காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், நகரில் பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், குப்பைகள் தேக்கத்தை அகற்றல், நகராட்சி வார்டு எல்லைகளை நிர்ணயிக்கும் முன் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டல் ஆகியவற்றை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சியில் -
/// பருவமழைக்காலத்திற்கு முன்பு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள்
// முடுக்குகள்/காலியிடங்களில் தேங்கும் குப்பைகள் அகற்றப்படுவது
// காயல்பட்டினம் நகராட்சி வார்டுகளின் எல்லைகள் நிர்ணயம் செய்யப்படுவதற்கு முன்னர் பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படவேண்டும்
என்ற மூன்று வெவ்வேறு கோரிக்கைகள், நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் சார்பாக, மாவட்ட ஆட்சியருக்கு இன்று வழங்கப்பட்டது.
======================================================
சாலைகளுக்கு அப்பால், ஓடைகள்/முடுக்குகள்/காலியிடங்களில் தேங்கும் குப்பைகள் அகற்றுவது - குறித்து
======================================================
காயல்பட்டினம் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் - குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. குறிப்பாக, நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் - இரு சாலைகளுக்கு பின்புறம் உள்ள ஓடைகள், முடுக்குகள் ஆகியவற்றில் பொது மக்களால் கொட்டப்படும் குப்பைகள் குறித்து எவ்வித கவனமும் செலுத்துவதில்லை. இதனால் குப்பைகள் தேங்கி, நோய்கள் மற்றும் சுகாதார கேடு ஏற்படும் வாய்ப்புகள் நிலவுகிறது.
இந்நிலை காயல்பட்டினம் நகரின் அனைத்து பகுதிகளிலும் நிலவுகிறது. எனவே - காயல்பட்டினம் நகராட்சி, சாலைகளில் தேங்கும் குப்பைகளை மட்டும் அப்புறப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல், ஓடைகள்/முடுக்குகள் ஆகியவற்றில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்தவும், அவ்வாறு குப்பைகளை இனி - ஓடைகள்/முடுக்குகளில் கொட்டாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் - காயல்பட்டினம் நகராட்சியை - கேட்டுக்கொள்கிறோம்.
================================================
வடகிழக்கு பருவமழை - முன்னெச்சரிக்கை நடவடிக்கை - குறித்து
================================================
வடகிழக்கு பருவமழை ஒரு சில தினங்களில் - மாநிலத்தில் துவங்கவுள்ளது. பொதுவாக, தென் மேற்கு பருவ மழை காலத்தில் பெறப்படும் மழையை விட - வடகிழக்கு பருவமழை காலத்தில் தான், காயல்பட்டினத்தில் அதிகமாக மழை பெய்யும்.
எனவே - இதனை கருத்தில் கொண்டு,
நகரில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக, முழுமையாக அப்புறப்படுத்தி நோய்கள் பரவாமல் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காத வண்ணம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்
மழை நீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அப்புறப்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்
தாழ்வான பகுதிகளில் அதிகம் நீர்தேங்கும் பட்சத்தில், அப்பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல - கடையக்குடியில் (கொம்புத்துறை) அரசு அமைத்துள்ள மையத்தை (EVACUATION CENTRE) தயார் நிலையில் வைக்கவும், அவ்விடம் தவிர - கூடுதல் இடங்களையும், பொது மக்களின் ஆலோசனை பெற்று - தயார் நிலையில் வைக்க, நடவடிக்கை எடுக்கவும்,
மழைக்காலங்களில் ஏற்படும் சிரமங்களை களைய (நீர் தேக்கம், குப்பை தேக்கம், தெருவிளக்கு பாதிப்பு, குடிநீர் விநியோகம் பாதிப்பு, கொசு தொல்லை) நகராட்சியில் தொடர்புக்கொள்ளவேண்டிய அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொது மக்களுக்கு தெரிவிக்கவும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
=============================================
காயல்பட்டினம் நகராட்சியின் வார்டு எல்லைகளை நிர்ணயம் செய்வது - பொது மக்கள், பொது நல அமைப்புகள் கருத்துக்கள் பெறுவது – குறித்து
==============================================
தமிழக அரசு - கடந்த ஜூலை 11 அன்று - Tamil Nadu Delimitation Commission Act, 2017 என்ற சட்டத்தை அமலுக்கு கொண்டுவந்தது. அதன்படி - உள்ளாட்சிமன்றங்களின் வார்டுகளை - முடிவுசெய்ய புதிய ஆணையம், அறிவிக்கப்பட்டது.
மேலும் - கடந்த செப்டம்பர் 3 அன்று - Tamil Nadu Local Bodies (Amendment) Ordinance, 2017 என்ற அவசர சட்டத்தையும், தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி - தற்போது உள்ளாட்சிமன்றங்களில் அமலில் உள்ள - வார்டுகள், ரத்து செய்யப்பட்டன.
அதனை தொடர்ந்து - கடந்த செப்டம்பர் 12 அன்று - Tamil Nadu Local Bodies Delimitation Regulations, 2017 என்ற விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி - புதிதாக, எவ்வாறு உள்ளாட்சிமன்றங்களின் வார்டுகள் புதிதாக நிர்ணயம் செய்யப்படவேண்டும் என்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது.
அதில் - உள்ளாட்சிமன்றங்களின் நிர்வாக அலுவலருக்கு (நகராட்சியில் ஆணையர்) - உள்ளாட்சி மன்றங்களில் உள்ள வார்டுகளின் எல்லைகளை நிர்ணயம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே - காயல்பட்டினம் நகராட்சியின் வார்டு எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கு முன்னர், இது குறித்து அவ்வாடுகளை சார்ந்த பொது மக்கள், பொது நல அமைப்புகள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு முறையாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் கருத்துகளை பெறப்படவேண்டும் என தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: அக்டோபர் 16, 2017; 11:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கைகளை, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பொன்னம்பலத்திடம், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் நேற்று (16.10.2017.) நேரில் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
|