சிறுபான்மையினர் கலாச்சாரத் தனித்தன்மையை நிலைநிறுத்திட - மத்தியில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக தலைமையில் நல்லாட்சி அமையப் பாடுபட வேண்டும் என - காயல்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறுபான்மையினர் வாழ்வுரிமை தூத்துக்குடி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
சிறுபான்மையினரின் கலாச்சார தனித்தன்மையை நிலை நிறுத்திட மத்தியில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக தலைமையில் நல்லாட்சிகள் அமைந்திட பாடுபடுவோம் காயல்பட்டினத்தில் நடைபெற்ற சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாவட்ட மாநாட்டில் தீர்மானம் காயல்பட்டினம், அக் 15- சிறுபான்மையினரின் கலாச்சார தனித்தன்மையை நிலை நிறுத்திட, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலும், தமிழகத்தில் திமுக தலைமையிலுமான நல்லாட்சிகள் அமைந்திட பாடுபட வேண்டுமென்று காயல்பட்டினத்தில் நடைபெற்ற சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு- சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாவட்ட மாநாடு 14.10.2017 அன்று மாலை காயல்பட்டினம் சதுக்கை சந்திப்பில், தூத்துக்குடி குலாம் ஹஸன், மேத்தப்பிள்ளை மரைக்காயர், காயல்பட்டினம் பக்ரீன் ஹாஜியார் நுழைவாயில் வழியே அமைக்கப்பட்டிருந்த ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நினைவு மேடையில் நடைபெற்றது.
எஸ்.எம். முஹம்மது பாஸி, என்.எஸ். நூஹூ ஹமீது, ஆர்.எஸ். அப்துல் காதர், எம்.கே. முகைதீன் தம்பி, வி.எஸ்.எஸ். முகைதீன் தம்பி, எஸ். அப்துல் சப்பார், கே.ஏ. அப்துல் காதர் ஆலிம், எஸ்எம். உஜைர், காயல்பட்டினம் நகர தலைவர் எம்.ஏ. முஹம்மது ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கே.எம்.என்.உமர் அப்துல் காதிர் கிராஅத் ஓதினார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹஸன் அனைவரையும் வரவேற்றார். மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்ராகிம் மக்கீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தலைமை நிலைய பாடகர்கள் முகவை சீனி முகம்மது கவிஞர் ஏ. ஷேச் மதார், ஹாஃபிழ் பீ.எஸ்.ஜெ.ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் இயக்கப் பாடல் பாடினார்கள். மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பீ.மீராசா மரைக்காயர் தலைமையுரையாற்றினார்.
ஜமாஅத்துல் உலமா சபை மூத்த தலைவர் மவுலானா டி.ஜே.எம். ஸலாஹுதீன் ரியாஜி, மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், மாநில செயலாளர்கள் நெல்லை மஜித், காயல் மகபூப், கே.எம். நிஜாம்தீன் ஆகியோரும் பேசினார்கள்.
மணிச்சுடர் நாளிதழில் தொடர்ந்து வெளிவந்த அரசு நலத்திட்ட உதவிகள், வழிமுறைகள், தொகுப்பு நூல் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் எஸ். குர்ரம் அனீஸ் உமர் வெளியிட்டு பேசினார்.
முதல் பிரதியை வாவு எஸ். செய்யது அப்துல் ரகுமான் பெற்றுக் கொண்டார். மாவட்ட மாணவர் பேரவை அமைப்பாளர் இ. முபாரக் அலி நூல் அறிமுக உரையாற்றினார்.
அமீரக காயிதேமில்லத் பேரவை - வெள்ளி விழா சிறப்பு மலர் காயிதேமில்லத் தாய் வாழும் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாகிப் நூலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி. முகம்மது பஷிர் எம்.பி வெளியிட்டுப் பேசினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு பேசினார். அமீரக காயிதேமில்லத் பேரவை பொதுச் செயலாளர் கீழக்கரை எஸ்.கே.எஸ். ஹமிதுர் ரஹ்மான் நூல் அறிமுக உரையாற்றினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்றக் கட்சி தலைவரும் – மாநில பொதுச் செயலாளருமான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் கேரள மாநில இளைஞர் லீக் தலைவர் செய்யது முனவர் அலி ஷிகாப்தங்ஙள், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் அனிதா ஆர். ராதா கிருஷ்ணன் எம்எல்.ஏ ஆகியோரும் பேசினார்கள்.
தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் கே. மீராசா, மன்னர் ஏ.ஆர். பாதுல் அஸ்ஹப் நவ்ரங் எம். சகாபுதீன், ஏ.எல்.எஸ். அபிசாலிஹ் தூத்துக்குடி எஸ்.பி. முகம்மது அலி பாதுஷா, எம்.கே. இம்ரான்கான், ஏ. முகம்மது உவைஸ், கே.எம்.என். மஹ்முது லெப்பை, எஸ்.முகைதீன் மூஸா, எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்டோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்கள்.
இறுதியாக தாய்ச் சபையில் பல்லாண்டு காலமாக தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர் திலகங்கள் எஸ்.எஸ்.இ. காழி அலாவுதீன் ஆலிம், எஸ்.எம். தாஜிதீன், தூத்துக்குடி அப்பாஸ், எம். அப்துல்கனி, எம். உஸ்மான் ஆழ்வை மசூது, எம்.எம். மகுதும்கான், எம். அகமது, எஸ்.டி. கமால், வாவு சித்திக் ஹாஜியார், எஸ்.டி. கமால், ஜெ. உமர், வி.எஸ். ஹஸன் அப்துல் காதர், எஸ்.ஆர். ரஹமத்துல்லா, அரபி எம்.எம். முஹம்மது மைதீன் ஆகியோருக்கு விருது வழங்கி சால்வை அணிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாநாட்டு பேருரையாற்றினார்.
தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி., காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர், தமிழ் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜகான், கேரள இளைஞரணி தலைவர் செய்யது முனவ்வர் அலி ஷிஹாப் தங்ஙள், ஜமாஅத்துல் உலமா மூத்த தலைவர் மௌலவி டி.ஜே.எம். சலாவுதீன் ரியாஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில செயலாளர்கள் நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், கே.எம். நிஜாமுதீன், அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் எஸ்.கே.எஸ். ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் மாநாட்டு பேருரையாற்றினார்.
இம்மாநாட்டில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
1. மஹல்லா ஜமாஅத் கட்டமைப்பை பலப்படுத்துவோம்
இஸ்லாமிய சமு தாயத்தின் இயற்கை அமைப்பு பள்ளிவாசலை மையமாகக் கொண்ட மஹல்லா ஜமாஅத்துகள் கட்டமைப்போடும், கட்டுப்பாட்டோடும் விளங்க வேண்டும். ஒவ்வொரு மஹல்லா ஜமாஅத்திலும் பொருளாதார முன்னேற்றத்திற்கான அழகிய திட்டம்-ஏழைவரி, ஜகாத் பணத்தை முறையாக பைத்துல்மால் மூலம் வசூலித்து நலிந்தவர்களுக்கு பொருளாதார உதவி, ஏழை மாணாக்கர்கள் கல்வி படிப்பை தொடர உதவுதல் போன்ற பணிகளாற்ற வேண்டும்
அனைத்து மஹல்லா ஜமாஅத்துக்களிலும் ஷரீஅத் பஞ்சாயத்து என்ற சமரச அமைப்பை உருவாக்கி பிரச்சினைகளுக்கு காவல் நிலையம், நீதிமன்றம் செல்வதை தவிர்த்து சுமூகமான முறையில் மஹல்லா ஜமாஅத்திலேயே தீர்த்து கொள்ள வேண்டும். இப்படியாக முன்மாதிரி மஹல்லா ஜமாஅத்துகளை உருவாக்கிட அனைத்து பள்ளிவாசல் முத்தவல்லிகள், சங்கைக்குரிய உலமா பெருமக்கள், இளைஞர்களை இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
2. நல்லாட்சிகள் மலர துணை நிற்போம்
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற காலம் முதல் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இதனால் மக்கள் பெரும் குழப்பத்திற்கும், வேத னைக்கும் ஆளாகி வருகின்றனர். கர்வாப்சி என்ற தாய் மதத் திற்கு திரும்புதல், முத்தலாக் பிரச்சினையை முன்னிறுத்தி ஷரீஅத் சட்டத்திற்கு மாற்றமாக பொது சிவில் சட்டம், மாட்டிறைச்சிக்கு தடை என்ற பெயரால் அஹ்லாக் உசைன் முதல் ஹாபிழ் ஜுனைத் வரை 36 முஸ்லிம் சகோதரர்கள் படுகொலை, லவ் ஜிஹாத் என்ற பெயரால் உத்திரபிதேசம் முஸப்பர் நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து முஸ்லிம்கள் சொந்த வீடுகளை இழந்து விரட்டியடிப்பு, தலைநகர் டெல்லியில் கிறிஸ்துவ தேவாலயம் தாக்குதல், அயோத்தியில் கொடிய வர் களால் இடிக்கப்பட்ட இறை இல்லம் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கொண்டுவர சட்டம் இயற்றுதல், முஸ்லிம்களால் துவக்கப் பட்ட அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லா மியா பல்கலைக்கழங்களின் சிறுபான்மை அந்தஸ்தை நீக்கு வோம், கஷ்மீர் மாநிலத்திற்கு தனி அந்தஸ்து கூடாது, இந்தி, சமஸ்கிருத மொழி களை திணித்தல், வந்தே மாதரம், யோகா பயிற்சியை மாணவர்களிடம் கட்டாயப்படுத்துதல், ரோஹிங் யா முஸ்லிம் அகதிகளுக்கு எதிரான நடவடிக்கை, முகலாய முஸ்லிம் மன்னர்கள் கட்டிய தாலேயே உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றுலா தல பட்டியலிருந்து நீக்கம் என சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்களுக் கெதிரான நடவடிக்கைகளில் மத்திய பா.ஜ.க. மோடி அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.
இப்பேற்பட்ட மத்திய பாஜ.க. அரசை கண்மூடித்தனமாக தமிழக அரசு ஆதரித்து அடிபணிந்து வருவது திராவிட இயக்க கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.
இந்த மக்கள் விரோத மத்திய-மாநில அரசுகளை புறக்கணித்து பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம், சிறுபான்மை யினரின் கலாச்சார தனித்தன்மையை நிலை நிறுத்திட, தமிழகத்தில் திமுக தலைமையிலும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான நல்லாட்சிகள் அமைந்திட இம்மாநாடு உறுதியேற்கிறது.
3. சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்தும் ஆலைகள் மீது நடவடிக்கை
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் அமிலக் கழிவு தொழிற்சாலையான தாரங்க தாரா கெமிக்கல் ஒர்க்ஸ் - டி.சி. டபிள்யூ தொழிற்சாலையால் கடும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, பொதுமக்களின் உடல் நலனுக்கும், உயிருக்கும் கடும் பாதிப்புகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றது. குழந்தைகளுக்கு ப்ரைமரி காம்ப்ளக்ஸ் நோய்கள், பொதுமக்களுக்கு கண் எரிச்சல்,, வாந்தி, திடீர் மயக்கம் எனத் துவங்கி புற்றுநோய் வரை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். பலர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே போல, தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் ஸ்டெர்லைட் அமிலக் கழிவு தொழிற்சாலை உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் காரணமாக தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் பெரும் மாசு ஏற்பட்டு, பொதுமக்களின் உடல் நலன், உயிருக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது.
கடந்த 23.03.2013 அன்று நச்சு வாயுவை வெளியேற்றியதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட அன்றைய மாவட்ட ஆட்சியரால் உத்தரவிடப்பட்டு, அந்த ஆலைக்கு மின் வினியோகமும் நிறுத்தப்பட்டது. எனினும், அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் ஆலையைத் திறக்க அனுமதித்ததன் மூலம் கண்துடைப்பு நட வடிக்கையையே அரசு மேற் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியது.
இந்த பெரும் பாதிப்புகள் குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பிலும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (கே.இ.பி.ஏ.) உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் சார்பிலும் பலமுறை அரசுக்கு முறையீடுகள் செய்யப்பட்டும், அந்த ஆலைகள் மீது இன்றளவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கதையாக, அமிலக் கழிவை வெளியாக்கும் அத்தொழிற்சாலைகளின் உற்பத்தியைப் பெருக்கவும், புதிய உற்பத்திகளைத் துவக்க வும் அரசு அனுமதி வழங்கி வருவது பொதுமக்கள் நலன் மீது மத்திய - மாநில அரசுகளுக்கு சிறிதும் அக்கறையில்லை என்பதையே காண்பிக்கிறது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திவரும் டி.சி. டபிள்யூ. தொழிற்சாலை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை ஆகியவற்றின் செயல்களாலும், அவற்றைக் கண்காணிக்க வேண்டிய அரசு அமைப்புகளின் செயலற்ற தன்மையாலும் காயல்பட்டினம், தூத்துக்குடி உட்பட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மிகவும் வேதனைகுள்ளாகி கடும் அதிருப்தியில் உள்ளனர். இயற்கை வளம், மக்கள் நலன் கருதி இத்தொழிற்சாலைகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்திட மத்திய-மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
4. காயல்பட்டினத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்கக் கோரி
காயல்பட்டினத்தின் பல்வேறு சாலைகள் அமைக்கப் பட்டு பல்லாண்டுகள் ஆகிவிட்டதோடு, மழை நீர் வடிகால் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவ்வப்போது தோண்டப் பட்ட சாலைகளை இதுவரை மூடி செப்பனிடாமல் உள்ளதால், பொதுமக்கள் இடறி விழும் நிலையும், வாகனங்கள் விபத்துக் குள்ளாகும் நிலையும் உள்ளது. எனவே இப்பகுதிகளில் புதிய சாலைகளை விரைவாக அமைத்திட காயல்பட்டினம் நகராட்சியை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
5. காயல்பட்டினம் அரசு மருத்துவமனை காலி பணியிடங்களை நிரப்பக் கோரி
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவில் மருத்துவர்களை உடனடியாக நியமிக்கவும், உள் நோயாளிகள் சிரமமின்றி சிகிச்சை மேற்கொண்டிட வார்டுகளிலுள்ள பழுது களைச் சரி செய்யவும், மருத்துவமனையில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இல்லாததால் மிகவும் சிதில மடைந்துள்ள வார்டுகளைப் புதிதாகக் கட்டி, உள் நோயாளிகள் பயன்பாட்டுக்கு வழிவகை செய்யவும், மருத்துவமனை வளாகத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காவண்ணம் தேவையான நிரந்தர கட்டமைப்பு வசதிகளை செய்திட மாநில அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
6. இரயில் நிலைய நடைமேடையை உயர்த்தியமைக்கக் கோரி
காயல்பட்டினம் இரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை தாழ்வாக உள்ளதால், பொதுமக்கள் இரயிலில் ஏறும்போதும், இறங்கும்போதும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். பல தருணங்களில் பயணியர் பலர் கீழே விழுந்து கை, கால் முறிந்தும் போயுள்ளது.எனவே பயணிகளின் நலன் கருதி காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடையை உயர்த்திடவும், பயணிகள் பெட்டியை சிரமமின்றி அடையாளம் கண்டிட மின் அடையாள (டிஜிட்டல் இண்டிகேட்டர் லைட்) பொருத்திட, மத்திய இரயில்வே அமைச்சகத்தை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
7. அஞ்சல் நிலையத்தை பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கக் கோரி
காயல்பட்டினம் தலைமை அஞ்சல் நிலையம் நகர பிரதான வீதியில் வாடகை கட்டிடத்தில் பல்லாண்டு காலமாக இயங்கி வருகிறது. தற்போது கட்டிட உரிமையாளர்கள் தபால் நிலையத்தை இடமாற்றிட வலியுறுத்தி வருவதை தொடர்ந்து காயல்பட்டினம் தலைமை தபால் நிலையம் மாற்று இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொது மக்களின் நலன் கருதி காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திற்குள்ளேயே தமிழக அரசுக்கு சொந்தமான இடத்தில் காயல்பட்டினம் தலைமை தபால் நிலையம் உருவாகிட உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு மத்திய-மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
8. அரசுப் பொதுத்தேர்வுகளில் முஸ்லிம் மாணவியருக்கு தனி தேர்வறை கோரி
‘’முஸ்லிம்கள் அதிகளவில் உள்ள காயல்பட்டினத்தில் முஸ்லிம் மாணவியர் கோஷா முறையைப் பேணி வருகின்றனர். அரசுப் பொதுத் தேர்வு அறைகளில், மாணவர்களுக்கும்-மாணவி யருக்கும் பல்லாண்டு காலமாக தனித்தனி தேர்வறைகள் இருந்து வந்த நிலையை மாற்றி தற்போது ஒரே தேர்வறையில் மாணவர்களும், மாணவியரும் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முஸ்லிம் மாணவியர் தயக்கத்துடனேயே தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டு அவர்களது தேர்ச்சி விகிதம் குறைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே இவ்வருடம் முதல் முன்பு போல் முஸ்லிம் மாணவியர் அரசு பொதுத்தேர்வுகளை தனி தேர்வறையில் எழுதிட உரிய ஏற்பாடுகளை செய்து தருமாறு தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
9. தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கக் கோரி
அதிமுக ஆட்சியமைத்தால், தூத்துக்குடியில் ஒருங் கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாக்களித்திருந்தார். அதிமுக அரசு பொறுப்பேற்ற பின் நடந்த மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அதற்கான இடமும் தூத்துக்குடி மீன்வள கல்லூரி எதிரில் மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதைக் கருத்தில் கொண்டு, தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் விரைவில் அமைத் திட தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
10. திருவைகுண்டம் அணையைத் தூர்வார கோரி
தாமிரபரணி ஆறு பாயும் திருவைகுண்டம் அணை அமலைச் செடிகள் நிறைந்து துர்நாற்றத்துடன் காணப் படுகிறது. அதை முறையாகத் தூர்வாரி, சுத்தமான தண்ணீரை பொதுமக்கள் பெற்றிட குறிப்பிட்ட பருவ கால இடைவெளியில் தூர்வாரும் பணிகளைச் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டிட தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
11. ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும்
ஆத்தூரிலுள்ள தாமிர பரணி ஆற்றுப் பாலத்தின் கீழே செல்லும் ஆற்று நீர் மழைக் காலத்தின்போது பாலத்தை ஒட்டிய அளவிலும், தொடர் கனமழைக் காலங்களில் அவ்வப்போது பாலத்தை மூழ்கடிக்கும் அளவிலும் தண்ணீர் நிறையும். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக இப்பாலத்தின் மேல் எழும்பிய நீர், நகருக்குள் புகுந்து பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியது.
இந்நிலை மீண்டும் ஏற்படாதிருக்க ஆற்றுப் பகுதியை நிரந்தர செயல்திட்டத்துடன் முறையாகக் கட்டமைத்து, பொதுமக்களுக்குப் பாதுகாப் பான சூழலை ஏற்படுத்தித் தர தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
12. உமறுப்புலவர் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்
புகழ்பெற்ற தமிழிலக்கி யமான சீறாப்புராணம் தந்த உமறுப்புலவருக்கு அவரது அடக்க தலம் அமைந்துள்ள எட்டையபுரத்தில் தமிழக அரசு மணிமண்டபம் கட்டி யுள்ளது.
உமறுப்புலவர் பிறந்த நாளான அக்டோபர் 23ஆம் தேதியன்று எட்டையபுரத்தில் அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் சட்டமன்றத்தில் வைத்த கோரிக்கையை அரசு ஏற்று அறிவித்துள்ளதற்கு இம்மாநாடு நன்றியும் தெரி வித்து கொள்வதோடு, இவ்வருடம் முதல் உமறுப் புலவர் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாட தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
13. தூத்துக்குடியில் கல்லூரி உருவாக ஒத்துழைப்போம்
சிறுபான்மை சமுதாயம் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலை யில் உள்ளதை அரசின் பல் வேறு ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டியிருப்பதை நிவர்த்தி செய்திடும் நோக்கில் தூத்துக் குடி முத்தைய்யா புரம் முகைதீன் ஆண்டவர் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் மாணவர்களுக்கான கலை அறிவியல் கல்லூரி துவங்க முடிவு செய்தி ருப்பதை இம்மாநாடு அகமகிழ் வோடு வரவேற்பதோடு இக்கல் லூரி உருவாக தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கத்தினர்கள் அனைத்து நிலைகளிலும் உறுதுணையாக இருந்திட வேண்டுமென இம் மாநாடு கேட்டுக் கொள் கின்றது
14. காயிதே மில்லத் மருத்துவ உதவி மையம் உருவாக ஒத்துழைப்போம்
சமயங்களை கடந்து மனித நேய மாண்புகள் இந்திய திருநாட்டில் நிலைத்து நிற்க வேண்டும் என்ற இலட்சிய துடிப்போடு வரலாற்று பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கான பைத்துர் ரஹ்மா எனும் இறையருள் இல்லங்கள் இதுவரை 4, 300 க்கும் மேற்பட்ட வீடுகளும், கல்விக் கண் திறந்திட பாட சாலைகளும் உருவாக்கப்பட்டிருப்பதை போன்று தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் ஏழை கிராம மக்களுக்கு குடி தண்ணீருக்கான ஆழ்துளை கிணறுகள், இறைவனை வணங்கி வழிபட மஸ்ஜித், மதரஸா அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அமைப்பான தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபை சார்பாக திருநெல்வேலியில் கேன்சர் நோயாளிகளுக்கான மருத்துவ நல உதவி மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இப்பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதென இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இம்மாநாட்டில்,
மாநாட்டில் திருச்சி தெற்கு மாவட்டத் தலைவர் எம்.ஏ. முகம்மது நிஜாம், செயலாளர் கே.எம்.கே. ஹபிபுர் ரஹ்மான், நெல்லை மேற்கு மாட்ட தலைவர் எஸ். செய்யது சுலைமான், செயலாளர் வி.ஏ.எம். இக்பால், பொருளாளர் வி.ஏ.எஸ். செய்யது இப்ராஹிம், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், செயலாளர் பாட்டப்பத்து எம். முகம்மது அலி, பொருளாளர் கானகத்து மீரான், இராமநாதபுரம் மாவட்ட தலைவர் வருசை முகம்மது, துணைச் செயலாளர் ஆர். முகம்மது யாக்கூப், விருது நகர் மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ. இப்ராஹிம் ஷா, புளியங்குடி ஆர். அப்துல் வகாப், எம். காதர் மைதீன், எம். முகம்மது சுலைமான், டி. கலீல் ரஹ்மான், கடையநல்லூர் பி.ஏ. செய்யது மசூது, வி.எம். அகமது கபீர், பி.எச். முகம்மது ஹனிபா, கே.எம். ரஹ்மத்துல்லா, தென்காசி எம். அப்துல் அஜிஸ் பன்பொழி டாக்டர் எம். நவாஸ்கான், வடகரை செய்யது முகம்மது, மேலப்பாளையம் முகைதீன் அப்துல் காதர்,
திருச்சி கவிஞர் ஜாபர் அமிருதீன், செய்தியாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது, பாட்டப்பத்து எம். கடாபி, மணிச்சுடர் புளியங்குடி எம். ஷாகுல் ஹமீது, சிவகாசி ஷாகுல் ஹமீது, கடலூர் எம்.எம். ஜாபர், ஹாங்காங் வி.எம்.டி. முகம்மது ஹஸன், முத்தையாபுரம் என். முஸ்தபா கயத்தாறு எஸ். முகைதீன் பெத்தப்பா, எம்.ஏ.சி. சுல்தான், எம்.எச். அப்துல் வாஹித், கோவில்பட்டி ஹாஜா மீரான், திரேஷ்புரம் முகம்மது ஷாகுல் ஹமீது, காயல் ஏ.கே. மஹ்மூது சுலைமான் உட்பட பெருந்திரளானோர் மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாட்டை முன்னிட்டு காயல்பட்டினம் நகரம் முழுவதும் பச்சிளம் பிறைக் கொடிகளாலும், வண்ண வண்ண விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.
முடிவில் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் என்.டி. முகம்மது இஸ்மாயில் புகாரி நன்றி கூறினார். பெரிய குத்பா பள்ளிவாசல் இமாம் எஸ்.கே.ஏ. நத்தர் சாஹிப் ஆலிம் துஆ உடன் மாநாடு நிறைவுபெற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|