செளதி அரேபியா – ஜித்தா, கடந்த 06.10.2017 வெள்ளிக்கிழமை புனித மக்காவில் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 106-ஆவது செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் விபரங்கள் பற்றி அம்மன்றம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு:
மன்ற அழைப்பினை ஏற்று மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்கள், மற்றும் பொதுக்குழுவின் மக்கா உறுப்பினர்கள் ஓன்று சேர்ந்து, ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 106-வது செயற்குழுவை புனித மக்காவில் கூட்டி நற்பணிகள் செய்திட, ஜித்தா செயற்குழு உறுப்பினர்கள் மாலை 05:00 மணியளவில் ஜித்தா ஷரபியாவில் உள்ள ஆரியாஸ் உணவகம் முன்பு யாவரும் ஒன்று கூடி, அவரவர் சொந்த வாகனங்களில் புறப்பட்டு மக்கா நகர் இறை உதவியால் வந்து சேர்ந்தும், மஹ்ரிபு தொழுகைக்கு பின்னர் மன்றத்தின் 106-ஆவது செயற்குழு கூட்டம் மக்கா, குதை கார் நிறுத்துமிடம் பகுதியில் அமைந்துள்ள ஆசியன் பாலி கிளினிக் உள்ளரங்கில் வைத்து நடைபெற்றது.
வரவேற்பு:
இந்த இனிய நிகழ்விற்கு மன்ற தலைவர் சகோ. குளம் எம்.ஏ.அஹ்மது முஹியத்தீன் தலைமையேற்க ஹாபிழ் எஸ்.ஏ.கே.அபுல் ஹஸன் ஷாதுலி அழகிய குரலில் இறைமறை ஓதி துவக்க, சகோ. ஒய்.எம். ஸாலிஹ் மக்கா, ஜித்தா மற்றும் யான்புவில் இருந்து வந்து கலந்துகொண்ட உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் என அனைவர்களையும் அகமகிழ வரவேற்றார்.
தலைமையுரை:
அடுத்து தலைமையுரையாற்றிய இவ்வமர்வின் தலைவர் சகோ. குளம் எம்.ஏ.அஹ்மது முஹியத்தீன், நாம் இந்த மன்றம் மூலம் மூன்று காரியங்களை குறிக்கோளாக முன்வைத்து நல்ல பணிகளை செய்து வருகின்றோம். பொருளாதார வசதியின்மையால் பள்ளிப்படிப்பை தொடரமுடியாமல் தவிக்கும் மாணவக் கண்மணிகளுக்கு ஊக்குவிக்கும் பொருட்டு அதற்கென “இக்ரா” கல்வி சங்கத்தை ஏற்படுத்தி அதன் வழியாக உதவிகள் செய்தும், நோய்வாய்ப்பட்டு பரிதவிற்கும் வறியோருக்கு “ஷிபா” என்றதோர் அமைப்பை நிறுவி அதன் வாயிலாக உதவிகள் புரிந்தும், வசதியட்டோர் சிறு தொழில் செய்து பிழைத்திட அவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி கொடுத்தும், ஆக கல்வி, மருத்துவம் மற்றும் சிறு தொழில், அதில் சிறு தொழிலை சற்று நிறுத்தி வைத்து மற்ற இரண்டையும் முன் நிறுத்தி தொடர்ந்து சேவைகள் ஆற்றி வருகிறோம். இந்த சேவையின் ஆக்கத்தை கண்டுணர்ந்து பலர் மனமுவந்து பாராட்டி பேசியதையும், இன்னும் நமக்காக பிரார்த்தனை செய்வதையும் பயனாளிகளை நாம் நேரில் சென்று சந்திக்கும்போது காண முடிகிறது. இதுவரை நாம் இம்மன்றம் மூலம் பெரும் தொகையை அள்ளி வழங்கி இருக்கிறோம். இதை நாம் ஒரு தனி மனிதனால் செய்து இருக்க முடியுமா என்றால் முடிந்து இருக்காது. இது நீங்கள் செலுத்திய சந்தா மற்றும் நன்கொடைகளை கொண்டே இம்மன்றம் வறியவர்களுக்கு உதவி செய்து வருகிறது. ஆகையால் தேவையறிந்து வறியவர்களின் வாழ்க்கைக்கு நம்மால் முடிந்ததை நாம் மனமுவந்து உதவி செய்யும் போது அவர்கள் நமக்காக இறைவனிடம் வேண்டும் 'துஆ' என்றும் வீண் போவதில்லை, என்ற உரையுடன் நமதூரில் இக்ரா கல்வி சங்கத்துடன் இணைந்து நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான பயனுள்ள நிகழ்ச்சியை பற்றியும் சுருக்கமாக எடுத்துரைத்து தனதுரையை நிறைவு செய்து அமர்ந்தார்.
மன்ற செயல்பாடுகள்:
நம் மக்களுக்காக சேவை செய்யும் நல்ல பல நோக்குடன் துவங்கப்பட்ட இம்மன்றம் பல சேவைகளை எல்லோரின் ஒத்துழைப்பால் நடத்துவது பெருமைக்குரிய விஷயம். இப்படி சேவை எண்ணத்துடன் துவங்கிய இம்மன்றம் இறைவனின் அளப்பெரும் கிருபையால், பல பயனாளிகளுக்கு பல இலட்சங்கள் வரை உதவிகள் வழங்கியுள்ளது இது தனி நபரால் வழங்குவது சாத்தியமன்று. எனவே சந்தாவுடன், நன்கொடைதனையும் கூடுதலாக செலுத்துவதோடு, உங்கள் நல்ல பல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தாரளமாக வரவேற்கிறோம்.
மாதம் ஒருமுறை நடைபெறும் இம்மன்றத்தின் செயற்குழு கூட்டம் வருடம் ஒரு முறை இந்த புனித மக்காவில் வைத்து, மக்கா உறுப்பினர்களின் அன்பு வேண்டுகோளுக்கினங்க நடத்தி வருகின்றோம். அதுபோல் யான்பு சகோதர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் முகமாக அங்கும் ஒரு முறை நடத்தப்படும். நம்முடைய எண்ணமெல்லாம் நம் ஊர் வறியவர்களுக்கு உதவுவது தான். அதன்படி சென்ற வருடம் நடைபெற்ற இதே இடத்தை மீண்டும் நமக்கு தந்து உதவி இருக்கிறார்கள், நமது சிறப்பு விருந்தினர் இந்த கிளினிக்கில் பணிபுரியும் பெங்களுரூ தோல் மருத்துவர் முஹம்மது ரைஹான் அவர்கள், மேலும் அல்பசல் சர்வதேச இந்தியன் பாடசாலை மக்கா, இயக்குனர் சகோ. ஷரிப் ஆகியோர் மக்கா இந்தியன் பாரம் என்ற அமைப்பில் உறுப்பினர்களாக பதிவு செய்து கொண்டு, தன் வேலை பளுவுக்கு மத்தியில் மக்களுக்காக பல நல்ல பணிகளை ஆற்றிவரும் சேவை மனப்பான்மை பற்றி எடுத்துரைத்தும், ஒரு சிறு அறிமுக உரையாற்றி, நமதூர் சிறப்புகளை பற்றி மிக சுருக்கமாக சிறப்பு விருந்தினர்களுக்கு புரியும்படி எடுத்துக்கூறி, உலக காயல் நலமன்றங்கள் உதவி செய்து வருவதை இங்கே புதியதாக வருகை தந்துள்ள சகோதரர்களுக்கு அறிய தருவதுடன் தொடர்ந்து நகர் நலச்சேவை செய்திட நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டி தனதுரையை நிறைவு செய்தார் மன்றத்தின் மற்றுமொரு செயலாளர் சகோ. எம்.ஏ. செய்யிது இப்ராஹீம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்ட செய்திகள், மன்ற செயல்பாடுகள், தீர்மானங்கள் அதன் நிமித்தம் நடேந்தேறிய பணிகள் மற்றும் இதர தகவல்களை விபரமாக தந்தும், நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ்ஜிபெருநாள் சமயம் பேசிமாம், முஅத்தின் இவர்களுக்கு நம் மன்றம் அளித்த பங்களிப்பையும் நினைவு கூர்ந்து, அள்ளி வழங்கிய கரங்களுக்கு நன்றி கூறியும், புனிதமிகு மக்கா நகருக்கு அதுவும் புண்ணியமிகு மஸ்ஜிதுல் ஹரத்திற்கு அருகாமையிலேயே பணிநிமித்தமாக வந்துள்ள இளம் காயல் சொந்தங்களை மனதார வரவேற்றும் தாங்கள் யாவரும் இம்மன்றத்தின் நலப்பணிகளுக்கு இணைந்து செயலாற்றுமாறும் மன்றச்செயலர் சகோ சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான் மிகுந்த அன்புடன் வேண்டிகொண்டார்.
நிதி நிலை அறிக்கை:
உறுப்பினர்களால் பெறப்பட்ட சந்தா, நன்கொடைகள், வழங்கப்பட்ட உதவி தொகைகள், கல்விக்கென வழங்கிய தொகை, தற்போதைய இருப்பு போன்ற முழு விபரங்களையும் நிதிநிலை அறிக்கையாக சமர்ப்பித்தார் மன்றப்பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல். முஹம்மது ஆதம்.
கல்வி வழிகாட்டி முகாம்:
ஜித்தா காயல் நற்பணி மன்றம் மற்றும் இக்ரா கல்விச் சங்கம் இணைந்து நடத்தும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்கான பிரத்தியேக Access India வழங்கும் கல்வி வழிகாட்டி முகாம் பற்றிய ஒரு சிறிய விளக்க உரையை தந்து, அந்நேரம் ஊரில் யாராவது நம் மன்ற உறுப்பினர்கள் இருந்தால் அந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்புடன் நடத்த ஒத்துழைக்குமாறும் வேண்டிக்கொண்டு தனதுரையை நிறைவு செய்தார் சகோ. சோல்ஜர் எஸ்.டி. செய்கு அப்துல்லாஹ்.
மருத்துவ நிதி உதவி:
“ஷிஃபா” மருத்துவ கூட்டமைப்பு மூலம் மருத்துவ உதவி வேண்டி வந்த விண்ணப்பங்கள் அனைத்தும் வாசிக்கப்பட்டு மன்றத்துணைத்தலைவர் சகோ.மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் புற்று நோய் கண்ட மூவர், சிறுநீரக சுத்திகரிப்பு, கண் அறுவை சிகிச்சை இருவர், கற்பபை அறுவைச் சிகிச்சை என இருவர், விபத்தில் எலும்பு முறிவு, பித்தப்பையில் கல் இருவர், குடல் இறக்கம் என இருவர், இருதய அறுவைச் சிகிச்சை, தைராய்டு, மற்றும் தொடர் மருத்துவம் நால்வர் என பலதரப்பட்ட பிணியால் பாதிக்கப்பட்டுள்ள மொத்தம் இருபத்தைந்து பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க முடிவு செய்து, நிதியை ஒதுக்கிய பின், அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறைவனியிடம் பிரார்த்திக்கப்பட்டது.
கல்வி உதவி:
பொறியியல் கல்விக்கென வந்த 6 மனுக்களை முறைப்படுத்தி, அதற்க்குண்டான நிதிகளையும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கேக்:
சிறப்பு விருந்தினர்களின் கருத்துரைக்கு முன் மக்கா மில்லினியம் ஹோட்டலில் இருந்து, சகோ. எம்.ஏ. செய்யிது இப்ராஹீம் கைவண்ணத்தில் மிக அழகாக இம்மன்றத்தின் இலட்சி பதிவு செய்யப்பட்டு வடிவமைக்கப்பட்ட கேக் தனை வந்திருந்த சிறப்பு விருந்தினர்களின் கையால் வெட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. சுவையுடன் கூடிய கேக் உண்டு யாவரும் குதூகலத்துடன் கருத்துரையை செவிமடுத்தனர்.
கருத்துரை:
கீழக்கரை சகோ.பொறியாளர் முஹம்மது இர்பான் – மக்கா தமிழ் மன்றத்தின் தலைவர், தனது கருத்துரையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த மன்றத்திற்கு முதலில் நன்றியை தெரிவித்து, இந்த மன்றம் ஆற்றும் பணிகள் எல்லாம் என் சகோ. இபுராஹிம் எனக்கு எடுத்து சொல்லி இருந்தாலும், அதன் செயல் வடிவத்தை நான் இங்கு வந்து நேரில் கலந்து கொள்ளும் போது, அதை நன்கு உணர்ந்து கொண்டேன். தங்கள் ஊரின் நன்மைக்காக ஊர்மக்கள் ஒன்று கூடி, தனது நேரத்தை ஒதுக்கி, பொருளாதாரத்தை செலவழித்து, நல்ல பல சேவை ஆற்றி வருவதை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். தங்களின் சேவை தொடர வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து பொருளாதாரத்தையும் தந்து வறியவர்களுக்கு வாரி வழங்கி வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவோமாக என்று பிராத்தித்து தனதுரையை நிறைவு செய்தார்.
யான்பு சகோ.ஆதம் சுல்தான் இந்த செயற்குழு ஒரு சின்ன பொதுக்குழு போல் உள்ளது. இந்த கூட்டத்தில் வந்து ஆர்வமுடன் கலந்து கொள்ளும்போது, நான் வந்த தூரம் பெரிதாக தெரியவில்லை. செயற்குழு உறுப்பினர்கள் வறியவர்களுக்கு போட்டிபோட்டு அள்ளி கொடுக்கும் சம்பவத்தை பார்க்கவே என்மனம் உவகை கொள்ளுது. ஆகையால் நம் பணி தொடரவேண்டும் என்று வேண்டியவனாக தனது கருத்தின் சுருக்கத்தை நிறைவு செய்தார்.
அதனை அடுத்து மன்றத்துணைத்தலைவர் சகோ.மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது தனது கருத்தை கொஞ்சும் தமிழ் கலந்த ஆங்கில மொழியில் இரத்தின சுருக்கமாக தந்து அமர்ந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்:
கர்நாடகா – பெங்களூரைச் சார்ந்த அல்பசல் சர்வதேச இந்தியன் பாடசாலை (Alfazal International Indian School-Makkah) இயக்குனர் சகோ. ஷரிப் மற்றும் ஆசியன் பாலி கிளினிக் தோல் மருத்துவர் முஹம்மது ரைஹான் இம்மன்ற செயற்குழுவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அதில் இயக்குனர் ஷரிப் அவர்கள் தனதுரையில், இங்கே வந்து கலந்து கொண்டு உங்களது நடவடிக்கையை உன்னிப்பாக உற்று நோக்கிய போது தங்களின் சேவை தெரிந்து மெய்சிலிர்த்தேன் அல்ஹம்துலில்லாஹ்! என்ன ஒரு சிறந்த சேவை இதனின் பலாபலன்களை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வழங்கி அருள்வான்.
நாங்களும் இது போன்று ஒரு அமைப்பினை ஏற்படுத்தி சேவை ஆற்றி வருகிறோம். ஆனால் இதுபோல் அல்ல எத்தனை மனுக்கள் அத்தனையும் வரிசைப்படுத்தி வாசித்து ஒழுங்குமுறையாக அதற்கு நிதி வழங்குவது பெருமைக்குரிய விசியம். உண்மையில் இது ஒரு அற்புதமான சமூக பணி, இந்த சமூகத்திற்கு ஆற்றி வரும் உங்களின் தொண்டு, அவர்கள் பெற்ற பலனின் பயனால் கேட்கும் துஆ உங்களை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும். உங்களின் இந்த நல்ல பணியை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து அருள்புரிவான். இவ்வளவு பெரிய மகத்தான ஒரு பணியை செய்வது நினைத்து உங்களை பாராட்டுகிறேன். இது மற்றும் அல்லாமல் நம் பிள்ளைகளை I.A.S, மற்றும் I.P.S போன்றவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும். என்று கேட்டுக்கொள்வதுடன் உங்களின் இந்த மன்றத்திற்கு நானும் எனது மாத பங்களிப்பை தர விரும்புகிறேன். இன்னும் பல சேவைகள் தொடர்ந்து செய்திட நான் பிரார்த்திக்கிறேன். என்ற நல்லபல கருத்துக்களையும் மேற்கோள் காட்டி தனதுரையை நிறைவு செய்து அமர்ந்தார் இயக்குனர் சகோ. ஷரிப்.
அடுத்து பேசிய தோல் மருத்துவர் முஹம்மது ரைஹான், நம் சேவையை கண்கொண்டு பார்த்து மாஷா அல்லாஹ் நல்ல ஒரு அருமையான சேவை. அது மாத்திரம் இல்லாமல் சகோ. இபுராஹிம் எடுத்துக்கூறிய காயல்பட்டினம் சிறப்புகளை சற்று உற்று அவதானித்தேன். பெரும்பாலுமாக வாழும் இந்த ஊரிலே ஒரு மதுக்கடை இல்லை, காவல் நிலையம் இல்லை, சினிமா அரங்கம் இல்லை என்று கேட்கும்போது என் உள்ளம் வியப்படைகிறது, என்ன அழகாக அமைத்து இருக்கிறான் உங்கள் ஊரை, மேலும் ஒற்றுமையுடன் செயலாற்றும் உங்களின் நல்ல எண்ணங்கள், பல நாடுகளிலே உழைத்துக் கொண்டு தங்கள் சமூகத்தின் மேல் தாங்கள் கொண்டிருக்கும் அளவளாவிய அக்கறை, மெய்சிலிக்கிறது மாஷா அல்லாஹ், உங்கள் பணி தொடர்ந்து சிறந்து விளங்க அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் சரீர நல் ஆரோகியத்தையும் தந்தருள்வானாக ஆமீன் என்று பிரார்த்தனை செய்தவராக சுருக்கமாக தனது பேச்சை நிறைவு செய்தார்.
தீர்மானங்கள்:
1. உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பு “ஷிபா” சமீபத்தில் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டு புதியதாக பொறுபேற்றுள்ள அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும் புதிய உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை இம்மன்றம் மகிழ்வுடன் தெரிவித்து கொள்வதுடன், இன்னும் சிறப்புற சேவைகள் செய்திட இம்மன்றம் துணை நிற்கும் என்பதுடன், இதுவரை இருந்து நல்ல பணியாற்றிய முன்னால் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் சேவைகளை நினைவு கூர்ந்து இம்மன்றம் மனதார பாராட்டை தெரிவிக்கின்றது.
2. ஜித்தா காயல் நற்பணி மன்றம் மற்றும் இக்ரா கல்விச் சங்கம் இணைந்து நடத்தும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்கான பிரத்தியேக Access India வழங்கும் இலக்கை நோக்கி - கல்வி வழிகாட்டி முகாம் வரும் 11 மற்றும் 12 ஆம் தேதியில் சிறப்புற நடத்த தீர்மானிக்கப்பட்டது.
3. நம் மன்றத்தின் 107-ஆவது செயற்க்குழு கூட்டம், யான்பு சகோதர்களின் அழைப்பினை ஏற்று மிக உற்சாகத்துடன் இஸ்திராஹா எனும் ஓய்வு இல்லம் யான்புவில் வைத்து, இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 08-00 மணிக்கு நனிசிறப்புடன் நடத்திட முடிவு செய்யப்பட்டு, யான்பு மற்றும் மதீனா உறுப்பினர்களையும் கலந்து சிறப்பிக்கவும் அன்புடன் அழைக்கப்படுகிறது.
பிரார்த்தனை:
இந்நிகழ்ச்சி அனைத்தையும் சகோ.சீனா எஸ்.ஹெச். மொகுதூம் முஹம்மது அழகுற நெறிப்படுத்தி தர
சகோ, அல்ஹாபிழ் அபூதாஹிர் நன்றி நவில, சகோ.நூஹு பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் இனிய இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
காயலின் சுவைகுன்றா மட்டன் பிரியாணி இரவு உணவாக விருந்தளிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான இட ஏற்பாடு, காயலின் இஞ்சி தேநீர் குடியும், சாலாவடை கடியும் மற்றும் சுவைமிகு இரவு விருந்தும் மக்கா செயற்குழு உறுப்பினர்களின் முழுஅனுசரணையில் சிறப்புடன் செய்யப்பட்டது.
தகவல் மற்றும் புகைப்பட உதவி:
எஸ்.ஹெச். அப்துல்காதர்
சட்னி, எஸ்.ஏ.கே. செய்யது மீரான்
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
06.10.2017.
|