சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், கல்வி – மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக 52 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், 06.10.2017. அன்று 19.45 மணி முதல் 21.45 மணி வரை மன்ற அலுவலகத்தில், மூத்த உறுப்பினர் எம்.என்.முஹம்மத் லெப்பை தலைமையில் நடைபெற்றது. முனைவர் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை அஸ்ஹரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
மன்றத்தின் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையையும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வாசித்து, அவற்றின் மீதான நடவடிக்கைகளை விளக்கிப் பேசினார். ஷிஃபாவின் அண்மைத் தகவல் அடிப்படையில், கடந்த கூட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட உதவித் தொகை 47 ஆயிரம் ரூபாயாகத் திருத்தியெழுதப்பட்டது. ஷாஹுல் ஹமீத் பாதுஷா முன்மொழிய, ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.ஈஸா ஜக்கரிய்யா வழிமொழிதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரவு – செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு செலவு கணக்கறிக்கையை, பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் சமர்ப்பித்து, தேவையான விளக்கங்களையும் வழங்கினார். கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது. 2017ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டுக்கான உத்தேச வரவு – செலவு முன்னறிக்கையையும் அவர் வெளியிட்டதுடன், காயல்பட்டினம் துளிர் பள்ளிக்கான வகுப்பறை கட்டுமானத்திற்கு அனுசரணையளித்த மன்ற அங்கத்தினருக்கு நன்றி கூறினார்.
உதவித்தொகைக்கு நிதியொதுக்கீடு:
உயர்பட்டப் படிப்பிற்குக் கல்வி உதவித்தொகை கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, எம்.எஸ்ஸி. படிப்புக்கு 10 ஆயிரம் ரூபாய், எம்.பி.ஏ. படிப்புக்கு 15 ஆயிரம் ரூபாய் என மொத்தமத் 25 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
செயல்திட்ட விபரங்கள்:
மன்றத்தின் – முதியோர் நலத்திட்டத்தின் கீழ், மன்றப் பிரதிநிதி அளித்த பயனாளிகள் குறித்த அறிக்கை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் உதவி கோரி 9 பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றுள் 6 விண்ணப்பங்கள் - திருத்தப்பட்ட திட்ட வரைமுறைப்படி தகுதியுடையனவாக முடிவெடுக்கப்பட்டு, அவர்களுக்கு தலா மாதம் 1,500 ரூபாய் வீதம் 2017 அக்டோபர் முதல் 2018 செப்டம்பர் வரை வழங்க தீர்மானிக்கப்பட்டதுடன், 2017 அக்டோபர் முதல் டிசம்பர் வரை 3 மாதங்களுக்கு மொத்தம் 27 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடும் செய்யப்பட்டது.
உயர்பட்டப் படிப்பிற்கான இக்ராஃவின் ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகைக்கு பங்களிப்பு:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் – உயர்பட்டப் படிப்புகளுக்கான – உலக காயல் நல மன்றங்களின் ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை திட்டம் குறித்து செயலாளர் கூட்டத்தில் விளக்கிப் பேசினார். மன்ற உறுப்பினர்களின் தாராள அனுசரணையைப் பெற்று, இத்திட்டத்திற்கு இயன்றளவுக்கு ஒத்துழைப்பு வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விளையாட்டுக் குழு விபர அறிக்கை:
மன்றத்தின் விளையாட்டுத் துறை சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து அதன் பொறுப்பாளர்களான ஜெ.எஸ்.தவ்ஹீத், பி.அஹ்மத் ஜமீல் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
மன்றத்தின் சிறப்பு ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளையொட்டி நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளை – உறுப்பினர்களின் விருப்பமறிந்து சிறப்புற செய்திடும் நோக்குடன் ஆன்லைன் முறையில் உறுப்பினர்களின் விருப்பக் கருத்துக்களைப் பெற்று, அவற்றின் அடிப்படையில் விளையாட்டுப் போட்டிகள், விடுமுறைக் கால நிகழ்ச்சிகளையும், அவற்றுக்கான நிகழ்முறை & நிகழ்விடங்களையும் முடிவுசெய்யத் திட்டமிடப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
மன்றத்தின் ஆண்கள் & மகளிருக்கான பவுலிங் விளையாட்டுக்கள் 18.10.2017. அன்று நடத்தப்படும் என்றும், விளையாட்டு குறித்த வருங்காலத் திட்டங்கள் குறித்து குழுமத்தால் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர்கள் மேலும் கூறினர்.
இதர தகவல்கள்:
வேலைவாய்ப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில்துறை நிறுவனங்களில் வருங்காலங்களில் அமையும் வேலைவாய்ப்புகள் தொடர்பாக மன்ற உறுப்பினர்களுக்குப் போதிய விபரங்களை அளிக்கும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என - கல்வித் துறை துணைக்குழுவினரான பி.அஹ்மத் ஜமீல், ஜெ.எஸ்.தவ்ஹீத் ஆகியோர் கூறினர்.
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தையும் உள்ளடக்கிய - சிங்கப்பூர் இந்திய முஸ்லிம்கள் கூட்டமைப்பான Federation of Indian Muslims (FIM) மூலம் அண்மையில் நடத்தப்பட்ட GCE “O” Level revision workshop குறித்து மன்றச் செயலாளரும், கல்விக் குழுவினரும் கூட்டத்தில் விவரித்தனர்.
சிங்கப்பூரின் வெவ்வேறு பள்ளிகளிலிருந்து 80 மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்புப் பயிற்சி பெற்ற கல்வியாளர்களைக் கொண்டு – மாணவர்களுக்குத் தேவையான கல்வி வழிகாட்டல்கள், தேர்வுக்கு ஆயத்தமாவதற்கான வழிமுறைகள், மக்களின் படிப்புக்கும், அவர்களின் தேர்வுக் காலங்களிலும் பெற்றோர் அளிக்க வேண்டிய ஒத்துழைப்புகள் குறித்து விரிவான விளக்கமளிக்கப்பட்டதாகக் கூறிய அவர்கள், சிங்கப்பூரிலுள்ள இந்திய சமூகத்து மாணவர்களுக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை FIM மூலம் நடத்திப் பயன்பெறச் செய்ய வலியுறுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
மன்றத்தின் நிதியாதாரத்தைப் பெருக்கும் திட்டங்களுள் ஒன்றான உண்டியல் திட்டத்தின் கீழ், மன்ற உறுப்பினர்களுக்குப் புதிய உண்டியல்கள் வழங்கப்பட்டன.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், துஆ – ஸலவாத்துடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. பின்னர் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|