காயல்பட்டினத்தில் NEET நுழைவுத் தேர்வு பயிற்சி மையம் அமைந்திட ஒத்துழைக்கக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் – நகரிலுள்ள பள்ளிக்கூடங்களுக்குக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
மருத்துவத்துறை சார்ந்த படிப்புகளுக்கான நுழைவு தேர்வுகளாக NEET தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அரசு / அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களின் மாணவர்கள், இத்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி பெற, மாநிலம் முழுவதும் பயிற்சி மையங்கள் துவங்கிட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி - தூத்துக்குடி மாவட்டத்தில், 16 மையங்கள் துவக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. அந்த பட்டியலில் காயல்பட்டினம் பெயர் இடம்பெறவில்லை.
மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நகரான காயல்பட்டினம் விடுப்பட்டுள்ளது குறித்து - கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை அரசு செயலர் திரு பிரதீப் யாதவ் IAS இடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக - மனு ஒன்று வெள்ளியன்று (அக்டோபர் 27) வழங்கப்பட்டது. விபரங்களை கேட்டறிந்த செயலர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இது சம்பந்தமாக - பள்ளிக்கூடங்கள் செய்யவேண்டிய பணிகள் குறித்த கோரிக்கைகள் - இன்று நகரின் பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது.
அதில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகளின் விபரம் வருமாறு:
தங்கள் பள்ளியில் BIOLOGY / BOTONY & ZOOLOGY பிரிவுகளில் பயிலும் மாணவர்கள் அனைவரையும், NEET பயிற்சி வகுப்புகளில் இணைந்திட ஆர்வமூட்டுங்கள்; அவசியம் என்றால், பெற்றோர்களையும் இது சம்பந்தமாக தொடர்புக்கொண்டு - இதன் முக்கியத்துவத்தையும், பயனையும் எடுத்து சொல்லுங்கள்
மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து, காயல்பட்டினம் நகரில் மையம் துவக்குவது சம்பந்தமாக தங்கள் பள்ளியை தொடர்புக்கொள்ளும்போது, தங்கள் பள்ளியை மையமாக அமைத்திட சம்மதம் தெரிவிக்கவோ, அல்லது பிற பள்ளிகளில் ஒன்று மையமாக தேர்வு செய்யப்பட்டால் - அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடவோ தங்களை கேட்டுக்கொள்கிறோம்
மருத்துவத்துறை படிப்புக்கு தற்போதைய நிலைப்படி NEET அவசியம் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். தனியார் பயிற்சி மையங்கள் மூலமாக பல ஆயிரம் ரூபாய் செலுத்தி, அனைவராலும் NEET பயிற்சி எடுக்கமுடியாது என்பதனை கருத்தில் கொண்டு அரசே, இந்த பயிற்சி மையங்களை - துவங்குகிறது. எனவே - இந்த வாய்ப்பை, நமதூர் பள்ளிகளும், நமதூர் மாணவர்களும் - பயன்படுத்திக்கொள்ள - அனைத்து முயற்சிகள் எடுக்கும்படியும், ஒத்துழைப்பு வழங்கும்படியும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 28, 2017; 4:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|