்டயம் (إجازة) பெற்ற முதல் & ஒரே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் நடந்த உலகளாவிய அரபு வனப்பெழுத்து வரைகலைப் போட்டியில் பங்கேற்ற 700 கலையாக்கங்களில், இவரது அழகிய ஆக்கத்திற்கு இரண்டாம் இடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், இவருடன் இவரது நேரடி மாணவர்களான ஜனாப் முஹம்மது அப்துல் சத்தார், ஜனாப் அப்துல் சத்தார் சுப்ஹான், ஜனாப் முஹம்மது அஜாருள் ஹக் & ஜனாப் அமீருள் இஸ்லாம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
(ஊ) நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கலைக் கண்காட்சி காலை 09:30 முதல் நண்பகல் 12:30 மணி வரை பெண்களுக்கும், மதியம் 01:30 முதல் மாலை 04:30 மணி வரை ஆண்களுக்கும் திறக்கப்பட்டது. இதில், ஜனாப் முஹ்தார் அஹ்மத் அவர்களின் கைவண்ணத்தில் உருவான (ரூ 10,000 முதல் ரூ 55,000 வரை மதிப்புள்ள) 20 அழகிய கலையாக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கூடவே, வனப்பெழுத்து வரைகலை தொடர்பான நூல்களும், எழுதுகோள்களும் அரங்கை அலங்கரித்தன.
காலை 11:00 மணி அளவில் துவங்கப்பட்ட பயிற்சி பட்டறையில், ஜாவியா அரபிக் கல்லூரி, முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி, ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம், மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை ஆகிய அரபிக் கல்லூரிகள் / மத்ரஸாக்களின் மாணவர்களும், இக்கலையில் ஆர்வமுள்ள தனி நபர்கள் சிலரும் கலந்துகொண்டு பயனடைந்தனர். மதியம் சுமார் 01:00 மணியளவில் நிறைவுறுவதாக இருந்த பயிற்சியானது, பயிற்சியாளர் & பயிற்சி பெறுபவர்களின் பெரும் விருப்பத்தினால், உணவு & ளுஹ்ர் வணக்க இடைவேளைக்குப் பின்னர், மதியம் 02:30 மணியளவில் மீண்டும் துவங்கப்பட்டு, மாலை 04:30 மணியளவில் நிறைவடைந்தது.
கண்காட்சி & பயிற்சி பட்டறை ஆகிய இரண்டு தனித்தனி நிகழ்ச்சிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவ்விரண்டிலுமே, பெண்கள் மிகுதியான ஆர்வம் கொண்டு பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. பெண்கள் பகுதியின் பணிகளை இக்ராஃ கல்வி சங்கத்தின் தன்னார்வலர்கள் முறையே முன்னின்று ஒருங்கிணைத்தனர்.
(எ) நிகழ்முறை
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினரும், கத்தர் காயல் நல மன்ற பிரதிநிதியுமான ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி துவங்கியதோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார். கூடவே, பயிற்சிக்கான விதிமுறைகளையும் எளிதில் புரியும் வண்ணம் இலகுவாக விளக்கினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளியின் துணைச் செயலாளர் ஜனாப் கே.எம்.டீ.சுலைமான் நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னின்று செய்திருந்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினரான ஜனாப் கவுஸ் முஹம்மது வரவேற்புரையாற்றினார்.
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் அ.ர.ஹபீப் இப்றாஹீம் அறிமுகவுரை நிகழ்த்தினார். அதில், பயிற்சியாளர் ஜனாப் முஹ்தார் அஹ்மத் & சிறப்பு விருந்தினர் ஜனாப் முஹம்மது முஹ்யித்தீன் (அரபி ஹாஜி) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து, அரபு வனப்பெழுத்து வரைகலை குறித்து சுருக்கமாக விவரித்தார்.
“அரபி ஹாஜியிடம் பயின்று அவரின் கலையை உயிர்ப்போடு வைக்கத் தவறிய நாம், இன்று ஜனாப் முஹ்தாரை அனுகியுள்ளோம். இனியும் நம் சமூகம் இழந்துவிடக் கூடாதவைகளுள் இக்கலையும் ஒன்று! எண்ணற்ற ஆலிம்களையும், ஹாஃபிழ்களையும் தன்னகத்தே கொண்ட காயல் பதியில், இக்கலையில் தேர்ச்சிபெற்ற வல்லுநர்கள் பலரும் உருவாகிட வேண்டும்!” எனவும் விருப்பம் தெரிவித்தார்.
பயிற்சியின்போது, இந்தோனெஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எழுதுகோள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, பயிற்சிக்குப் பின் அவை திரும்பப் பெறப்பட்டன. ஒரு சில ஆர்வமுள்ள மாணவர்கள் மட்டும், அவற்றை விலைகொடுத்து (ரூ 200) வாங்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, ஜனாப் முஹ்தார் அஹ்மத் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பும், கலையாக்கங்களும் ஒளிப்படங்களாக பார்வையாளர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டன.
(ஏ) அரபி ஹாஜிக்கு விருது
முஹம்மத் முஹ்யித்தீன் எனும் அரபி ஹாஜியார், நமதூரின் எண்ணற்ற வீடுகளது முகப்புகளிலும், பள்ளிவாசல்களிலும், பலகைகளிலும் அரபு எழுத்துக்களை அழகுற பதிக்கும், நவீன காயலின் ஒரே “கல் செதுக்குக்கலை வல்லுநர் (Stone Carving Expert)” ஆவார்.
நமதூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பிற இடங்கள் & இலங்கையிலும், தமிழ், அரபு, ஆங்கிலம் & மலையாளம் என பல மொழிகளின் எழுத்துக்களையும் தனது கைவண்ணத்தால் பதித்துள்ளார்.
அப்பேர்பட்ட நமதூரின் நற்கலைஞரது கலை வாழ்வைப் பாராட்டி கண்ணியப்படுத்தும் வகையில், ஜனாப் கே.எம்.டீ.சுலைமான் அவருக்கு பொன்னாடை அணிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில், அரபி ஹாஜிக்கு ரூ. 10,000 (பத்தாயிரம் ரூபாய்) சிறப்புப் பரிசாக வழங்கப்பட்டது. மற்றொரு கலைஞரான ஜனாப் முஹ்தார் அஹ்மத் தனது கைகளால் இப்பரிசை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
(ஐ) சிறப்பு மொழிபெயர்ப்பாளர்
உருது மொழியை தாய்மொழியாகக் கொண்ட ஜனாப் முஹ்தார் அஹ்மத் சொல்வதை மாணவ-மாணவியருக்கு எளிதில் புரியும் வண்ணம் தமிழில் கொண்டு சேர்க்கும் பணியை காயல்பட்டினம் ஜாவியா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மளாஹிரீ சிறப்புற செய்தார். இவரின் நேரடி மொழிபெயர்ப்பு, இப்பயிற்சிக்கு மொழி ஒரு தடையில்லை என்பதனை நிரூபிக்கும் வண்ணம் அமைந்தது. பயிற்சியாளரையடுத்து, இவரே இந்நிகழ்வின் முடிசூடா மன்னராக விளங்கினார் என்றால் அது மிகையாகாது.
(ஒ) பரிசளிப்பு & நிறைவு விழா
சிறப்பான முறையில் பயிற்சியளித்த ஜனாப் முஹ்தார் அவர்களுக்கு மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுதீன் மளாஹிரீ சால்வை அணிவிக்க, கத்தர் காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் கத்தீப் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
நினைவுப் பரிசாக, ஜனாப் முஹ்தார் அஹ்மத் அவர்களுக்கு Tuhlat Al Mujahidm: A Historical Epic of the Sixteenth Century (ஆசிரியர்: ஷெய்க் மஹ்தூம்; இந்தியாவில் போர்த்துகீசிய குடியேற்றக்காரர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக மலபார் முஸ்லிம்களின் போராட்டங்கள் குறித்த முதல் நூல்) எனும் ஆங்கில வரலாற்று நூலும், அரபி ஹாஜி அவர்களுக்கு மவ்லானா ஜலாலுதீன் ரூமியின் கிதாபுல் மஸ்னவீ (ஆசிரியர்: ஆர்.பீ.எம்.கனி) எனும் தமிழ் நூலும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
பயிற்சிக்குப் பின் பேசிய ஜனாப் முஹ்தார் அஹ்மத், “இச்சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரிலிருந்து குறைந்தது ஐந்து கலைஞர்களாவது இந்த உன்னத கலைத் துறையில் உருவாக வேண்டும்,” என விருப்பம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஜனாப் எஸ்.கே.ஸாலிஹ் நன்றியுரையாற்றினார்.
இப்பயிற்சிப் பட்டறையில் ஆர்வமாகப் பங்கேற்ற மாணவ-மாணவியருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக, துஆ – கஃப்பாரா – ஸலவாத்துடன், நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இம்முகாமை ஏற்பாடு செய்த மூன்று அமைப்புகள், முன்னின்று நடத்திக் கொடுத்த ஏற்பாட்டுக் குழு அங்கத்தினர், இலவசமாக இடமளித்து – நிகழ்ச்சி சிறப்புற நடைபெற அனைத்து வகையிலும் ஒத்துழைப்பளித்த முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி நிர்வாகம், பயிற்சியாளராகப் பங்கேற்ற ஜனாப் முஹ்தார் அஹ்மத் & அவரது குழு, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அரபி ஹாஜி, சிறப்பு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய மவ்லவீ கே.சுல்தான் ஸலாஹுத்தீன் மளாஹிரீ, நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவ-மாணவியர், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் அழைப்பை ஏற்று அவர்களை அனுப்பி வைத்த அனைத்து மத்ரஸா நிர்வாகங்கள், நிகழ்ச்சிக்காக பெரிதும் உழைத்த முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி ஊழியர்கள், பெண்கள் பகுதியில் சிறப்புற பணியாற்றிய இக்ராஃ கல்வி சங்கத்தின் தன்னார்வலர்கள் & அவர்களை அனுப்பி வைத்த அதன் நிர்வாகி ஜனாப் தர்வேஷ், பயிற்சியாளர் & அவரின் குழுவுக்கு தங்குமிடம் அளித்த ஜனாப் பாதுல் அஸ்ஹாப் (சென்னை அரஃபாத் டிரேடர்ஸ்), அவர்களுக்கு சிறப்புற விருந்தோம்பல் வழங்கிய ஜனாப் அ.ர.ஹபீப் இப்றாஹீம் குடும்பத்தார், பயிற்சியாளரை பெங்களூருவில் சந்தித்து - ஊர்தி ஏற்பாடுகளை முன்னின்று செய்த ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஹாஜிர், ஏனைய தன்னார்வலர்கள் & இன்னும் இப்பட்டியலில் விடுபட்டுப்போன அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
(ஓ) ஒளிப்பட செருகேடு & வலையொளி காணொளி
முகாமில் எடுக்கப்பட்ட அனைத்து ஒளிப்படங்களையும், தனி உயர்தெளிவான படங்களாக பதிவிறக்கம் செய்திட கீழுள்ள வலைப்பக்கத்தை (ஒளிப்பட செருகேடு – Photo Album) சொடுக்கவும்:
https://photos.app.goo.gl/FGzowgOcP172AJoG3
நிகழ்ச்சியில் பங்கேற்க தவறியவர்களின் வசதிக்காக, நிகழ்ச்சியின் முக்கிய பகுதிகள் காணொளிகளாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ், அவை விரைவில் வலையொளி காணொளியாக (YouTube video) வெளியிடப்படும்.
(ஔ) தொடர்புடைய முந்தைய பதிவுகள்
1. அக். 15 அன்று மத்ரஸா மாணவ-மாணவியருக்கு “அரபு வனப்பெழுத்து வரைகலை அறிமுகப் பயிற்சி பட்டறை” (Arabic Calligraphy Introductory Training Workshop)!! எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு, கத்தர் காயல் நல மன்றம் & பெங்களூரு காயல் நல மன்றம் இணைவில் ஏற்பாடு!!
(10.10.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19775)
2. அக். 15 அன்று “அரபு வனப்பெழுத்து வரைகலை கண்காட்சி” (Arabic Calligraphy Art Gallery)! பெங்களூரை சார்ந்த ஜனாப் முஹ்தார் அஹ்மத் - தனது கலையாக்கங்களை காட்சிபடுத்துகிறார்!! நகர மக்கள் & பள்ளி/மத்ரஸா மாணவ-மாணவியருக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு!!
(10.10.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19776)
3. “எழுத்துக்களின் காதலர்கள்!” - அ.ர.ஹபீப் இப்றாஹீம் ஆக்கத்தில் எழுத்து மேடை கட்டுரை
(08.11.2016; http://www.kayalpatnam.com/columns.asp?id=211)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள உதவி:
காதர் மைதீன்
அப்பாஸ்
ஒளிப்படங்கள்:
கே.ஜெ. ஷாஹுல் ஹமீத்
ஷேக் முஹம்மத்
அ.ர.ஹபீப் இப்றாஹீம்
செய்தியாக்கம்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம்
எஸ்.கே.ஸாலிஹ்
|