லஞ்ச ஊழல் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு, யு.சகாயம் ஐ.ஏ.எஸ். உடைய “மக்கள் பாதை”, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” குழுமம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், திரளான பொதுமக்கள் லஞ்சம், ஊழலுக்கெதிராக உறுதிமொழி எடுத்துள்ளனர். இணையதளத்தில் உறுதிமொழி எடுத்தோருக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தியறிக்கை:-
லஞ்சம், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் (VIGILANCE AWARENESS WEEK), நாடு முழுவதும், அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை - இவ்வாண்டு கடைபிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு - மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டல் அமைப்பு (மெகா) உடைய சமூக ஊடகப்பிரிவான “நடப்பது என்ன?” குழுமமும், திரு. U.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி இயங்கும் “மக்கள் பாதை” அமைப்பும் இணைந்து - மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் - லஞ்சம், ஊழலுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை, நேற்று (03.11.2017. சனிக்கிழமையன்று) மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் முன்பு நடத்தின.
காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை தாங்கினார். மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் (MEGA) மூத்த செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.முஹ்யித்தீன், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகக்குழு உறுப்பினர் பீ.எம்.ஏ.ஸதக்கத்துல்லாஹ், காயல்பட்டினம் நகர்மன்ற 13ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், நகரப் பிரமுகர் நஹ்வீ எம்.கே.அஹ்மத் முஹ்யித்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் எம்.ஏ.சி.முஜாஹித், லஞ்சம் – ஊழலுக்கெதிரான 2:188 என்ற இறைமறை வசனத்தை கிராஅத்தாக ஓதி, தமிழாக்கம் செய்து, நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழு நிர்வாகிகக் குழு உறுப்பினர் எஸ்.கே.ஸாலிஹ் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதோடு, அறிமுகவுரையாற்றினார்.
மக்கள் மருந்தக தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.என்.மீரான் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையுரையாற்றினார்.
தனது ஐந்தாண்டு நகர்மன்றப் பருவத்தில் தான் ஒருபோதும் ஊழலுக்குத் துணை போகவில்லை என்றும், நகராட்சியிலிருந்து பெற வேண்டிய சேவைகளை பொதுமக்கள் எவ்வித தயக்கமுமின்றி சிறிதளவும் லஞ்சம் கொடுக்காமல் பெற்றுச் செல்ல தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
“மக்கள் பாதை” அமைப்பின் களப்பணி தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராக்கப்பன் கணேசன் வாழ்த்துரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட – “மக்கள் பாதை” அமைப்பின் களப்பணி மாநில ஒருங்கிணைப்பாளர் உமர் முக்தார் சிறப்புரையாற்றியதோடு, வாசகத்தை முன்மொழிய கூடியிருந்த திரளான பொதுமக்கள் அதை வழிமொழிந்து லஞ்சம் – ஊழலுக்கெதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் வேண்டுகோளை ஏற்று, https://pledge.cvc.nic.in என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் லஞ்சம் – ஊழலுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்ட சுமார் 40 பேருக்கு இந்நிகழ்ச்சியின்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர், நிகழ்ச்சித் தலைவர் உள்ளிட்ட அவையோர் அவற்றை வழங்கினர்.
“மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு – MEGA”வின் மூத்த செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.முஹ்யித்தீன் நன்றி கூற, கஃப்ஃபாரா – ஸலவாத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
இதில், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும அங்கத்தினர், “மக்கள் பாதை” அமைப்பின் வட்டார நிர்வாகிகள் உள்ளிட்டோரும், காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளும், அங்கத்தினரும் செய்திருந்தனர்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 04, 2017; 12:30 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|