அரசு சேவைகளைப் பொதுமக்கள் பெற்றிட லஞ்சம் கோரப்பட்டாலோ அல்லது அரசு சேவைகளில் ஊழல் நடைபெறுவதை அறிந்தாலோ புகார் அளிக்க வேண்டிய விபரங்களை, பொதுமக்கள் நலன் கருதி, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
லஞ்சம், ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு வாரம் (VIGILANCE AWARENESS WEEK), நாடு முழுவதும், அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை - இவ்வாண்டு கடைபிடிக்கப்படுகிறது.
ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிராக பொது மக்கள் என்ன செய்யலாம் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை நடப்பது என்ன? குழுமம் - இறைவன் நாடினால் - மேற்கொள்ள உள்ளது.
அதன் ஒரு முகமாக - ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிராக பொதுமக்கள் பயன்படுத்த எளிதான, பிரயோஜனமான தகவல்களை, நடப்பது என்ன? குழுமம் பகிர்ந்துகொள்கிறது.
|| நகராட்சியில் - கட்டுமான அனுமதி, பெயர் மாற்றம், பிறப்பு / இறப்பு சான்றிதழ்கள், குடிநீர் இணைப்பு, போன்ற விஷயங்களுக்கு உங்களிடம் லஞ்சம் கேட்கிறார்களா?
|| வாரிசு சான்றிதழ், திருமண உதவி, வருவாய் சான்றிதழ் போன்றவற்றை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்களா?
|| திருமணம் பதிவு, பத்திரப்பதிவு போன்ற பணிகளுக்கு லஞ்சம் கேட்கிறார்களா?
|| அரசு பணிகளில் ஊழல் நடப்பதை நீங்கள் அறிவீர்களா?
ஆம் எனில், கீழ்க்காணும் - கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு முகவரிக்கு நீங்கள் புகார் தெரிவிக்கலாம். மாதிரி படிவம் வருமாறு:
============
சென்னை முகவரி
============
DIRECTORATE OF VIGILANCE AND ANTI-CORRUPTION,
கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்ககம்,
293 MKN சாலை, ஆலந்தூர், சென்னை - 600 016.
============
தூத்துக்குடி முகவரி
============
காவல்துறை துணை கண்காணிப்பாளர்,
கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு,
2/175 பாளையம்கோட்டை மெயின் ரோடு,
மறவன்மடம், தூத்துக்குடி - 628101.
தொலைபேசி: 0461-2310243
உங்கள் புகார் மனுவில் -
%% உங்கள் பெயர், உங்கள் முகவரி
%% லஞ்சம் கேட்கும் அதிகாரி / ஊழல் செய்யும் அதிகாரி விபரம்
%% குற்றம் நடந்த இடம், தேதி, நேரம்
%% சாட்சிகள் ஏதும் இருப்பின் அவர்களின் பெயர், முகவரி
%% ஆவணங்கள் ஆதாரம் ஏதும் இருப்பின் அவைகள் குறித்த தகவல்
%% பிற ஒரு அமைப்பு இது குறித்து ஏற்கனவே விசாரித்திருப்பின் அது குறித்த தகவல்
ஆகியவற்றை தெரிவிக்கவும்.
புகாரினை எளிதாக உறுதி செய்ய பயன்படும் என்ற அடிப்படையில், உங்கள் பெயர் மற்றும் முகவரி தெரிவிப்பது - கட்டாயமில்லையென்றாலும் - பரிந்துரைக்கப்படுகிறது.
இருப்பினும் - சில சூழல்களில் - புகார் தெரிவிப்பவர், தன் பெயர்/முகவரியை தெரிவிக்க விரும்பவில்லை என்றால் தவிர்த்துக்கொள்ளலாம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 2, 2017; 10:15 am]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|