பேருந்து முன்பதிவில் “காயல்பட்டினத்திலிருந்து வண்டியில் ஏற்றம் – Kayalpatnam Boarding Point” வசதியை அறிமுகப்படுத்தல், காயல்பட்டினம் வழித்தடத்தில் நெடுந்தொலைப் பேருந்துகளை அறிமுகம் செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை செயலாளர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் கோரிக்கை அளித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியை புறக்கணிக்கும் அரசு பேருந்துகள் குறித்து, கடந்த ஓர் ஆண்டுக்கும், மேலாக பல்வேறு நடவடிக்கைகளை - நடப்பது என்ன? குழுமம், மேற்கொண்டு வருவதை அனைவரும் அறிவார்கள், எல்லாப்புகழும் இறைவனுக்கே!
இப்பிரச்சனையில் மற்றொரு அம்சமான, திருச்செந்தூர் வழியாக செல்லும் - தொலைதூர விரைவு பேருந்துகளும் (SETC), காயல்பட்டினம் வழியை புறக்கணிப்பதாக பெறப்பட்ட புகார்களை தொடர்ந்து, தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக, SETC நிறுவனம் மூலம், திருச்செந்தூர் மார்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகள் விபரம் சேகரிக்கப்பட்டது.
அதில் - சென்னை, பெங்களூரு, கோவை, சேலம், புதுச்சேரி, திருப்பதி உட்பட பல்வேறு நகரங்களுக்கு, திருச்செந்தூர் மார்க்கத்தில் - 17 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற தகவல் பெறப்பட்டுள்ளது.
அவற்றில் ஒரு சில மட்டுமே, காயல்பட்டினம் வழியாக செல்கின்றன என்ற தகவலை - ஏற்கனவே, நடப்பது என்ன? குழுமம் - சேகரித்துள்ளது.
பெறப்பட்ட/சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமை செயலர் திரு PWC டேவிடார் IAS அவர்களிடமும், சென்னை பல்லவன் சாலையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரிடம், மனுக்கள் இன்று கொடுக்கப்பட்டன.
அதில் -
(1) திருச்செந்தூர் வழியாக செல்லும் அனைத்து தொலைதூர பேருந்துகளும், காயல்பட்டினம் வழியாக செல்லவேண்டும்
(2) இப்பேருந்துகளில் முன் பதிவு செய்யும்போது, "காயல்பட்டினத்தில் இவர் ஏறுவார்" (BOARDING AT KAYALPATTINAM) என்ற வசதி வழங்கப்படவேண்டும்
(3) சென்னை - காயல்பட்டினம் மார்க்கத்தில் தனியாக, தொலைதூர பேருந்து இயக்கப்படவேண்டும்
என்ற கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 20, 2017; 8:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|