தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு நேரடி ரயில் வழிடத்தடம் இல்லாததால், ரயிலில் செல்ல விரும்புவோர் திருநெல்வேலி வழியாகவோ அல்லது மணியாச்சி ரயில் நிலையத்தில் இறங்கி வேறு ரயிலில் மாறியோ மட்டும்தான் பயணிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
இக்குறையைப் போக்க, தூத்துக்குடியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரை புதிய ரயில் வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக நில எடுப்புப் பணிகளும் துவங்கப்படவுள்ளன. இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரை புதிய இரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற உள்ளன.
முதற்கட்டமாக மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரையிலும், இரண்டாவது கட்டமாக மேலமருதூர் முதல் அருப்புக்கோட்டை வரையிலும், மூன்றாம் கட்டமாக அருப்புக்கோட்டை முதல் மதுரை வரையிலும் பணிகள் நடைபெற உள்ளது.
இதற்காக சாமிநத்தம், சில்லாநத்தம், வாலசமுத்திரம், தெற்கு வீரபாண்டியபுரம், மேலமருதூர், வடக்குசிலுக்கன்பட்டி ஆகிய 6 கிராமங்களில் தனியார் நிலம் மற்றும் அரசு நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. இதில் தனியார் நிலங்கள் 71 ஹெக்டேரும், அரசு நிலங்கள் 3.778 ஹெக்டேரும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
நடைபெற உள்ள இரயில்வே திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷும், இரயில்வே மண்டல மேலாளர் நீனு இட்டாயா, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று (04.11.2017.) ஆலோசனை மேற்கொண்டனர்.
இவ்வாலோசனையின்போது, இரயில்வே பணிகளுக்கு தேவையான நிலம் கையகப்படுத்துவது, இருப்புப்பாதை அமைப்பதற்கான அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்திக் கொடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இரயில்வே மண்டல மேலாளர் கோரிக்கை வைத்தார்.
மதுரை கோட்ட செயற்பொறியாளர் சந்துரு, உதவி செயற்பொறியாளர் தனராமன், உதவி பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட துறைசார் அலுவலர்கள் இதன்போது உடனிருந்தனர்.
|