மாவட்ட ஆட்சியரின் வாய்மொழி ஒப்புதல் அடிப்படையிலேயே மீன்பிடி இறங்குதளப் பணிகளைத் துவக்கியதாக, காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) மீன்பிடி இறங்குதளம் குறித்து “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்கு தமிழக அரசின் மீன்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது. . இதுகுறித்த செய்தியறிக்கை:-
மாவட்ட ஆட்சியரின் வாய்மொழி ஒப்புதல் அடிப்படையில் மீன்பிடி இறங்கு தளம் பணிகளை துவக்கினோம்: நடப்பது என்ன? குழுமத்திற்கு, மீன்வளத்துறை தகவல்!
காயல்பட்டினம் கடற்கரை பூங்காவிற்கு வடக்கே, கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) பகுதியில் - மீன்பிடி இறங்கு தளம், முறையான அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டுள்ளது. மேலும் - CRZ விதிமுறைகள்படி, தடை செய்யப்பட்டுள்ள பகுதியில் - கான்க்ரீட் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக, மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) சார்பாக - தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் (NATIONAL GREEN TRIBUNAL) தென்மண்டல கிளையில் (SOUTHERN ZONE) வழக்கு தொடரப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ளது. அடுத்த விசாரணை நவம்பர் 20 அன்று நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, இது சம்பந்தமாக சில மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட புகார் மனுவிற்கு - மீன்வளத்துறை சார்பாக, தற்போது - நடப்பது என்ன? குழுமத்திற்கு பதில் வழங்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறையின் பதிலின் மூலம், கீழ்க்காணும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
(1) முன்நுழைவு அனுமதி பெறப்படாமல், மாவட்ட ஆட்சியரின் வாய்மொழி அனுமதியின் அடிப்படையில் பணிகள் நடைபெற்றுள்ளன
(2) இது வரை CRZ அனுமதிக்காக விண்ணப்பம் செய்யவில்லை; அனுமதியும் பெறவில்லை
(3) பணிகள் நிறைவுற்றபின்பு தான் - செப்டம்பர் 15, 2017 அன்று - மாவட்ட ஆட்சியரால், முன்நுழைவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது
நிறைவுசெய்யப்பட்டுள்ள பணிகள், CRZ விதிமுறைப்படி அனுமதிக்கப்பட்டவை (PERMITTED ACTIVITY) என இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இது உண்மையல்ல.
உயர் அலை கோடு (HIGH TIDE LINE) - குறைந்த அலை கோடு (LOW TIDE LINE) பகுதிகளுக்கு இடையில் (INTER-TIDAL ZONE) சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் தான் - மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு (MEGA) அமைப்பு சார்பாக, தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதனை நினைவுபடுத்த விரும்புகிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[பதிவு: அக்டோபர் 17, 2017; 10:30 pm]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|