மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்தை காயல்பட்டினத்திலும் அறிவித்தமைக்காக, தமிழக அரசுக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
மருத்துவத்துறை படிப்புகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள The National Eligibility Cum Entrance Test (NEET) தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையங்களை, தமிழக அரசு - மாநிலம் முழுவதும் துவக்கவுள்ளது. இந்த மையங்கள் அமையவுள்ள இடங்கள் குறித்து கடந்த வாரம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலாக வெளியான பட்டியலில் - காயல்பட்டினம் பெயர் இடம்பெறவில்லை.
இது சம்பந்தமாக, பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலர் திரு பிரதீப் யாதவ் IAS அவர்களை, அக்டோபர் 27 வெள்ளியன்று - நடப்பது என்ன? குழுமம் சார்பாக சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
நடப்பது என்ன? குழுமம் சார்பாக வழங்கப்பட்ட மனு மீது அன்றே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலர் அலுவலக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
மேலும் - தூத்துக்குடியில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் (CHIEF EDUCATIONAL OFFICER) திருமதி அனிதா அவர்களும், திங்களன்று (அக்டோபர் 30) அவரை சந்திக்க சென்ற நடப்பது என்ன? குழும நிர்வாகிகளிடம் இதனை உறுதிசெய்தார்.
காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மாணவர்களின் தேவையை கருத்தில் கொண்டு, நடப்பது என்ன? குழுமம் வழங்கிய மனுவை உடனடியாக ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்த -
தமிழக அரசு மற்றும் கல்வித்துறைக்கு நன்றி தெரிவித்து, சென்னையில் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலர் திரு பிரதீப் யாதவ் IAS ஆகியோரிடம் நடப்பது என்ன? குழுமம் சார்பாக நேரடியாக நன்றி கடிதம் வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
===============================================
குறிப்பு: அக்டோபர் 27 அன்று நடப்பது என்ன? குழுமம் சார்பாக, பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை செயலர் திரு பிரதீப் யாதவ் IAS அவர்களிடம் கொடுக்கப்பட்ட நகல் இணைக்கப்பட்டுள்ளது
[பதிவு: அக்டோபர் 31, 2017; 2:15 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|