காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான நிலுவைப் பணி தொடர்பான – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தரக் கோரி, கோமான் ஜமாஅத்துக்கு குழுமம் சார்பில் கடிதமத் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றை காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் துவங்கிட, ஏப்ரல் 2012 இல், தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது.
அதை தொடர்ந்து - நகரின் அனைத்து ஜமாஅத்துகளுக்கும், பொது நல அமைப்புகளுக்கும் - திட்டத்திற்கு தேவையான இடத்தினை கோரி, நகர்மன்றத்தலைவர் திருமதி ஐ.ஆபிதா ஷேக் கடிதம் எழுதினார். பல்வேறு பகுதியை சார்ந்த மக்கள் இடம்தர முன்வர, அம்மாத இறுதியில் கூடிய திருமதி ஐ.ஆபிதா ஷேக் அவர்களின் தலைமையிலான காயல்பட்டினம் நகர்மன்ற கூட்டம் - கோமான் ஜமாஅத் சார்பாக தர முன்வந்த 50 சென்ட் நிலத்தில், ஆரம்ப சுகாதார நிலையத்தை கொண்டு வரலாம் என தீர்மானம் நிறைவேற்றியது.
அதனை தொடர்ந்து - அதே ஆண்டு, செப்டம்பர் மாதம் - கோமான் ஜமாஅத் மூலம் ஏற்பாடு செய்யப்பட வாடகை வீடு ஒன்றில், ஆரம்ப சுகாதார நிலையம் - தற்காலிகமாக இயங்க துவங்கியது. இந்த கட்டிடத்திற்கான வாடகை வழங்கும் பொறுப்பினை - கோமான் ஜமாஅத் ஏற்றுக்கொண்டது, பாராட்டுக்குரிய செயலாகும். எல்லாப்புகழும் இறைவனுக்கே!
மேலும் - கோமான் ஜமாஅத் சார்பாக, 2012 டிசம்பர் மாதம், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான - 50 சென்ட் நிலமும், அரசுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது.
இருப்பினும் - அதனை தொடர்ந்து, தணிக்கை துறை - காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தை துவக்க சில ஆட்சேபனைகளை தெரிவித்த காரணத்தால், இவ்விஷயத்தில் எவ்வித முன்னேற்றமும் காண முடியவில்லை.
நிலுவையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் விஷயமாக - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா ஷேக் அவர்களும், கோமான் ஜமாஅத் பிரதிநிதிகளும், பல்வேறு முயற்சிகளை செய்தார்கள். மேற்கூறப்பட்ட காரணங்களே, தொடர்ந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.
கடந்த பல மாதங்களாக, ஆரம்ப சுகாதார நிலையம் விஷயமாக, சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளிடம், நடப்பது என்ன? குழும நிர்வாகிகள், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இம்முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டி, இன்று - கோமான் மொட்டையார் பள்ளி ஜமாஅத்தின் செயலர் ஜனாப் செய்யது முஹம்மது அவர்களிடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக கடிதம் வழங்கப்பட்டது.
மேலும் - அக்கடித்ததுடன், ஆரம்ப சுகாதார நிலையம் குறித்து, ஒரு சிலரால் பரப்பப்பட்ட அவதூறான தகவல்களுக்கு விளக்கமும், ஆவணங்களுடன் - செயலரிடம் வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன, சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 22, 2017; 4:00 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|